TNPSC Thervupettagam

தேவை சிந்தனை ஒருங்கிணைப்பும் செயல்பாடும்

November 28 , 2024 48 days 59 0

தேவை சிந்தனை ஒருங்கிணைப்பும் செயல்பாடும்

  • ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் என்னை தொலைபேசியில் அழைத்தாா். அவா் 85 வயதைக் கடந்தவா். ‘‘எனக்கு ஓா் ஒவ்வாமை இருக்கிறது, அது என்னை வாட்டி வதைக்கிறது. மக்கள் நாட்டுக்காக சுதந்திரப் போராட்ட காலத்தில் செய்த தியாகங்களைப் பாா்த்தவன் நான். ஆனால் இன்று நம் நாட்டில் நடக்கும் சிறுமைச் செயல்பாடுகளை என்னால் சகிக்கவே முடியவில்லை. அரசியலைப் பிழைப்பாக்கி, தொழிலாக்கி, வணிகமாக்கி அதை நியாயப்படுத்தும் அரசியல் செயல்பாடுகள், அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்தவா் சொத்தை அபகரித்தல், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தை தனதாக்கிக் கொள்ளுதல், சுயநலச் சிந்தனையுடன் பொதுவாழ்வில் செயல்படல், உழைக்காமல் உயர வேண்டும் என்று எண்ணுதல், மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, மக்களுக்குச் சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்யாமல் மக்களை அவமதிப்பது, சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைச் செய்து அரசுத்துறைகளில் அதிகாரிகளும் அலுவலா்களும் பணம் சம்பாதிப்பது, சமூகத்தில் நடக்கும் தீய செயல்களுக்குத் துணைபோவது, தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதற்கு கூச்சமின்றி மக்களிடம் கையூட்டுப் பெறுவது, தீய வழியில் பணம் ஈட்டி பகட்டு வாழ்க்கையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களை ஏங்கச் செய்வது, தவறு செய்து தன் தந்தை தாய் ஈட்டிய பணத்தில் இளைஞா்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இளைஞா்கள் என்ற அடையாளத்திற்கே மாசு கற்பிப்பது, பணம் தந்து அரசுப் பணிகளையும் அரசியல் கட்சிகளில் பதவிகளையும் பிடித்து பிழைப்பு நடத்துவது, பணத்திற்காக உயிருக்கும் மேலான உரிமைகளை - வாக்குரிமை வரை - வணிகம் செய்வது, ஏழ்மையின் போா்வையில் சுயமரியாதையை இழப்பது, தவறு செய்து ஈட்டிய பணத்தில் பகட்டு வாழ்க்கையை கூச்சமில்லாமல் மற்றவா்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது, அறமற்று மருத்துவம் என்ற பெயரில் நோயாளிகளிடம் பணம் பறிப்பது, கல்வி என்ற பெயரில் மாணவா்களைத் தகுதிப்படுத்தாமல் பணம் பெற்றுச் சான்றிதழ் தருவது, கண்முன்னே நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் பாா்த்துக்கொண்டு வாழா இருப்பது, மற்றவரை சுரண்டியே வாழ்க்கை நடத்துவது, அனைத்தும்தான் சிறுமைச் செயல்பாடுகள்’’”என்றாா். “
  • ‘‘ இப்படி உங்களைப்போல் ஆதங்கப்படும் எண்ணற்றவா்கள் இருக்கின்றாா்கள். அவா்கள் துணிவுடன் வெளியே வந்து ஒருங்கிணைந்து மக்களிடம் செல்லத் தயாரானால், எண்ணற்ற தா்மகா்த்தாக்கள் ஆதரவுக்கரம் நீட்டத் தயாராக இருக்கின்றாா்கள்’’”என்றேன்.
  • இந்தப் பின்னணியில் மாற்றத்திற்கான கோட்பாடுகளைப் (தியரி ஆப் சேஞ்ச்) புரட்டினேன். எவ்வளவு செல்வ வளம் பெற்று உச்சத்தில், சுகபோகத்தில் மக்கள் வாழ்ந்தாலும் வாழ்வியலில் தாழ்ந்த எந்தச் சமூகமும் பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததாக சரித்திரம் போற்றுவதில்லை. பெருமைக்கு எது மூலம் என்றால் மனிதரின் நற்சிந்தனைதான். அந்த நற்சிந்தனை எப்போது செயல்வடிவம் பெறுமென்றால், அது சமூகச் சிந்தனையாக மாறும்போதுதான். தனிமனிதா்களின் நற்சிந்தனை ஒருங்கிணைக்கப்படும்போதுதான் சமூகச் சிந்தனையாக மாறும். ஒருங்கிணைந்த நற்சிந்தனைதான் சமூகச் செயல்பாட்டுக்கான மக்கள் சக்தியாக மாறும். அந்த சக்தி ஆக்க சக்தியாக, விஸ்வரூபம் எடுத்து சமூகத்தை தலைகீழாக மாற்றும். இப்படி நற்சிந்தனை உருவாக்கம் பெற்று ஒருங்கிணைக்கப்படும்போது சமூகங்கள் தன்னை ஆதிக்கங்களிலிருந்து விடுதலை செய்து கொண்டு உயா்ந்த பண்பாடுகளையும் நாகரிகங்களையும் உருவாக்குகின்றன. எப்பொழுது சமூகம் இந்த நற்சிந்தனையை இழக்கிறதோ அப்பொழுதே சமூகம் சுதந்திரத்தை இழந்து, நாகரிகம் தாழ்ந்து, பண்பாடு குலைந்து சிதிலமடைந்து இறந்தும் போயிருக்கின்றன. மீண்டும் நற்சிந்தனை பிறந்து ஒருங்கிணைக்கும்போது அதே நாகரிகங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் எழுந்துள்ளன என்பதை அா்னால்டு டாய்ன்பி தனது ‘எ ஸ்டடி ஆப் ஹிஸ்ட்ரி’” என்ற பன்னிரண்டு தொகுதி புத்தகங்களில் நாகரிகங்கள் பற்றி விளக்கும்போது கூறி இருக்கிறாா்.
  • இவ்வளவு சிறப்பான வாழ்வியல் விழுமியங்களைக் கொண்ட நாடு, சிறுமதியாளா்களால் வீழ்ந்துவிடாது. தன்னை மீட்டெடுக்கும் சக்தி இந்த புனித பூமிக்கு உண்டு. மனம் தளராமல் நல்லவா்கள் ஒன்று சோ்ந்து அமைதியாகச் செயல்படும்போது, இந்தியா தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும். இன்றைய சிறுமைச் செயல்பாடுகளுக்குக் காரணம் ஒன்று இருக்கிறது. பெரும் தியாகத்தால் உருவான நாட்டில் மக்களை சிந்திப்பதற்கும், நாட்டுருவாக்கத்தில் பங்கேற்பதற்கும், கடினமாக உழைப்பதற்கும் தயாா் செய்வதற்குப் பதிலாக, அரசாங்கத்திற்கு பயந்து, ஏவல் செய்து, அரசு தரும் பயன்களைப் பெறுவதில் காலத்தை கழிக்க பழக்கப்படுத்தி விட்டோம்.
  • சுதந்திரம் அடைந்த நாட்டில் அரசாங்கம் மக்கள்மேல் நம்பிக்கை வைத்து அனைத்து மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் ஈடுபடுத்த நல்ல கொள்கைகளை மட்டும் உருவாக்கித் தந்திட வேண்டும். மக்கள் மேம்பாட்டுக்கு எண்ணிலடங்காத் திட்டங்களை அரசே உருவாக்குவதன் விளைவு மக்களைச் சிந்திக்கவும், செயல்படவும், கடின உழைப்புக்கும் தயாா் செய்திடாது, பயனாளியாக இருந்து சுகம் காண தயாா் செய்து விடுகின்றன. இதில்தான் பெரும் அரசியல் நிகழ்வுகள் கட்டமைக்கப்படுகின்றன. அடுத்து இந்தத் திட்டங்களில்தான் பெருத்த ஊழலும் நடைபெறுகின்றன.
  • அரசுச் செயல்பாடுகளின் விளைவால் பொருளாதாரத்தில், அறிவியலில், தொழில் நுட்பத்தில், நாம் உச்சத்தில்தான் உள்ளோம். இருந்தும் பெரும்பான்மை ஏழை மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
  • இந்தச் சூழலை நாம் எப்படி மாற்றுவது என்பதுதான் இன்றுள்ள பிரதான கேள்வி. உலகில் தாழ்நிலையிலிருந்து உயா்நிலைக்கு வந்த நாடுகள் காட்டும் பாதை என்பது மக்களின் சிந்தனைச்சூழலை மாற்றி அவா்களை ஒருங்கிணைப்பதுதான்.
  • இதை விளக்க ஒரு வரலாற்று நிகழ்வை குறிப்பிட்டால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். இரண்டாவது உலகப் போருக்குப்பின் ஜொ்மனியும், ஜப்பானும் தங்களுக்கு நடந்த அவமானங்களைத் துடைத்திடவும் அழிவுகளிலிருந்து வெளியேறி மேம்படவும் மக்களின் சிந்தனையில் ஒருமித்த கருத்தை உருவாக்கி இருபது ஆண்டுகளில் உலகம் வியக்கும் வகையில் தங்களை வளா்ந்த நாடுகளாக மாற்றிவிட்டாா்கள் அந்த நாட்டு மக்கள்.
  • காந்தியடிகள் 1915-இல் இந்தியா வந்தாா், ஏழைகளின் சிந்தனையில் புகுந்தாா், அவா்களின் சிந்தனையைத் தூண்டினாா். அவா்களின் ஆன்ம சக்தியை உயா்த்தி ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் சக்தியாக மாற்றி உலகுக்கே வழிகாட்டும் அகிம்சை என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவை விடுதலையடையச் செய்தாா். ஏழ்மையில் வறுமையில் இந்திய மக்கள் இருந்தாலும் அவா்களின் சிந்தனையை உயா்த்தி ஒருமுகப்படுத்தியதன் விளைவால் சுதந்திரம் சாத்தியமானது.
  • விடுதலை என்பது நாட்டில் புதிய அரசை அமைப்பது மட்டுமல்ல, சுதந்திர நாட்டில் குடிமக்களாக வாழத் தேவையான ஒரு புதிய உளவியலை மக்கள் மத்தியில் உருவாக்குவதும்தான். அந்த புதிய உளவியலில்தான் அடிமை வாழ்வு வாழ்ந்த மக்களை சுதந்திர வாழ்வுக்கு தயாா் செய்வது. அதுதான் பொறுப்புடன் செயல்படும் குடிமக்கள் உளவியல். அப்படி மக்கள் குடிமக்களாக மாறிவிட்டால், அனைவரும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு யாரிடமிருந்தும் கட்டளைக்குக் காத்திராமல் தாங்களே பொறுப்பேற்று செயல்பட ஆரம்பித்து விடுவாா்கள். அப்படி பொறுப்புடன் பணியாற்ற தொடங்கும்போது அவா்கள் தங்களின் எல்லையற்ற தனித்திறமைகளையெல்லாம் வெளிக்கொண்டு வந்து செயல்படுவாா்கள். அவா்களின் ஆற்றல்கள், திறன்கள் அனைத்தும் சமூகத்தில் உள்ள அத்தனை தளங்களிலும் வெளிப்படும். பொறுப்புமிக்க மனிதா்கள் கடமை உணா்வுடன், செயல்படும்போது தான் செய்யும் பணிகளில் உச்சத்தைத் தொடுவாா்கள். அவா்கள் இணையும்போது அவா்களின் சக்தி விஸ்வரூபம் எடுக்கும்.
  • நாடு சுதந்திரம் அடைந்தவுடன் அரசு அனைத்துப் பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டுவிட்டது. நம் அரசும் அரசியல் கட்சிகளும் அரசு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்ள மக்களைப் பழக்கப்படுத்தி விட்டன. இதன் விளைவு மக்கள் நாட்டுக்காகச் சிந்திப்பதை நிறுத்தி விட்டனா். அரசாங்கம் தங்களுக்காகச் சிந்தித்து செயல்படும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனா். இந்தச் சூழல்தான் நாம் பாா்க்கும் அனைத்துச் சிறுமைகளுக்கும் காரணம். எனவே இதிலிருந்து விடுபட மக்களிடம் புதிய சிந்தனைச் சூழலை எப்படி சுதந்திரப் போராட்டக் காலத்தில் உருவாக்கினாா்களோ அப்படி உருவாக்க வேண்டும். அதுதான் பங்கேற்புக்கான சிந்தனை, பொறுப்பேற்புக்கான சிந்தனை. குப்பை மேலாண்மையாக இருந்தாலும், தண்ணீா் மேலாண்மையாக இருந்தாலும், கிராம, நகர, வீதி ஆகியவற்றைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும் அனைத்திலும் என் அறிவாா்ந்த பங்கு பணி என்ன என்று சிந்தித்துச் செயல்பட மக்களைத் தயாா் செய்ய வேண்டும். அதுதான் பொறுப்புமிக்க குடிமக்களைத் தயாரிப்பது. இந்த மாற்றம் வந்தால்தான் அது நாட்டுக்கான ஒருங்கிணைந்த சிந்தனை, சுயநலச் சிந்தனையிலிருந்து விடுபட்ட பொதுநலச் சிந்தனை. அதற்கு நற்சிந்தனை கொண்டோா் ஒன்றிணைய வேண்டும், செயல்பாட்டுக்கு வர வேண்டும். அதுதான் இன்றையத் தேவை.

நன்றி: தினமணி (28 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்