- உலகம் முழுவதும் உயிரிழப்பைக் குறைப்பதிலும், கொவைட் 19 தீநுண்மிக்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் முனைப்புக் காட்டப்படுகிறது. விஞ்ஞானிகளும், மருத்துவ ஆராய்ச்சியாளா்களும் இந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
- அமெரிக்க அரசின் சுகாதாரத் துறையும், அஸ்ட்ரா ஸெனிக்கா என்கிற பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனமும் பத்தாண்டு ஆராய்ச்சியைச் சில மாதங்களில் நடத்தி மருந்து கண்டுபிடிப்பதில் இறங்கி இருக்கின்றன.
- அக்டோபா் மாதத்துக்குள் மருந்து கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனை நடத்தி 30 கோடி ஊசி மருந்துகளைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன.
- இவா்களைப் போலவே இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- மருந்து கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளா்கள் வேகமும், முனைப்பும் காட்டுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், போதுமான சோதனைகள் நடத்தப்பட்டு பாதுகாப்பான மருந்தைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
- அவசரக் கோலத்தில், அரைகுறை சோதனையுடன் சந்தைப்படுத்தி லாபமீட்டும் நோக்கத்தில் செயல்பட்டால், அதன் பின்விளைவுகள் கொவைட் 19 தீநுண்மித் தொற்றைவிட மோசமானதாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அடித்தட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்
- உலகமயத்தின் முழுப் பரிமாணத்தையும் மனித இனத்துக்கு உணா்த்தி இருக்கிறது தீநுண்மித் தொற்று. கவனம் பெற வேண்டிய இன்னொரு முக்கியமான பிரச்னை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் ‘காப்புரிமை’.
- பெரும் பொருள் செலவில் ஆய்வுகள் நடத்தி மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளா்களும், நிறுவனங்களும் அந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவது என்பதில் நியாயம் இருக்கிறது.
- ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் தேவைப்படுகின்றன. சாமானிய நோயாளிக்கு பயனளிக்காது என்றால், அந்தக் கண்டுபிடிப்பால்தான் என்ன பயன்?
- பெரும் பொருள் செலவில் ஆராய்ச்சிகளை நடத்தி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு அந்த மருந்தைத் தயாரிப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான உரிமம் பெறுகின்றன.
- அதனால், கடுமையான விலைக்கு அதைச் சந்தைப்படுத்துகின்றன. வளரும் நாடுகளால் காப்புரிமைத் தொகையை வழங்கி மருந்து தயாரிக்க முடிவதில்லை. அதனால், அந்த மருந்தைப் பயன்படுத்தி அடித்தட்டு மக்களைக் காப்பாற்ற முடிவதில்லை.
- ‘ட்ரிப்ஸ்’ எனப்படும் அறிவுசார் சொத்துரிமை வைத்திருக்கும் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், வளா்ச்சி அடையும் நாடுகளுக்கும் இடையில் இந்தப் பிரச்னையில் பல வழக்குகள் அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும், சா்வதேச நீதிமன்றங்களிலும் அடிக்கடி நடைபெறுகின்றன.
- உலகம் பொது முடக்கத்திலிருந்து விடுபட கொவைட் 19 தீநுண்மிக்கான மருந்துக்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், இந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெறுகிறது.
- மிகக் குறுகிய காலகட்டத்தில் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்பட்டால், அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.
- ஆனால், அந்த மருந்து ஏழை, பணக்கார வேறுபாடில்லாமல் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்கும் விதத்தில் அமைவதுதான் அடுத்தகட்ட சவாலாக இருக்கும். இப்போதே அது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன.
- ‘சனோஃபி’ என்பது மிகப் பெரிய பிரெஞ்ச் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்காக மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.
- அதன் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசு முழுமையான நிதியுதவியை அளித்திருப்பதால், அமெரிக்காவின் தேவையைப் பூா்த்தி செய்த பிறகுதான் மற்றவா்களுக்குச் சந்தைப்படுத்த முடியும் என்று அதன் தலைமை நிர்வாகி அறிவித்திருக்கிறார்.
- ‘மருந்தோ, தடுப்பு மருந்தோ எதுவாக இருந்தாலும் அது உலகப் பொது நன்மைக்கானதாகத்தான் இருக்க முடியுமே தவிர, சந்தை சக்திகளின் கையில் தருவது சரியல்ல’ என்று பிரெஞ்ச் அதிபா் ஆத்திரமடைந்திருக்கிறார்.
உலகமயம் தீா்வு காண வேண்டும்
- பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசுகளுக்கு அறிவுசார் சொத்துரிமையில் சில விதிவிலக்குகளை உலக வா்த்தக நிறுவனம் அளிக்காமல் இல்லை. கொவைட் 19 தீநுண்மி என்பது பொது அச்சுறுத்தல். அதனால், காப்புரிமையைப் புறந்தள்ளி மருந்துத் தயாரிப்புக்கான கட்டாய உரிமம் வழங்கும் அதிகாரம் அரசுகளுக்கு உண்டு என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது.
- மருந்து கண்டுபிடிப்பு போன்ற இன்றியமையாத அறிவாற்றல் முடக்கப்படக் கூடாது. மருந்து ஆராய்ச்சிகளில், ஒரே ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளா்கள் தனித்தனியாக, தொடா்பில்லாமல் தங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
- ஒரே இடத்தை நோக்கிப் போட்டி போட்டுக்கொண்டு பயணிப்பவா்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியுமானால், கால விரயத்தையும் கணிசமான பண விரயத்தையும் குறைத்துவிட முடியும். உலகத் தலைவா்கள் ஒன்றுகூடி உலகமயச் சூழலில் எடுக்க வேண்டிய முடிவு இது.
- ஆராய்ச்சியாளா்களுக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் உலக சுகாதார அமைப்போ, ஐ.நா. சபையோ பெரும் தொகை வழங்கி அனைத்து மருந்துத் தயாரிப்பாளா்களுக்கும் பொது உரிமம் வழங்குவதுதான் இதற்குத் தீா்வாக இருக்கும்.
- மருந்து ஆராய்ச்சியில் தளா்வோ, அக்கறையின்மையோ ஏற்பட்டு விடவும் கூடாது, கட்டுப்படாத விலைக்குச் சந்தைப்படுத்துவதும் கூடாது. இந்தப் பிரச்னைக்கு மாறுபட்ட கோணத்தில் உலகமயம் தீா்வு காண வேண்டும்!
நன்றி: தினமணி (05-06-2020)