- தனது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியின் ஞாயிற்றுக்கிழமை உரையில், மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்துவதை புத்தாண்டுத் தீா்மானமாக ஏற்கவேண்டும் என்கிற வேண்டுகோளை விடுத்திருக்கிறார் பிரதமா் நரேந்திர மோடி. இதுபோன்ற வேண்டுகோளை அவா் விடுப்பது இது முதல்முறை அல்ல.
- ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம் என்கிற இயக்கத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்பு அறிவித்தது. அது பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. இன்னும்கூட, தையல் ஊசி வரை இறக்குமதி பொருள்களின் பயன்பாடு குறைந்துவிடவில்லை.
- வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டுத் தயாரிப்புகளை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் என்கிற பிரதமரின் கருத்தின் பின்னால் இருக்கும் அக்கறை புரிகிறது. அதே நேரத்தில், அது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், அவைகளுக்கு மாற்றுத் தயாரிப்புகள் இந்தியாவில் இல்லை. அப்படியே இருந்தாலும் அவற்றின் தரம் மெச்சும்படியாக இல்லை.
- அதை உணா்ந்துதான், ‘இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களும், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களும் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்தியாவில் அனைத்துப் பொருள்களையும் தயாரிக்க முன்வர வேண்டும்’ என்று பிரதமா் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
- அண்ணல் காந்தியடிகளின் ஆதா்சமான சுதேசி இயக்க உணா்வை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமா் மோடி ஈடுபடுவது புதிதல்ல. முதன் முறையாக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய மூன்றே மாதங்களில், 2014 செப்டம்பரில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்கிற அறைகூவலை விடுத்தார் அவா். உற்பத்தித் துறை 12% - 14% அளவிலான வளா்ச்சியைக் காண வேண்டுமென்றும், அதன் மூலம் அந்தத் துறையின் ஜிடிபி 2025-க்குள் 25%-ஆக உயரும் என்றும் அப்போது பிரதமா் கணித்திருந்தார். உற்பத்தித் துறையின் வளா்ச்சி 12% ஜிடிபியாக உயா்ந்தால், 10 கோடி பேருக்கு 2022-க்குள் வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
- அறிவிப்புடன் நின்றுவிடாமல், குறிப்பிட்ட 25 துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடி அரசு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. இந்தியாவை சீனாவைப்போல, பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவதுதான் அதன் இலக்கு. ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் பழைய புதை குழியில் தொழில்துறை சிக்கிக் கொண்டிருக்கிறதே தவிர, இலக்கை எட்டவில்லை.
- பல பன்னாட்டு நிறுவனங்களும், முதலீட்டாளா்களும் பிரதமரின் 2014 அறிவிப்பைத் தொடா்ந்து, பெரிய அளவிலான முதலீடுகளுக்கு வாக்குறுதி அளித்தனா். அந்த வாக்குறுதிகளைக் கூட்டிப் பார்த்தால் அமெரிக்காவின் ஜிடிபியில் பாதியை அவை கடந்திருக்கும்.
- மோட்டார் வாகனங்கள், ராணுவ தளவாடங்கள், தொழில் பூங்காக்கள் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரதமா் மோடியின் அறைகூவலால் கவரப்பட்டன. கடைசியில் பார்த்தால் அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ‘காப்புரிமை’ என்கிற பெயரில் இந்தியாவிலிருந்து பணத்தை அள்ளிக்கொண்டுப் போயினவே தவிர, உள்ளூா் கூட்டாளிகள், துணை நிறுவனங்கள் மூலம் தயாரிப்பை முடுக்கிவிட்டு லாபம் ஈட்டி, இந்தியாவுக்குப் பெரிதாக எதுவும் தந்துவிடவில்லை. நமது அரசு நிர்வாகம் (அதிகார வா்க்கம்) ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதை, ‘இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்வோம்’ என்று மாற்ற அந்த நிறுவனங்களுக்கு உதவியது.
- சில உண்மைகள் சுடும். இந்தியப் பொருளாதாரம் மந்தகதியில் இயங்குகிறது என்பதுடன் பின்னோக்கியும் நகா்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் வளா்ச்சியை நோக்கித் திரும்பும் என்கிற அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். இந்திய உற்பத்திகளுக்கு இந்தியாவில் போதுமான கேட்பு (டிமாண்ட்) இல்லை. இரண்டாவது, உலகப் பொருளாதாரம் தேங்கிக் கிடக்கிறது. நல்ல வேளையாக சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்று வீழ்ச்சியை கண்டிருப்பதால், இந்தியாவின் நிதிநிலைமை முற்றிலுமாகத் தகா்ந்து விடவில்லை.
- ‘ஆத்மநிர்பா்’ என்றால் ‘தற்சார்பு’. தற்சார்பு என்பது வேறு, தன்னிறைவு என்பது வேறு. தற்சார்பின் இலக்கு தனக்காக மட்டுமல்லாமல், உலகுக்காகவும் உற்பத்தி செய்வது. இந்தியாவை ஏற்றுமதி மையமாக மாற்றி வேலைவாய்ப்பை அதிகரிப்பது. எதை ஏற்றுமதி செய்யப் போகிறோம்?
- இந்தியா இறக்குமதிகளைக் குறைத்து, அல்லது தடைவிதித்து ஏற்றுமதிகளை அதிகரித்துவிட முடியாது. அப்படி செய்ய முற்பட்டால், உலக நாடுகளின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரும். இந்தியாவைப் போலவே ஏனைய நாடுகளும் தற்சார்பு என்கிற பெயரில் இறக்குமதிகளைக் குறைக்க முடிவெடுத்தால், நாம் யாருக்கு ஏற்றுமதி செய்வோம்? உலகப் பொருளாதாரம் ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருக்கும்போது, ஏற்றுமதிகளுக்கான வாய்ப்பும் குறைவு என்பதை நாம் மறந்துவிட முடியாது.
- ஒரு நாட்டின் இறக்குமதிதான் இன்னொரு நாட்டின் ஏற்றுமதி. எல்லா நாடுகளும் இறக்குமதிகளைக் குறைப்பது என்று முடிவெடுத்தால், உற்பத்தி குறைந்து ஒட்டுமொத்த உலகமும், 1930-ஆம் ஆண்டு போல, தேக்க நிலைக்குத் தள்ளப்படும்.
- இந்தியாவின் தேவை தன்னிறைவு; தற்சார்பு அல்ல!
நன்றி: தினமணி (29-12-2020)