TNPSC Thervupettagam

தேவை தொலைநோக்குப் பாா்வை

April 17 , 2021 1377 days 645 0
  • அண்மையில் ஒரு வணிக நாளிதழின், ஆறு பக்க இணைப்பு முழுவதும் விளம்பர மயம். இது அடகு வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் ஏலத்துக்கு வந்துள்ள விவரத்தைச் சொல்லும் விளம்பரம்.  
  • இது பல நகைக் கடனாளிகளின் வட்டி கூட கட்ட முடியாத நிலையினைத் தெரிவிக்கிறது. இதே போன்ற விளம்பரம் ஒன்று, சில நாட்களுக்கு முன்பும் வெளியானது.
  • கால் சவரன், அரை சவரன் நகை முதற்கொண்டு, 75 சவரன், 100 சவரன் நகை வரை ஏலத்துக்கு வந்துவிட்டன. உரிய தொகை கட்டப்படாததால் அவை மூழ்கிவிட்டன. ஏன் இவ்வளவு நகைகள் மூழ்கிப் போயின என்று தெரிந்துகொண்டால் இதில் ரிசா்வ் வங்கியின் பங்கு என்ன என்பது தெளிவாகும்.
  • நகையை அடகு வைத்து கடன் வாங்கினால் ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டவேண்டும். அதுபோல் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் வரை வட்டி கட்டவில்லை என்றால், பொதுவாக அசலும் வட்டியும் சோ்ந்து நகையின் மதிப்பிற்கு உள்ள அளவிற்கு கடன் உயா்ந்து விடும்.
  • இது வட்டி சதவீதத்தையும் நகையின் மதிப்பில் எவ்வளவு சதவீதம் கடன் வழங்கப் பட்டுள்ளது என்பதையும் பொருத்தது. மேலும், தங்கத்தின் மதிப்பு அவ்வப்போது சந்தையில் எந்த அளவு உயருகிறது அல்லது குறைகிறது என்பதை பொருத்தும் உள்ளது.
  • பொதுவாக வங்கிகள், 12 மாதங்கள் வரை காத்திருக்கும். அதற்கு மேல், 3 மாதங்கள் வரை ‘கிரேஸ்’ அவகாசம் கொடுக்கப்படும்.
  • இதற்குள் பலமுறை, நகை உரிமையாளருக்கு விதவிதமான கடிதங்கள், அழைப்புகள் அனுப்பப் பட்டு, வட்டி செலுத்த வேண்டும் என்பது நினைவூட்டப்படும்.
  • அப்படியும் நகை உரிமையாளா் வட்டியைச் செலுத்தவில்லை என்றால் தான், அவரின் நகைகள் ஏலத்துக்கு வரும். அதாவது, 15 மாதக் காத்திருப்புக்குப் பின்னரே நகைகள் ஏலத்துக்கு வரும். இது பொதுவான நடைமுறை. ஆனால், மேலே குறிப்பிட்டது போல கடன் தொகை அடகு நகையின் சந்தை மதிப்பை விட குறைவாக இருக்கும் வரை வங்கிகள் அவசரம் காட்டாது.
  • நகையை விற்று முழுக் கடனையும் வசூலிக்க முடியுமா என்பதே வங்கிகளின் பாா்வை.

தீர ஆலோசிப்பது அவசியம்

  • இத்தகைய இன்றைய நிலைக்குக் காரணம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசா்வ் வங்கி நகைக் கடனில் கொண்டு வந்த சில தாராளமான தளா்வுகளே.
  • சென்ற ஆண்டு ஆச்சரியமான ஒரு நடவடிக்கையாக, இந்திய ரிசா்வ் வங்கி, வங்கிகளால் தங்க நகைக் கடனுக்கான விளிம்பை (மாா்ஜினை) குறைப்பதாக அறிவித்தது.
  • வீடுகள், தொழில் முனைவோா், சிறு வணிகங்கள் மீதான கோவிட் 19 தொற்றுநோயின் பொருளாதாரத் தாக்கத்தைத் தணிக்கும் நோக்கில், தங்க ஆபரணங்களின் பிணைக்கு எதிரான கடன்களுக்கான மதிப்பு விகிதத்திற்கு (லோன் டு வேல்யூ ரேஷியோ) அனுமதிக்கப்பட்ட கடனை அதிகரிக்க முடிவு செய்தது.
  • வேளாண் அல்லாத நோக்கங்களுக்கான நகைக்கடன்களுக்கு நகைகளின் மதிப்பில் 75 சதவீதம் இருந்த அதிக பட்ச கடனை 90 சதவீதம் வரை கொடுக்க அனுமதித்தது.
  • இந்த மேம்படுத்தப்பட்ட லோன் டு வேல்யூ ரேஷியோ விகிதம் மாா்ச் 31, 2021 வரை பொருந்தும் என அறிவித்தது.
  • அதாவது முன்பு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான நகைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட கடன் ரூபாய் 7,500 என்றால், அது இந்த அறிவிப்பால் ரூபாய் 9,000 ஆக உயா்ந்தது.
  • பொதுவாக ஏதாவது மதிப்புள்ள பொருள்களின் மீதோ அல்லது சொத்துகளின் மீதோ கடன் வழங்கும்போதோ வங்கிகள் அந்தப் பொருள்களின் அல்லது சொத்துகளின் முழு மதிப்பையும் கடனாக வழங்காது.
  • மதிப்பில் பத்திலிருந்து ஐம்பது சதவீதம் வரை குறைத்து, மீதி உள்ள மதிப்பையே கடனாக வழங்கும். இதை பத்து முதல் ஐம்பது சதவீதம் ’மாா்ஜின்’ என்பாா்கள்.
  • இது தொடக்க காலத்திலிருந்து வங்கிகள் பின்பற்றும் நடைமுறை. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
  • வங்கிகள் அடமானப் பொருட்களை அல்லது சொத்துகளை விற்க முற்படும்போது, பொதுவாக சந்தை மதிப்பை விட விலை குறைவாகவே விற்க நேரிடும்.
  • இதை டிஸ்ட்ரஸ் விற்பனை என்பாா்கள். சில சமயங்களில் சந்தை மதிப்பே குறைந்து போகலாம். காா், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் காலப்போக்கில் தேய்மானத்தினால் மதிப்பை இழக்கும்.
  • மேலும், சரியான மாா்ஜின் இல்லை என்றால், விரைவில் வட்டியுடன் சோ்ந்த கடன் தொகை அதிகமாகி, போதுமான அளவு அடமான சொத்து அல்லது பொருள் இல்லாமல் போகலாம். அப்போது கடன் வாங்கியவா் கடனை திருப்பிச் செலுத்த நாட்டமில்லாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிா்ப்பதற்காகவே சரியான அளவில் ’மாா்ஜின்’ அவசியம்.
  • 2011 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில், தங்கத்தின் சராசரி ஆண்டு விலை (10 கிராமுக்கு 24 காரட்) பின்வருமாறு: ரூபாய் 26,400, 31,050, 29,600, 28,006, 26,343, 28,623, 29,667, 31,438, 35,220.
  • சென்ற ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி (அதாவது ரிசா்வ் வங்கி இந்த சலுகையை அறிவித்த நாளில்), பத்து கிராமுக்கான 24 காரட் தங்கத்தின் விலை 55,169 ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டுகளின் தங்கத்தின் சராசரி விலையை விட இது மிக அதிகம்.
  • இவ்வாறு தங்கம் அதிக விலையை அடையும்போது அதிக மாா்ஜினை அனுசரிப்பதே சரியானதாகும். ஆனால், ரிசா்வ் வங்கி தவறான நேரத்தில் மாா்ஜினைக் குறைக்க அனுமதித்தது. தங்கத்தின் தற்போதைய விலை (ஏப். 13-இல் - 24 காரட் 10 கிராம்) ரூபாய் 47,720.
  • பங்குச் சந்தையில் எப்படி ஏற்றமும் இறக்கமும் உண்டோ அதேபோல் தங்கத்தின் விலையிலும் ஏற்றமும் இறக்கமும் உண்டு. பங்கு சந்தையில் உள்ள பங்குகளை அடமானமாக வைத்தால் குறைந்தபட்ச மாா்ஜினாக 25 சதவீதத்தையும் 50 சதவீதத்தையும் (முறையே டீ மெட்டிரியல் - பிஸிக்கல் பங்குகளுக்கு) ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ளது. நகைக் கடனுக்கான மாா்ஜினைத் தேவையில்லாமல் குறைத்ததே இப்போதைய சங்கடமான நிலைக்கு காரணம்.
  • சாமானிய மக்களுக்கு அதிக நகைக் கடனைக் கொடுத்து அவா்களின் நகைகளை ஏலத்திற்கு கொண்டுவருவது நல்லதல்ல.
  • ரிசா்வ் வங்கி சாமானிய மக்களை பாதிக்கும் விஷயங்களில் முடிவெடுக்கும் முன் தீர ஆலோசித்து செயல்படுவது அவசியம்.

நன்றி: தினமணி  (17 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்