TNPSC Thervupettagam

தேவை தொலைநோக்கு - குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த தலையங்கம்

June 28 , 2024 201 days 134 0
  • இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே வழக்கத்துக்கு மாறாக பருவ மழை அமைந்திருக்கிறது. கேரளத்தில் இரண்டு நாள் முன்னதாகவே தொடங்கிவிட்டது என்றால், ஜூன் 11-ஆம் தேதி மகாராஷ்டிரத்தை அடைந்தபோது ஒன்பது நாள் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேகம் அதிகரித்தாலும் இன்னும்கூட வழக்கத்தைவிட ஏழு நாள்கள் பின்தங்கியே காணப்படுகிறது.
  • ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட குறைவான மழைப் பொழிவு காணப்படுவதால், ஜூலை மாதம்தான் முழுமையான வேகம் எடுக்கும் போலிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் கடுமையான மழைப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஜூன் மாத, குறைவான மழைப் பொழிவு காரணமாக காரீஃப் பருவப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படலாம் என்பதையும் அரசு கருத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
  • கடந்த ஆண்டு தென்மேற்கு - வடகிழக்கு பருவ மழைகள் போதுமான மழைப் பொழிவை வழங்காததால் பரவலாகவே மகசூல் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் பருவமழை எதிர்பார்த்ததுபோல இல்லாததால் நடவுப் பணிகள் பல பகுதிகளில் தாமதமாகியிருக்கிறது.
  • அப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு. விவசாயிகளுக்கு மகசூல் எப்படி இருக்கப் போகிறது என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், ஆதரவு விலை கிடைப்பது குறித்த நம்பிக்கையை அரசின் அறிவிப்பு ஏற்படுத்தும்.
  • கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பெரும்பாலான பயிர்களுக்கு 6% முதல் 13% வரை குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆதரவு விலையை ஒவ்வொரு பயிருக்கும் நிர்ணயிப்பதற்கு, தனித்தனியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, விவசாயச் சங்கங்களுடன் கலந்தாலோசனையும் செய்யப்பட்டு இருக்கிறது என்பது வரவேற்புக்குரிய மாற்றம். சர்வதேச நிலவரத்தையும், ஏற்றுமதி-இறக்குமதி தேவைகளையும் வேளாண் அமைச்சகம் ஆராய்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இவை இரண்டிலுமே இந்தியா இறக்குமதி சார்ந்ததாக இருப்பதுதான் காரணம். அவை காரீஃப் பருவப் பயிர்கள் என்பதால் பருவமழையின் தொடக்கத்தில் முழு கவனமும் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
  • பருப்பு வகைகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 6% மகசூல் குறைந்தது. எண்ணெய் வித்துகள் 4%, சோளம் 8%, ஏனைய பருப்பு வகைககள் 4% கடந்த பருவத்தில் குறைவான விளைச்சலைக் கண்டன. இந்த முறை அந்தப் பயிர்களில் விவசாயிகளுக்கு நாட்டம் ஏற்படுவதற்காகவும், நம்பிக்கை ஏற்படுவதற்காகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • ராகி 11.5%, துவரம் பருப்பு 7.8%, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகளுக்கு 7.7%, கடுகு 7.3%, காட்டு எள்ளுக்கு 12.7% என்கிற அளவில் ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் அவற்றைப் பயிரிட வேண்டும் என்பதற்காக. இவை அனைத்துமே நமது இறக்குமதிகளை ஈடுகட்டுவதாக அமையும்.
  • தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் குடும்பப் பங்களிப்பையும் சேர்ந்து விவசாயிகளின் முதலீட்டுச் செலவுக்கு மேல் 50% லாபம் கிடைக்கும் விதத்தில் ஒவ்வொரு பயிரின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கம்பு, துவரை, சோளம் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை 54% முதல் 77% வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் விதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்களைத் தேர்ந்தெடுப்பதில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், அவை மட்டுமே விவசாயிகளை நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்களில் இருந்து ஏனைய பயிர்களுக்கு மாற்றுவதற்குப் போதுமானதல்ல.
  • ஆதரவு விலையை அதிகரித்துக் கொடுப்பதால் மட்டுமே விவசாயிகள் பரவலான கேட்பு இருக்கும் பணப் பயிர்களில் இருந்து மாறிவிட மாட்டார்கள். தங்களது உற்பத்திக்கு உடனடியான சந்தை கிடைப்பதை உறுதிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துவார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதுடன் உற்பத்தியாகும் பயிர்கள் அரசால் கொள்முதல் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம்.
  • நெல்லுக்கும் கோதுமைக்கும் மத்திய-மாநில அரசுகளின் முறைப்படுத்தப்பட்ட கொள்முதல் அமைப்புகள் இருக்கின்றன. பொது விநியோக முறையில் வழங்குவதற்காக மத்திய-மாநில அரசுகள் தங்களது அமைப்புகள் மூலம் நெல், கோதுமை போன்றவற்றை கிராமப்புறங்கள் வரை கொள்முதல் செய்வதற்கு முன்வருகின்றன. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளின் பின்புலம் இருக்கிறது.
  • சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை சாகுபடி முடிந்ததும் கொள்முதல் செய்வதற்கான, அமைப்பு ரீதியான வழிமுறைகள் இன்னும் இல்லை. பொது விநியோக முறையில் தானியங்கள் மட்டுமல்லாமல் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவையும் விநியோகத்துக்காக கொண்டு வரப்படும் போதுதான் அந்தப் பயிர்களுக்கு விவசாயிகள் துணிந்து மாறுவார்கள்.
  • அனைத்து வேளாண் உற்பத்திகளையும் அரசு கொள்முதல் செய்துவிட முடியாது. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டுமென்றால் உள்நாட்டு-வெளிநாட்டு சந்தைகளில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் உற்பத்தியை விலை பேசும் சக்தி இந்திய விவசாயிக்கு ஏற்பட வேண்டும்.

நன்றி: தினமணி (28 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்