TNPSC Thervupettagam

தேர்தல் தடைபடக் கூடாது!

July 11 , 2024 184 days 160 0
  • பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையில் ஜம்மு- காஷ்மீரில் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. கடந்த திங்கள்கிழமை ஜம்முவின் கத்துவா நகரில் இருந்து 124 கி.மீ. தூரத்தில் உள்ள பெத்லூட்டா கிராமத்தில், ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் தாக்கப்பட்டதில், ஐந்து ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் தெற்கு காஷ்மீரில், 2016-ஆம் ஆண்டில் புர்ஹான்வாநி என்கிற ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கொல்லப்பட்ட ஜூலை 8-ஆம் தேதி நிகழ்ந்திருக்கிறது.
  • ஜம்மு-காஷ்மீரில் 48 மணி நேரத்தில் நிகழ்ந்திருக்கும் 4-ஆவது பயங்கரவாதத் தாக்குதல் இது. கடந்த சில மாதங்களாக, ஜம்மு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், பயங்கரவாதச் செயல்பாடுகள் ரஜௌரி பூஞ்ச் பகுதிக்கு இடம் மாறியிருப்பது தெரிய வருகிறது.
  • ஜூன் 9-இல் பயணிகள் பேருந்து தாக்கப்பட்டதில் ரியாசி மாவட்டத்தில் 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்ற தினத்தில், தாக்குதல் நடைபெற்றது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
  • புனிதப் பயணம் மேற்கொள்வோர் மீது தாக்குதல் நடைபெறுவது என்பது பயங்கரவாதிகளின் புதிய வழிமுறையாக மாறியுள்ளது. ஒருகாலத்தில் பயங்கரவாதிகளின் களமாக இருந்த ரஜௌரி பூஞ்ச் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அமைதி நிலவியது. 2003-இல் நடத்தப்பட்ட "ஆப்பரேஷன் சர்ப்விநாஸ்' நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது என்றால், உள்ளூர் மக்களான குஜ்ஜர் பேக்கர்வால் சமூகத்தினர் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்கியதும் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர உதவின.
  • தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றுவரும் தாக்குதல்களும், பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புகளும் கடந்து போகக் கூடியவை அல்ல. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதி நிலவும் நிலையில், பயங்கரவாதம் உள்நாட்டுக்குள் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களைக் கூற முடியும்.
  • பயங்கரவாதம் என்பது தண்ணீரைப்போல; எங்கே எல்லாம் தடைகள் இல்லையோ அந்தப் பகுதியை நோக்கி நகர்கிறது. 2020-இல் சீனாவுடனான கிழக்கு லடாக்கில் மோதல் ஏற்பட்டதையடுத்து, அதிகஅளவில் பாதுகாப்புப் படையினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு நகர்த்தப்பட்டனர். அதனால் உள்ளூர் புலனாய்வு குறைந்ததும் போதிய அளவில் பாதுகாப்புப் படையினர் குறைக்கப்பட்டிருப்பதும் பயங்கரவாதிகளுக்கு வசதியாகி இருக்கிறது.
  • அதுமட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பம் பயங்கரவாதிகளைப் புதிய தளங்களை நோக்கிச் செயல்பட வழிகோலுகிறது. போதுமான அளவு பாதுகாப்புப் படையினர் இல்லாததால், நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்ளூர் மக்களுக்குப்பாதுகாப்புப் படையினர் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • பல ஆண்டுகளாக காஷ்மீரில் பாகிஸ்தான் தனது கவனத்தைக் குவித்து, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது. 2019-இல் காஷ்மீரில் இயங்கிய பெரும்பாலான பயங்கரவாதக் குழுக்களை இந்தியப் பாதுகாப்புப் படைகள் அழித்துவிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முக்கியத்துவம் இழக்கத் தொடங்கியது. பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் இல்லாமல், குறைந்துவிட்டமை, வன்முறைகள், தெருவில் இறங்கிப் போராடுவது கூட குறைந்தது ஆகியவை காஷ்மீரில் பாகிஸ்தானின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.
  • கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக மிகப் பெரிய முதலீட்டை செய்திருக்கிறது பாகிஸ்தான். பிரிவினைவாதத்தைத் தூண்டுவதில் மெத்தனம் காட்டினால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லா தளங்களிலும் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது. இந்தியாவின் அபரிமிதப் பொருளாதார வளர்ச்சி, ஜம்மு- காஷ்மீர் ஒருங்கிணைவதை விரைவுபடுத்துகிறது. அதனால், பயங்கரவாதத்தின் வலிமை குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள பாகிஸ்தான் விழைகிறது.
  • புல்வாமா போன்ற பெரிய அளவிலான தாக்குதல்களை இப்போது நடத்த முடியவில்லை. சமீபத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் புனிதப் பயணிகள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு காஷ்மீரில் குல்காம் பகுதியில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த முடியாத நிலையில், பயங்கரவாதிகள் இப்போது ஆங்காங்கு சிறிய தாக்குதல்களை நடத்தி தாங்கள் இருப்பதை உணர்த்துகிறார்கள்.
  • தொடர்ந்து சிறிய தாக்குதல்கள் நடத்துவதன் மூலம் பெரிய தாக்குதல் ஏற்படுத்தும் தாக்கத்தை உருவாக்க முற்படுகின்றனர் பயங்கரவாதிகள். புல்வாமா போல் அல்லாமல் சிறிய தாக்குதல்கள் நடத்தும்போது, அதனை எதிர்கொள்வதற்கான பாதுகாப்புப் படையினர் போதுமான அளவில் எல்லா இடத்திலும் இருப்பதில்லை. பயங்கரவாதிகள் கையாளும் புதிய உத்தி இது.
  • பாதுகாப்பு வாகனங்கள் தனியாக பயணிப்பது, உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய குழுக்கள் இல்லாமல் இருப்பது ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும், "ஆப்பரேஷன் சர்ப்விநாஸ்' போல் கிராமங்களில் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதும் அவசியம்.
  • பாகிஸ்தானும் பயங்கரவாதிகளும் காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்காமல் தடுக்க விரும்புகின்றனர். அவர்களது எண்ணம் நிறைவேறக் கூடாது!

நன்றி: தினமணி (11 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்