- 2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்துள்ள மனுவின் மீது நாளை மார்ச் 11, திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவிருக்கிறது.
- மனு விசாரணைக்கு வரும் நாளிலேயே, தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
- இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவுள்ளது.
- தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, மார்ச் 4 ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி மனு தாக்கல் செய்துள்ளது.
- கடந்த பிப். 15 ஆம் தேதி அளித்த வரலாற்றுப் புகழ் பெற்ற தீர்ப்பில், வங்கி மூலம் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்கள் முழு விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும் என்றும் அவற்றை மார்ச் 13 ஆம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காகத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
- இதன் மூலம் இந்த நன்கொடைத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் பயனடைந்த அரசியல் கட்சிகள், அவற்றுக்கு நன்கொடை அளித்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் (இதுவரை ரகசியம் எனப் பாதுகாக்கப்பட்டவை) மக்களுக்குத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
- பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கை ஏற்கப்பட்டால், யார், யாருக்கு நன்கொடைகள் வழங்கினார்கள், யார் பெற்றார்கள் என்ற விவரம் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் வெளித் தெரிய வராமலேயே போய்விடும் ஆபத்து இருக்கிறது.
- இவ்விஷயத்தில் சட்ட விரோதமாக, வேண்டுமென்றே, அப்பட்டமாக நீதிமன்றத்தின் ஆணையை மீறும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி நடந்துகொண்டிருப்பதாகத் தனது மனுவில் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மிக எளிதில் கிடைக்கக்கூடிய வகையில், வங்கியிடம் இருக்கும் தகவல்களைத் தர மறுத்து, நீதிமன்றம் கூறியபடி நடந்துகொள்ள மறுப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
- இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கியின் இந்த முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியின் “சட்டவிரோத நடவடிக்கைகளை” மறைக்க பாரத ஸ்டேட் வங்கி முயலுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
- “கறுப்புப் பண மாற்றத் திட்டமான” தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வழியாக நடந்த தன்னுடைய சந்தேகத்துக்கிடமான பரிமாற்றங்களை மூடிமறைப்பதற்கான கேடயமாக நாட்டின் மிகப் பெரிய வங்கியை மோடி அரசு பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
- தேர்தல் பத்திரங்கள்: உச்ச நீதிமன்றம் நாளை என்ன முடிவு செய்யப் போகிறது?
- தேர்தல் பத்திரங்கள்: சட்டங்களில் பா.ஜ.க. அரசு செய்த திருத்தங்களும் வெளிப்படும் தகவல்களும்!
- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான நன்கொடையாளர் தரவுகளை 24 மணி நேரத்திலேயே திரட்டிவிட முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கும் நிலையில், பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் இந்தத் தகவல்களைத் திரட்ட எதற்காக மேலும் 4 மாதங்கள் தேவைப்படுகின்றன? என்றும்கூட வினா எழுப்பினார் கார்கே.
- ஆனால், எத்தனையோ பொதுக்கூட்டங்களில் பேசியபோதிலும், தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பாக இதுவரையிலும் பிரதமர் நரேந்திர மோடி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
- 23 ஆயிரம் கிளைகள் மூலம், 66 ஆயிரம் ஏடிஎம்களையும் 48 கோடி கணக்குகளையும் பராமரிக்கிற ஒரு வங்கிக்குத் தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களைத் தருவதற்கு மட்டும் எதற்காக இத்தனை மாதங்கள் தேவைப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸின் சமூகவலைத்தளப் பிரிவைச் சேர்ந்த சுப்ரியா ஸ்ரீனேத்.
- இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பக்கங்களையெல்லாமும்கூட – நன்கொடையாளர்களுக்கான செயல் வழிகாட்டு முறைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்றவற்றை - தன் இணைய தளத்திலிருந்து அகற்றிவிட்டிருக்கிறது பாரத ஸ்டேட் வங்கி.
- வழிகாட்டு நெறிமுறைகளில்தான் யார் வாங்கலாம், என்னென்ன மதிப்பில் பத்திரங்கள் கிடைக்கின்றன, வாங்குவதற்குத் தேவையான ஆவணங்கள் யாவை? எவ்வாறு வாங்குவது? வாங்குவதற்காகப் பட்டியலிடப்பட்ட வங்கிக் கிளைகள் யாவை? என்பன போன்ற அடிப்படையான தகவல்கள் இருந்தன. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் தேவையான கேஒய்சி தேவைகள் பற்றிய விவரங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன.
- இதுவரையிலும் மொத்தம், ரூ. 16 ஆயிரத்து 518 கோடி பெறுமதியுள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்றிருக்கிறது. அதாவது, இவ்வளவு பெரிய தொகையும் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ‘ரகசிய’ நன்கொடைகளான ‘யார் யாராலோ’ வழங்கப்பட்டிருக்கிறது. யார் யார் என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள் என்றுதான் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
- தேர்தல் பத்திரங்கள்: உச்ச நீதிமன்றம் நாளை என்ன முடிவு செய்யப் போகிறது?
- தோ்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து: விவரங்களை வெளியிட கெடு; உச்சநீதிமன்றம் தீா்ப்பு
- மாதக்கணக்கில் கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முக்கியமான தரவுகளை மத்திய அரசுக்கும் நிதித் துறை அமைச்சகத்துக்கும், சில தருணங்களில், 48 மணி நேரத்துக்குள்ளேயே வழங்கியிருப்பதாகத் தெரிகிறது என்று த ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு முறை பத்திர விற்பனை நடைபெறும்போது விற்பனை தொடர்பான இதுபோன்ற விவரங்கள் நிதித் துறை அமைச்சகத்துக்கு உடனுக்குடன் பகிரப்பட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- அறிமுகப்படுத்தப்பட்ட காலந் தொடங்கி, 30 கட்டங்களில் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 29 பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் 19 கிளைகள் மட்டும்தான் தேர்தல் பத்திரங்களை விற்றிருக்கின்றன. இவற்றிலும் 14 வங்கிக் கிளைகளில்தான் இந்தப் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. 2024 ஜனவரி நிலவரப்படி 25 அரசியல் கட்சிகள் மட்டுமே பண மாற்றத்துக்காக வங்கிகளில் கணக்குத் தொடங்கியிருக்கின்றன.
- 2019 ஏப்ரல் 12 முதல் 2024 பிப். 15 வரையிலான காலகட்டத்தில் 22 ஆயிரத்து 217 பத்திரங்கள் மூலமாக நன்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் வங்கியின் மும்பை கிளையில் முத்திரையிடப்பட்ட உறைகளில் இருப்பதாக உச்ச நீதமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் பாரத ஸ்டேட் வங்கியே தெரிவித்துள்ள நிலையில், உடனடியாக அந்த விவரங்களை வெளியிடுவதில் வங்கி நிர்வாகத்துக்கு என்ன பிரச்சினை? எதற்காக 4 மாதங்கள் தேவைப்படுகின்றன?
- இந்த நிலைமையில், சிலபல தட்டல்களிலேயே முழுத் தகவல்களையும் பெற முடியும் என்ற சூழலில், எதற்காக பாரத ஸ்டேட் வங்கி மேலும் இத்தனை மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கிறது என்பது பற்றிதான் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
- உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலவரையறையில் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை வாங்கியது யார், யார்? வழங்கப்பட்டது யார், யாருக்கெல்லாம்? என்பனவெல்லாம் வெளியிடப்படும்பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் இதுவும் எதிரொலிப்பதற்கான எல்லாவித வாய்ப்புகளும் இருக்கின்றன.
- இதன் வழி என்ன பயன்களை யார் யார், யார் யாரிடமிருந்து பெற்றிருக்கக் கூடும் என்பதெல்லாமும் பேசுபொருளாக - தேர்தல் பிரச்சினையாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன.
- உடனடியாகக் கணக்குகளைத் தர பாரத ஸ்டேட் வங்கி மறுக்குமானால் சுயேச்சையான அமைப்புகளின் உதவியைப் பெற்று, தரவுகளைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தால் இவ்வாறு பெறவும் முடியும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
- நாட்டின் மிகவுயர் நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, காலம் அவகாசம் கேட்கிற நிலையும் துணிவும் எவ்வாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உருவானது? இதற்குப் பின்னணி என்ன?
- இதே தகவல்களை வேறு ஏதோவோர் அவசர காரணத்துக்காக இந்திய ரிசர்வ் வங்கியோ, வருமான வரித் துறையோ, நிதித் துறை அமைச்சகமோ எழுப்பினால் தரவுகளைத் தர 4 மாத அவகாசத்தை வங்கியால் கேட்க முடியுமா? அல்லது இவ்வளவு கால அவகாசம் தரப்படுமா என்ன? என்பதெல்லாமும் இவர்கள் கேள்விகள். இவ்வளவு கால அவகாசத்துக்குப் பிறகு வழங்கப்படும் தரவுகளால் - தகவல்களால் உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் குலைந்துபோகாதா?
- இந்திய ஜனநாயகத்தின், அரசியல் கட்சிகளின் செயல்படு தன்மை பற்றி வெளிப்படுத்தக் கூடிய - உலகம் முழுவதும் மிக உன்னிப்பாக எதிர்பார்க்கப்படுகிற இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்பில்தான், நீதித் துறையின் நம்பகத் தன்மையும் பாரபட்சமின்மையும் நீதிவழுவா நெறிமுறையும் உறுதிப்படும் எனக் கருதுகிறார்கள் மக்கள்.
- பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடு அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் தார்மிக நெறிகளுக்குப் புறம்பானது என்று குற்றம் சாட்டுவதுடன், இவ்விஷயத்தில் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர் அரசியல் – சமூக செயற்பாட்டாளர்கள்.
நன்றி: தினமணி (10 – 03 – 2024)