- மத்திய அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் போலியான கல்விச் சான்றிதழ்களைக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் படித்ததாகப் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்திருப்பது அரசுப் பணி நியமனங்கள், அதற்கான போட்டித் தேர்வுகள் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
- மருத்துவக் கல்விக்கான நீட் தொடங்கி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான க்யூட் தேர்வு வரையில் அனைத்துப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான தேர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தகைய தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
- கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர், மதிப்பெண், அவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்ற பொதுவான விவரங்களை வெளியிடும் முறையே பின்பற்றப்படுகிறது.
- அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கல்வித் தகுதிக்கான சான்று, இடஒதுக்கீட்டுச் சலுகைகளுக்கான சான்று ஆகியவை சரிபார்க்கப்படுகின்றன என்றாலும் பொதுவெளியில் அவை பகிரப்படுவதில்லை. இத்தகைய தேர்வு முறையானது எங்கேனும் மோசடி நடந்து அதைக் கண்டுகொள்ளத் தேர்வு வாரியங்களோ பணியாளர் தேர்வாணையங்களோ தவறும் சூழலில், குற்றவாளிகளுக்கு நிரந்தரப் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது.
- உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் தவிர்க்கவியலாதவை என்று சூழல் உருவாகியிருக்கும் நிலையில், ஒவ்வொரு தேர்விலும் கலந்துகொள்ளும் அனைவரது சான்றிதழ்களின் எண், தேதி, அச்சான்றிதழை அளித்த நிறுவனம், ஒப்பமிட்ட அதிகாரி என அனைத்து விவரங்களையும் பொதுவில் யாரும் சரிபார்த்துக்கொள்ளலாம் என்ற சூழலை உருவாக்குவதே தேர்வுகளின் வெளிப்படையை உறுதிசெய்வதற்கான வழி. இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் இது எளிதானதும்கூட.
- லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கும் தேர்வுகளில்கூட ஒவ்வொருவரது விண்ணப்பத்தையும் அதனுடன் தொடர்புடைய சான்றிதழ்களையும் உள்ளடக்கிய அனைத்துத் தரவுகளையும் சேமிப்பதும் இணையத்தில் அவற்றைப் பகிர்வதும் எளிதானது. இனிவரும் காலத்தில், அத்தகைய பொதுவெளி தரவுப் பகிர்வுகளுக்கான தேவை உருவாகும் என்றே தோன்றுகிறது.
- மத்திய அரசு மற்றும் அதன் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மாநில அரசு நடத்தும் தேர்வுகளுக்கும்கூட இது பொருந்தும். மாநில அரசின் துறைசார்ந்த பணிநியமனங்களுக்குப் பொது அறிவிக்கைகளை வெளியிடுவது ஒரு விதிமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்றபோதும் விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர், அவர்களின் கல்வி மற்றும் தொழில்திறன் விவரங்கள், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களில் உள்ள அடிப்படை விவரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டே ஆக வேண்டும்.
- தற்போதுள்ள தேர்வு நடைமுறையில், விண்ணப்பித்தவர் அவரது முடிவு விவரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. தேர்வில் பங்கேற்ற அத்தனை பேரும் தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்த அத்தனை பேரின் மதிப்பெண், சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பார்க்க வழிவகுப்பதே உண்மையான வெளிப்படைத்தன்மை.
நன்றி: தி இந்து (17 – 04 – 2022)