TNPSC Thervupettagam

தேர்தல் முடிவை ஒட்டி பங்குச் சந்தையில் ஊழல்?

June 23 , 2024 8 days 28 0
  • மக்களவை பொதுத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்குக் கணிப்புகள் வெளியானவுடன் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் சரசரவென உயர்ந்தன, பிறகு ஜூன் 4இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் வேகமாக சரிந்தன. நிஃப்டி, சென்செக்ஸ் இரண்டும் இந்த மாற்றங்களால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீண்டும்விட்டன.
  • சிலவகை முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்குச் சந்தையை இப்படி வளைத்தனர் என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) மூலம் விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையும் வெளியிட்டார். புதிய மக்களவை அமைக்கப்பட்டு அவை கூடிய பிறகு இந்த கோரிக்கை அழுத்தமாக வலியுறுத்தப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில் இந்தக் குற்றச்சாட்டு சரிதானா என்று ஆராய்வோம்.

சர்ச்சை எதனால்?

  • பாஜகவுக்கு அமோக தனிப் பெரும்பான்மையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் அதிக இடங்களும் கிடைப்பது உறுதி என்று கிட்டத்தட்ட எல்லா வாக்குக் கணிப்பு முடிவுகளும் அறிவித்தன. இதையடுத்து ஜூன் 3இல் பங்கு வர்த்தகத்தில் (நிஃப்டி 3.2%, சென்செக்ஸ் 3.4%) பங்குகளின் மதிப்புயர்ந்து விலை கோடிக்கணக்கில் எகிறின.
  • பாஜக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்ற தகவலால் அரசுக்கு மிகவும் நெருங்கிய தொழிலதிபரான கௌதம் அதானியின் நிறுவனப் பங்குகளும், மோடியின் திட்டங்களால் வளர்ச்சி அடையக்கூடும் என்று எதிர்பார்த்த அரசுத் துறை நிறுவனப் பங்குகளும் இப்படி ஒரேயடியாக அதிகரித்தன. ஆனால், அடுத்த நாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானத் தொடங்கியதும், பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்காது என்ற தகவலால் பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பில் 6% சரிவு ஏற்பட்டது.
  • கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 2020இல் ஏற்பட்டதைவிட, ஒரே நாளில் சந்தை படுமோசமாக வீழ்ந்தது அன்றைக்குத்தான். இதனால் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ரூ.30 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
  • ‘பாஜக அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதால் பங்குகளின் மதிப்பு மேலும் உயரும், எனவே இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஜூன் 4க்கு முன்னால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பேசினார்கள்.

குற்றச்சாட்டு என்ன?

  • சில அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் கிடைப்பதற்காக, பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு சில்லறை முதலீட்டாளர்களை மோடியும் அமித் ஷாவும் வேண்டுமென்றே தூண்டிவிட்டார்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதற்கு ஆதரவாக, பங்குச் சந்தை தரவுகளை காங்கிரஸ் கட்சியின் தரவுகள் துறைத் தலைவர் பிரவீண் சக்ரவர்த்தி முன்வைத்துள்ளார்.
  • மே 31ஆம் நாள் ரொக்கம் கொடுத்து பங்குகளை வாங்குவது வழக்கத்தைவிட இரட்டிப்பானதாகவும், மே 30இல் ரூ.1.1 லட்சம் கோடிக்கு பங்குகள் வாங்கப்பட்டதாகவும் மே 31இல் ரூ.2.3 லட்சம் கோடிக்கு பங்குகள் வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். மே 31இல் பங்குகளை வாங்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள்’ என்றும், மே 31க்கு முன்னால் அவர்கள் பங்குகளை அதிகம் விற்பவர்களாகத்தான் இருந்துள்ளனர் என்றும் கூறுகிறார்.
  • அப்படிப்பட்டவர்கள் மோடி, ஷா பேச்சுக்குப் பிறகு பங்குகளை வாங்கிக் குவித்தனர் என்கிறார். இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையின் முக்கியப் புள்ளிகளிடமிருந்து உள் ரகசியங்கள் தெரிவிக்கப்பட்டன என்றும் குற்றஞ்சாட்டுகிறார்.
  • அடுத்த திங்களன்று இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை சில்லறை முதலீட்டாளர்களுக்கு விற்று லாபம் ஈட்டினர், இவர்கள் பங்குச் சந்தைக்குத் தாமதமாக வந்தனர் என்பதுடன் அடுத்த நாள் செவ்வாய்க் கிழமை கடுமையாக நஷ்டத்தையும் சந்தித்தனர் என்கிறார். எனவே இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது காங்கிரஸ்.

சந்தை நெறியாளர் கூறுவது என்ன?

  • இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தில் (செபி), மோசடி மற்றும் முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளைத் தடுப்பதற்கென்றே இருக்கும் ‘எஃப்யுடிபி’ பிரிவு நெறியாளர் இது தொடர்பாகக் கூறுவது கவனிக்கத்தக்கது.
  • பங்குகளை வாங்கவோ – விற்கவோ முதலீட்டாளர்களைத் தூண்டும் வகையில் வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தெரிவிப்பது அல்லது பரப்புவது சட்ட விரோதம்; ஆனால் தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையப்போகிறது, பங்குகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் லாபம் கிடைக்கும் என்று பொதுவெளியில் பலரும் அறியச் சொல்வது உற்சாகப்படுத்தத்தானே தவிர, குறிப்பிட்ட நிறுவனமோ முதலீட்டாளர்களோ லாபம் அடைவதற்காக அல்ல.
  • இந்தத் தகவல் ஊடகங்கள் வழியாக அனைவரையும் அடைந்திருக்கிறது. இது வழக்கமான பங்குச் சந்தை நடவடிக்கை அல்ல, விதி விலக்காக நிகழ்ந்திருப்பது. மோடியோ அமித் ஷாவோ சில நிறுவனங்களுடன் ரகசியமாக பேசி வைத்துக்கொண்டு பிறகு அவர்கள் லாபம் அடைய இப்படிச் செய்தனர் என்று கூற முடியாது என்பதால், இதில் சதியோ ஊழலோ இல்லை என்று நெறியாளர் கூறுகிறார்.

அரசுத் தரப்பு விளக்கம் என்ன?

  • எதிர்க்கட்சிகளின் இந்தப் புகார்களுக்கு தொழில் - வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்திருக்கிறார். “உண்மையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கியிருக்கிறார்கள், பிறகு விலையைக் குறைத்து விற்றிருக்கிறார்கள், விலை அதிகமானபோது விற்ற இந்திய முதலீட்டாளர்கள், அதே பங்குகள் விலை சரிந்தபோது வாங்கிக்கொண்டார்கள்; இப்படி இருவிதங்களிலும் லாபம் அடைந்திருக்கிறார்கள்” என்று விளக்கியிருக்கிறார். தேசிய பங்குச் சந்தை தரவுகளும் அவர் கூறுவதற்கேற்ப இருக்கின்றன.
  • மே 31, ஜூன் 3இல் ‘சில்லறை முதலீட்டாளர்கள்’ பங்குகளை அதிகம் விற்றுள்ளனர், அதே பங்குகள் ஜூன் 4இல் சரிந்தபோது அதிகம் வாங்கியுமுள்ளனர். அவர்கள் வாங்கிய பங்குகளின் மதிப்பு ரூ.21,179 கோடி. வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள் மே 31, ஜூன் 3இல் பங்குச் சந்தையில் மதிப்பு உயர்ந்தபோது வாங்கியுள்ளனர், பங்குச் சந்தை வீழ்ந்தபோது தங்களிடமிருந்த பங்குகளை விற்றுள்ளனர்.
  • ஆனால், சந்தை வட்டாரங்கள் இதில் உள்ள நுட்பமான ஒரு வேறுபாட்டைத் தெரிவிக்கின்றன. ‘சில்லறை முதலீட்டாளர்கள்’ என்றால், எல்லோருமே தனிநபர் முதலீட்டாளர்கள் அல்ல. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், பாகப்பிரிவினையாகாத இந்து கூட்டுக் குடும்பங்கள் தனிநபர் பெயரில் அல்லது சிலர் சேர்ந்து நடத்தும் தொழில் நிறுவனங்கள், பாகஸ்தர்களைக் கொண்ட கூட்டு நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பாகஸ்தர்களுடன் கூடிய நிறுவனங்கள் ஆகியவையும் உண்டு. இவர்கள்தான் ரூ.21,000 கோடி மதிப்புக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
  • மேலும் மே 31இல் ரூ.96,155 கோடி மதிப்புக்கு பங்குகளை வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அதே நாளில் ரூ.93,977 கோடி மதிப்புக்கு பங்குகளை விற்கவும் செய்தனர். மே 31இல் பங்குகளின் விலை மதிப்பு அதிகமானபோது அன்னிய முதலீட்டாளர்கள் நிகரமாக வாங்கியது அதிகமில்லை. எனவே, அன்றைய தினம் ‘விஷமம்’ எதுவும் நடக்கவில்லை என்று உறுதியாக சொல்ல முடியாது என்று அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • பங்குச் சந்தையில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, பங்குச் சந்தை வட்டாரங்கள் அளித்த தகவல்களால் அன்னிய முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தார்களா, இழப்பைக் குறைத்துக்கொண்டார்களா என்பதையெல்லாம் சொல்ல முடியாது. பங்குச் சந்தை காலை முதல் ஏற்றத்திலிருந்து, பிறகு இறங்கியதால் எந்த நேரத்தில் யார் எவ்வளவு வாங்கினார்கள், விற்றார்கள் என்பதைச் சொல்வதும் எளிதல்ல. மிகவும் விரிவான விசாரணை நடந்தால்தான் இதில் லாபம் அடைந்தவர்கள் யார் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

நன்றி: அருஞ்சொல் (23 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்