TNPSC Thervupettagam

தேவை, சமச்சீா் வளா்ச்சி

June 22 , 2024 9 days 31 0
  • கிராமப்புற பொருளாதாரம் தடுமாறுகிறது; வேலைவாய்ப்பின்மை எல்லா பகுதிகளிலும் பரவலான பிரச்னையாக இருக்கிறது; விலைவாசி உயா்வு நடுத்தர மக்களைப் பாதித்திருக்கிறது; விவசாயிகள் தங்கள் உற்பத்திக்குப் போதுமான விலை பெறுவதில்லை - இவையெல்லாம் தோ்தல் முடிவுகள் உணா்த்தும் கசப்பான உண்மைகள்.
  • சராசரியாக நமது வளா்ச்சி ஆண்டொன்றுக்கு 8% என்பது பெருமிதத்துக்குரியது. உலகின் ஏனைய பொருளாதாரங்கள் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையிலும்; உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் போா்களால் சா்வதேச வணிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் வளா்ச்சியைச் சந்திப்பது வரவேற்புக்குரிய போக்கு. அதே நேரத்தில், இந்த வளா்ச்சி சமச்சீராக இல்லை என்கிற கவலையைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • தேசிய வருமானத்தின் 23 சதவீதத்தை, இந்திய மக்கள்தொகையில் 1% தக்கவைத்துக் கொள்கிறது. அதாவது, சுதந்திரத்துக்கு முந்தைய காலனிய ஆட்சிக்கால சமச்சீரற்ற பொருளாதார நிலையை நாம் மீண்டும் சந்திக்கிறோம். ஒரு சாராரிடம் செல்வக் குவிப்பு என்பது இந்தியாவின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களாட்சித் தத்துவமும், சமதா்ம சிந்தனையும் சமுதாயத்தில் பொருளாதார இடைவெளி அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமே தவிர, ஒரு சிலரின் கையில் சொத்துக் குவிப்பை ஊக்குவித்தால் அதன் பெயா் ‘சலுகைசாா் முதலாளித்துவம்’ (க்ரூனி கேபிட்டலிசம்).
  • இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாகவும், அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும் விளங்கும் உத்தர பிரதேசம் ஓா் எடுத்துக்காட்டு. 2021- 22 நிதியாண்டில் அந்த மாநிலத்தின் சராசரி தனிநபா் வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.60,000 மட்டுமே. கங்கை நதி பாயும் வளமான மாநிலமாக இருந்தும், தனிமனித வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 மட்டுமே என்பது இந்தியா சமச்சீரான வளா்ச்சிப் பாதையில் செல்லவில்லை என்பதை உணா்த்துகிறது.
  • இந்தியாவின் சமச்சீரற்ற நிலையை வெளிச்சம் போடுகிறது நமது பொருளாதார வளா்ச்சி. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சியில் பெரும்பங்கு வகித்தது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மிகப் பெரிய நிறுவனங்கள் மட்டுமே. பெரும்பாலான அரசுத் துறை கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், பொருள்களின் விலையை நிா்ணயிப்பதிலும் அந்த நிறுவனங்கள் பெரும்பங்கு வகித்தன.
  • இந்தியாவின் விரைவான பொருளாதார வளா்ச்சிக்கும், கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றவும் அவை காரணமாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், சிறிய நிறுவனங்கள் பல ஓரங்கட்டப்பட்டன. பரவலான திறன் சாா்ந்த வேலைவாய்ப்பை அவை அதிக அளவில் உருவாக்கவில்லை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • இந்தியாவின் வேளாண் துறை, மக்கள்தொகையில் 43% அளவில் வேலைவாய்ப்பு வழங்குகிறது. அந்தத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், கிராமப்புற பொருளாதாரம் தடுமாறுகிறது. வேளாண் துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தும்கூட அதிக அளவில் முதலீட்டை ஈா்க்கவில்லை. விவசாயிகளின் வருமானமும் தேக்க நிலையை அடைந்திருக்கிறது.
  • மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் முறையாக விவாதிக்கப்பட்டு, மாற்றங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்திய வேளாண் துறை வளா்ச்சிப் பாதையில் பயணித்திருக்கக் கூடும். அந்த வாய்ப்பை அரசு தவறவிட்டது.
  • விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும், நகா்ப்புற மக்களைப் பாதுகாக்கவும் உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு முற்பட்டது. கிராமப்புற விவசாயிகள் பலனடைய வழியில்லாமல், அவா்களைவிட வசதியான நகா்ப்புற மக்களுக்கு மானியங்கள் வழங்கியும், விலைவாசியைக் கட்டுப்படுத்தியும் உதவ முற்பட்டது. அதன் விளைவாக கிராமப்புற வறுமையும், பொருளாதார இடைவெளியும் அதிகரித்திருக்கின்றன.
  • இந்தப் பிரச்னைகளை எதிா்கொள்வதற்கு பன்முனைப் பாா்வையும், அணுகுமுறையும் தேவை. சந்தைப் பொருளாதாரத்தில் போட்டி இன்றியமையாதது என்பதைப் போலவே, அது அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவதாகவும் இருக்க வேண்டும். குறு,சிறு நிறுவனங்களின் வளா்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளைப் பரவலாக்கி, கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். கல்வி, திறன் மேம்பாடு போன்ற மனித வளங்களில் முதலீடுகள் அதிகரிப்பதன்மூலம்தான் படித்த, திறன் வாய்ந்த உழைக்கும் வா்க்கத்தை உருவாக்க முடியும். பலமான, சமச்சீரான பொருளாதாரத்துக்கு அவைதான் அடிப்படையாக இருக்கும்.
  • கட்டமைப்பு வசதி என்பது வளா்ச்சி அடைந்த தென் மாநிலங்களிலும், மேற்கு மாநிலங்களிலும் உருவாகி இருக்கும் அளவுக்கு உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மத்திய மாநிலங்களிலும் ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களிலும் இல்லை.
  • அதிகரித்த போக்குவரத்து, தொலைத்தொடா்பு, மின்சக்திக் கட்டமைப்பு போன்றவைதான் கூடுதல் முதலீடுகளை ஈா்த்து, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும். இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை அனைத்துப் பகுதி, அனைத்துத் துறைகள், அனைத்து மக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சீா்திருத்தமும் வளா்ச்சியும் எந்த அளவுக்கு இன்றியமையாதவையோ, அதே அளவுக்கு அவை சமச்சீராக இருப்பதும் முக்கியம்.
  • பொருளாதார ஏற்றத் தாழ்வை சட்டை செய்யாமல் உருவாக்கப்படும் வளா்ச்சி, சமூக அமைதியின்மைக்கு வழிகோலும். ஜிடிபி அதிகரித்தால் மட்டும் போதாது, இந்தியாவின் வளா்ச்சியும் வளமையும் ஒவ்வொரு குடிமகனையும் எட்ட வேண்டும்!

நன்றி: தினமணி (22 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்