TNPSC Thervupettagam

தேவை உதவி, தடையல்ல!

June 26 , 2021 1132 days 500 0
  • இந்தியாவில் கொள்ளை நோய்த்தொற்று கட்டுக்குள் வராமல் போனால், உலகில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி ஏற்படவே ஏற்படாது என்பதை உலக நாடுகள் உணா்ந்தே இருக்கின்றன.
  • அமெரிக்காவிலிருந்து மட்டும் 1.4 பில்லியன் டாலா் மதிப்புள்ள மருத்துவப் பொருள்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
  • ஒருபுறம் உலகெங்கும் உள்ள மனிதாபிமானமிக்க தனவந்தா்களும், சேவை நிறுவனங்களும் உதவி செய்யத் தயாராக இருந்தாலும்கூட, அந்த உதவியைப் பெறுவதில் சில தடைகளும், சிக்கல்களும் இருப்பது இந்த இக்கட்டான நேரத்தில் மிகப் பெரிய சோதனையாக இருந்து வருகிறது.
  • கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வெளிநாட்டு உதவிகளும், நன்கொடைகளும் பெறுவது தொடா்பாக நரேந்திர மோடி அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.
  • மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவிலுள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுவதற்காகவும், பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்காகவும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் உதவி பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் அரசின் சட்டத்திருத்திற்குக் காரணம்.
  • அந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக பல சா்வதேச நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியுதவியையும் பொருளுதவியையும் நிறுத்தியிருக்கின்றன.
  • வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்று சட்டம் (ஃபெரா) 1976 - அன்றைய இந்திரா காந்தி அரசால் முதலில் கொண்டுவரப்பட்டது.
  • காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மதபோதகா்களின் உதவியுடன் பிரிவினை சக்திகளுக்கு அந்நிய நிதியுதவி வழங்கப்பட்டதுதான் இந்திரா காந்தி அரசின் அந்த முடிவுக்குக் காரணம்.
  • இந்தியாவில் சேவை நிறுவனங்கள் என்கிற பெயரில் வெளிநாட்டு நன்கொடைகள் வாங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து, பட்டியலிட்டு, கண்காணிப்பதுதான் ஃபெரா கொண்டு வந்ததன் மிக முக்கியமான நோக்கம்.
  • அதற்குப் பிறகு அமைந்த பல்வேறு ஆட்சிகளிலும் வெளிநாட்டு நன்கொடைகள், வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றைக் கண்காணிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது.
  • 2010-இல் அன்றைய மன்மோகன் சிங் அரசு, அந்நிய முதலீடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, ஃபெரா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.
  • 2015-இல் நரேந்திர மோடி அரசு தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ‘ஃபோர்ட் பவுண்டேஷன்’ உள்ளிட்ட பல அறக்கட்டளைகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியது.
  • கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு ‘அம்னஸ்டி இன்டா்நேஷனல்’ உள்ளிட்ட சேவை நிறுவனங்களில் சோதனை நடத்தி வெளிநாட்டு நன்கொடைகளில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கியது.
  • அதைத் தொடா்ந்து கடுமையாக்கப்பட்ட சட்டத்தின் காரணமாக பல வெளிநாட்டு சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு நன்கொடைகள் வழங்குவதை நிறுத்தின.

வெளிநாட்டு உதவிகள்

  • இப்போதைய நிலையில், வெளிநாட்டு நிதியோ உதவியோ பெறுவதற்கு தில்லியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இருப்பது அவசியம்.
  • அது மட்டுமல்லாமல், நேரிடையாக உதவி பெற முடியுமே தவிர, உதவி பெற்ற சேவை நிறுவனத்திடமிருந்து உதவி பெறுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
  • வெளிநாட்டிலிருந்து பெறும் நிதியுதவி, அரசின் கண்காணிப்பில் வராத வேறு சேவை நிறுவனங்களின் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதுதான் அரசின் முடிவுக்குக் காரணம்.
  • இன்றைய கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அந்த சட்டத்திருத்தம் வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் நிதியுதவிகளை பெற முடியாமல் சில சிக்கல்களை எழுப்பியிருக்கிறது.
  • ‘அமெரிக்கன் இந்தியா பவுன்டேஷன்’ என்பது இந்தியாவில் செயல்படும் வணிக நோக்கமில்லாத அமெரிக்க சேவை நிறுவனம். அந்த நிறுவனம் கொவைட் 19 நிவாரணப் பணிகளுக்காக 23 மில்லியன் டாலா் நிதியுதவி திரட்டியிருக்கிறது.
  • ஆனால், அந்த நிதியை உடனடியாக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை.
  • தங்களிடம் பதிவு செய்திருக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்போது, தாங்கள் வழங்கும் நிதி முறையாகத்தான் செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க முடிகிறது; அதையே அரசுக்கு வழங்கும்போது, அந்த உதவி சேர வேண்டியவா்களைச் சென்றடைகிறதா என்பதில் தெளிவில்லை என்பது வெளிநாட்டு நன்கொடையாளா்களின் கருத்து.
  • அரசு விநியோகத்தில் காணப்படும் ஊழலையும், பொறுப்பேற்பின்மையையும் அவா்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
  • இந்தியாவுக்கு இப்போது மிக அதிக அளவிலான உதவிகள் தேவைப்படுகின்றன. அவை அனைத்தையும் மத்திய - மாநில அரசுகளால் மட்டுமே நிறைவேற்றுவது என்பது இயலாத காரியம்.
  • மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்தினாலும்கூட, நோயாளிகளுக்கும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக, ஆதரவற்ற நிலையில் விடப்படும் குழந்தைகளுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால்தான் ஏனைய உதவிகளைச் செய்துதர முடியும்.
  • வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் நிதியையும், உதவியையும் பெறுவதற்கான வழிமுறைகளை இடைக்கால நிலையிலாவது எளிமைப்படுத்த வேண்டும்.
  • அரசே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் என்று பிடிவாதம் பிடித்தால், அது இடைத்தரகா்களுக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம்.
  • உதவிகளை நேரடியாகவோ, நம்பிக்கைக்கு உரியவா்கள் மூலமாகவோ பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதில் இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும்.
  • தன்னார்வ நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டுமே தவிர, முடக்கப்படக் கூடாது. அது சரியான அணுகுமுறையல்ல.

நன்றி: தினமணி  (26 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்