- அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிமுறையாக பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர முறை, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசமைப்புச் சட்டக்கூறு 19(1)(a) ஆகியவற்றைத் தேர்தல் பத்திர முறை மீறியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் நீதிமன்றம், நன்கொடைகள் தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிரவும் உத்தரவிட்டிருக்கிறது.
- 2017இல் பண மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2018இல் அமல்படுத்தப் பட்ட தேர்தல் பத்திர முறை, அரசியல் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை ஒழித்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்துவந்தனர். போலி நிறுவனங்கள் வழியாகத் தேர்தல் பத்திரத்தைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடக்கலாம் என்று ஆரம்பத்திலேயே ரிசர்வ் வங்கி எச்சரித்தது.
- இத்திட்டம் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று 2019இல் தேர்தல் ஆணையமும் விமர்சித்திருந்தது. எனினும், இது கறுப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்று மத்திய அரசு இப்போதும் வாதிடுகிறது; அந்த நோக்கத்துக்கு நேர் மாறாகத்தான் இந்தத் திட்டம் அமைந்திருந்தது என்பது தற்போது சட்டபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
- 2021-22ஆம் ஆண்டில், இந்தியாவின் ஏழு தேசியக் கட்சிகளுக்குக் கிடைத்த வருவாயில் 66% தேர்தல் பத்திரத்திலிருந்து கிடைத்ததாக ஏடிஆர் தொண்டு நிறுவனம் கண்டறிந்தது. இதில் ஆளுங்கட்சியான பாஜகதான் அதிகப் பங்கு வகிக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.16,518 கோடி சென்றிருக்கும் நிலையில், அதில் ரூ.15,631 கோடி நன்கொடை, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவை என்னும் தகவல், தனிநபர்களைவிடவும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இவ்விஷயத்தில் பிரதானப் பங்கு வகிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கிறது.
- அரசியல் கட்சிகள் தனிநபர்களிடமிருந்தோ நிறுவனங்களிடமிருந்தோ நிதியை நன்கொடையாகப் பெறுவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்; ஆனால், அதில் வெளிப்படைத்தன்மை அவசியம். ஒரு கட்சிக்கு - குறிப்பாக ஆளுங்கட்சி அல்லது தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள ஒரு கட்சிக்கு நன்கொடை வழங்கும் தனியார் நிறுவனங்கள், அதற்குப் பதிலாகப் பல ஆதாயங்களை எதிர்பார்க்கும்.
- அது அரசின் கொள்கை முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தனது தீர்ப்பில் இதைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
- இந்தத் தீர்ப்பின் மூலம், ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்), காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளும் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
- தேர்தல் சீர்திருத்தத்தில் இது முதல் படியாக இருக்கும் என்ற நம்பிக்கைக் குரல்களும் ஒலிக்கின்றன. மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்கள் குறித்த விவரங்களைப் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
- இதில் புற அழுத்தங்கள் நேர்வதை அனுமதிக்காமல் ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே இந்திய வாக்காளர்களின் எதிர்பார்ப்பு!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2024)