- தேர்தல் பத்திரங்கள் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை வரவேற்றுள்ளன. மேலும் கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்று பாஜக கூறினாலும், இது ஊழலை வளர்க்கும் பாஜகவின் தந்திரம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
- தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை ஒழிக்குமா? அல்லது ஊழலை வளர்க்குமா? - தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் கம்பெனிகளிடம் இருந்து நிதி பெறவில்லையா? கட்சிகள் எவ்வாறு நன்கொடைகளைப் பெற்றன? கட்சிகளின் தேர்தல் செலவுகள் எவ்வாறு சமாளிக்கப்பட்டன?
- இன்றைக்கு நன்கொடை கொடுப்பவர்கள் யார் என்பது வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள். 2017-க்கு முன்பு அரசியல் கட்சிகள் எவ்வாறு எவரிடம் இருந்து நிதி பெற்றன என்பதைப் பற்றி என்றைக்காவது கேள்வி எழுப்பியுள்ளனரா? பொதுமக்களாகிய நாமாவது கேட்டிருக்கிறோமா? ஒரு சில கட்சிகளும் தனி நபர்கள் சிலர் மட்டும் கவலைப்பட்டு வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
- கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் பல ஆச்சரியமான விஷயங்கள் புலப்படுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், கம்பெனிகள் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தடை ஏதுமில்லை. கம்பெனியின் விதியில் அவ்வாறு நிதி வழங்க அனுமதி இருந்தால் மட்டுமே போதும். டாடா அயர்ன் & ஸ்டீல் நிறுவனம் (டிஸ்கோ), தன்னுடைய விதிகளில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்து, அதற்கு பங்குதாரர்களின் ஒப்புதலையும் பெற்றது. இதனை எதிர்த்து 1957-ல் ஜெயந்திலால் கோட்டீச்சா என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்.
- கம்பெனி விதிகளில் செய்யப்படுகின்ற மாற்றம், ஒரு நிறுவனம் மேலும் லாபகரமாகவும் திறம்படவும் செயல்பட மட்டுமே இருக்க வேண்டும். கட்சிகளுக்கு நன்கொடை வழங்க கொண்டு வந்த திருத்தம், எந்த விதத்திலும் செயல்பாட்டை மாற்றப் போவதில்லை. ஆகவே இந்தத் திருத்தம் செல்லாதென அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. இந்த வழக்கில் வாதி தரப்பில் கோகலேவும் டிஸ்கோ நிறுவனம் சார்பில் எச்.எம்.பீர்வையும் ஆஜரானார்கள்.
- முதலில் கம்பெனி தரப்பில், “தற்போதுள்ள ஆளும் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் நிறுவன வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது. இத்தகைய கொள்கைகள் தொடர வேண்டும் என்பதற்காக நன்கொடை கொடுக்கப்படுகிறது. அதனால் நிறுவனம் லாபகரமாக இயங்க முடியும்" என்று வாதிக்கப்பட்டது. பிறகு திருத்தம் செய்து பொருளாதார மற்றும் தொழிற்கொள்கைகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு அத்தகைய கொள்கைகளே தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்காக நன்கொடை வழங்கப்படுகிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதன்மூலம் நன்கொடைகள் மூலம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கைகள் மாற்றப்படுகின்றது என்ற குற்றச்சாட்டில் இருந்து விலக முற்பட்டது.
- கம்பெனியின் வாதத்தை ஏற்ற நீதிபதி எம்.சி.சாக்லா, ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்தார். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய விவரத்தை ஆண்டுதோறும் 2 செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. ஏனென்றால் பங்குதாரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் கட்சிகளுக்கு நிதி வரும் வழிகளை அறிய வேண்டும் என்பது முக்கியம் என்று தீர்ப்பில் நீதிபதி கூறினார். அதேநேரத்தில் நன்கொடை வழங்கலாம் என்று ஏற்கெனவே விதிகள் இருக்கும் கம்பெனிகளுக்கு இந்த விளம்பரம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனை பொருந்தாது.
- தாங்கள் வாக்களிக்கப் போகின்ற கட்சியைப் பற்றிய முழுமையான தகவல் குடிமக்களுக்குத் தெரியாத வரைக்கும் மக்களாட்சி சரியாகச் செயல்பட முடியாது. சட்டப்பிரிவு 293 இதனை முழுமையாகத் தீர்க்க இயலாது. எனவே, நாடாளுமன்றம் இதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம். இந்த விஷயம் அரசியல்வாதிகளின் அதன்பிறகு கவனத்தைப் பெறவில்லை.
- 1969-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அரசியல் கட்சிகளுக்கு கம்பெனிகள் நன்கொடை கொடுப்பதை முற்றிலுமாகத் தடை செய்தார். இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டுள்ள தாராளமயப் பொருளாதாரத்தை அன்றைக்கே ஸ்வதிந்திரா போன்ற கட்சிகள் முன்வைத்தன. எல்லாவற்றுக்கும் லைஸென்ஸ், கோட்டா என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த கால கட்டத்தில் இதுபோன்ற தாராளமயம், பொருளாதார சீர்திருத்தங்கள் என்பது நிச்சயமாகக் கம்பெனிகளை ஈர்க்கும். அதனால் அவர்களது நன்கொடைகள் எதிர்க்கட்சிகளுக்கு போய் சேரும் என்பதாலேயே இத்தடையைக் கொண்டு வந்தார்.
- ஆனால், தடை அமலுக்கு வந்த பிறகு நடைபெற்றவைதான் சுவாரஸ்யமானவை. அந்தக் கால கட்டத்தில்தான் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்படுகின்றன. ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள், காப்பீடு நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் என தொடர்ந்து எல்லாம் அரசுடைமை ஆக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் இறுகுகின்றன. எந்த ஒரு நிறுவனமும் அரசாங்கத்தின், அதாவது ஆளும் கட்சியின் ஆதரவில்லாமல் இயங்க முடியாது என்ற நிலை உருவாகின்றது.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2024)