TNPSC Thervupettagam

தேர்தல் பிரச்சாரத்தில் மதம்: சட்டம் சொல்வது என்ன

April 10 , 2024 85 days 168 0
  • தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் அளிப்பது உண்டு. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாகத் தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் புகார் அளித்திருந்தது.
  • எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமான திராவிட முன்னேற்றக் கழகம், அதே பிரச்சினை சார்ந்து பிரச்சாரத்தின்போது மத உணர்வுகளைத் தூண்டியதாகப் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப் புகார் அளித்தது. இப்படியான புகார்கள் எந்த அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன?
  • விதிமுறைகள் சொல்வது என்ன? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (ஆர்.பி. சட்டம்) பிரிவு 123 (3)இன்படி ஒரு வேட்பாளரோ ஒரு வேட்பாளரின் ஒப்புதலுடன் வேறு எந்த நபரோ, அவரது மதம், இனம், சாதி, சமூகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவது ஒரு தேர்தல் முறைகேடு ஆகும்.
  • பிரிவு 123 (3ஏ)இன்படி தேர்தலின்போது குடிமக்களிடையே பகை அல்லது வெறுப்பு உணர்வைத் தூண்ட ஒரு வேட்பாளர் செய்யும் எந்தவொரு முயற்சியும் இதேபோல் தேர்தல் முறைகேடாகவே கருதப்படுகிறது. மேலும் ஆர்.பி. சட்ட விதிகளின் மூலம் தேர்தல் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட எவரும் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட சாத்தியமுள்ளது.
  • அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் மற்றும் நடத்தை விதிகள் (எம்சிசி - Model Code of Conduct) அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் உருவாகப்பட்ட விதிமுறைகளின் தொகுப்பாகும். இந்த விதிகளுக்குக் கட்டுப்பட அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் ஒப்புக்கொண்டே போட்டியிடுகின்றனர். 1990களில் இந்த நடத்தை விதிகள் கண்டிப்புடன் செயல்படுத்தப்பட்டன.
  • எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ சமூகத்தில் உள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை உருவாக்குகின்ற அல்லது வெவ்வேறு சாதிகள், மத அல்லது மொழியியல் பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அந்த விதிமுறைகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன.
  • வாக்குகளைப் பெறுவதற்காகச் சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டக் கூடாது என்றும் மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்கான தளங்களாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த விதிமுறைகள் அறிவுறுத்துகின்றன. இந்த விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்திவருவதன் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் எம்சிசி பலம்பெற்றுள்ளது.
  • முக்கியத் தருணங்கள்: 1961-க்கு முன்னர், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் 123(3) பிரிவு, மதம், இனம், சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் அமையும் ஒரு வேட்பாளரின் ‘தொடர்’ பிரச்சாரம், ஒரு தேர்தல் முறைகேடாகக் கருதப்படும் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
  • இருப்பினும் வகுப்புவாத, பிளவுவாத, பிரிவினைவாதப் போக்குகளைத் தடுப்பதற்காக, 1961இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் ‘தொடர்’ என்ற சொல் அந்தச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், ஒருவரின் மதம் அல்லது குறுகிய வகுப்புவாதம் சார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான தவறான ஒரே ஒரு முறையீடுகூட சட்டத்தால் தண்டிக்கப்படும் என்பதே.
  • கடந்த காலத்தில் பல்வேறு கட்சிகளும் அதன் தலைவர்களும் மதத்தின் பெயரில் வாக்குகளுக்காக அப்பட்டமாக வேண்டுகோள் விடுத்த எண்ணற்ற நிகழ்வுகள் உள்ளன. ஆர்.பி. சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் உண்டு. இருப்பினும், இந்தத் தேர்தல் முறைகேடு சார்ந்த நடைமுறைக்காக உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்ட ஒரே குறிப்பிடத்தக்க தலைவர் சிவசேனையின் பால் தாக்கரே.
  • 1987இல் நடைபெற்ற தேர்தலில் சிவசேனையின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் யஷ்வந்த் பிரபுவுக்கு ஆதரவாக, மத அடிப்படையில் பால் தாக்கரே பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 1995இல் வழங்கிய தீர்ப்பு அது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இரண்டு, மூன்று நாள்கள் பிரச்சாரம் செய்வதிலிருந்து தலைவர்களைத் தடை செய்வதே அதிகபட்ச நடவடிக்கையாக இருக்கிறது.
  • ‘அபிராம் சிங் எதிர் சி.டி.கொமாச்சென் (2017)’ வழக்கில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் (4:3), வேட்பாளர்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் வாக்காளர்களின் மதத்தின் அடிப்படையிலும் வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.
  • இதன் மூலம், வாக்காளர்களின் மதத்தின் பெயரில் எந்தவொரு பிரச்சாரம் நடைபெற்றாலும் அது தேர்தல் முறைகேடு என்றே கருதப்படும் சூழல் உருவாகிவிட்டது. நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மதச்சார்பற்றவை. நமது அரசமைப்பு நெறிமுறைகள் அரசின் மதச்சார்பற்ற செயல்பாடுகளுடன் மதக் கருத்துகளைக் கலப்பதைத் தடைசெய்கின்றன. மேலும், மதம் என்பது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தே இருக்க வேண்டும்.
  • ஒரு ஜனநாயகத் தேர்தல் செயல்பாட்டில் மதம், சாதி, சமூகம் அல்லது மொழி சார்ந்த பண்புகளின் அடிப்படையில் குடிமக்கள் எதிர்கொள்ளும் நியாயமான கவலைகளை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் எழுப்ப வாய்ப்புள்ளது. இருப்பினும், நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும் சகோதரத்துவத்தையும் பாதிக்காமல் பொருத்தமான தலையீடுகள், கொள்கைகள் மூலம் மட்டுமே இந்தக் குறைகளை அவர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். மதத்தின் பெயரில் நடைபெறும் எந்தவொரு தலையீடும் நமது பன்முகத்தன்மை வாய்ந்த மதங்களைக் கொண்ட சமூகத்தில் மேலும் பிரிவினைக்கே வழிவகுக்கும்.
  • வழிபாட்டுத் தலங்கள் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஒரு மன்றமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மதத் தலைவர்கள் ஆதரவு வழங்குகின்றனர். அரசியலும் மதமும் கலக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனில், இந்த நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த வகையில் முதன்மையான பொறுப்பு அரசியல் கட்சித் தலைவர்களிடமும் வேட்பாளர்களிடமும்தான் உள்ளது.
  • ஏனென்றால், மதத்தின் அடிப்படையிலான அவர்களுடைய பிரச்சாரங்கள் நமது மதச்சார்பற்ற அரசமைப்புக் கட்டமைப்பின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை; அப்படிச் செய்வது தெளிவான சட்ட மீறலும்கூட. இப்படிச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் வகுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்