TNPSC Thervupettagam

தேவை, வளர்ச்சியுடன் கூடிய நட்புறவு

August 29 , 2024 137 days 136 0

தேவை, வளர்ச்சியுடன் கூடிய நட்புறவு

  • நமது அண்டை நாடான இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இத்தேர்தல், விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி நடைபெறுகிறது.
  • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 2022-ஆம் ஆண்டு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது இடைக்கால பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து ஓரளவு மீண்டு வர நடவடிக்கை எடுத்த தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா, "ஒரே நாடு, ஒரே கலாசாரம்' என்ற அடிப்படையில் சிங்கள இன மேலாதிக்கத்தை வலியுறுத்தும் இலங்கையின் நீதி, சிறைத் துறை, அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபட்ச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாவர்.
  • சுமார் 2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் சிங்களவர் சுமார் 70 சதவீதமும், தமிழர், இஸ்லாமியர் முறையே 15 மற்றும் 10 சதவீதமும் உள்ளனர். நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில், தமிழ் கட்சிகள் சிலவற்றின் சார்பில் தேசிய கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
  • இதனிடையே, தமிழ் தேசிய கூட்டணியான டிஎன்ஏ-வின் மத்திய பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண அதிகாரப் பகிர்விற்கு ஒப்புக்கொள்ளும் அதிபர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப் போவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஎன்ஏ-வின் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்களின் ஆதரவை இழக்கும் நிலை நேரிடலாம் என்பதால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இந்த நிபந்தனையை இதுவரையில் வெளிப்படையாக ஏற்க முன் வரவில்லை.
  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழக அரசியல் கட்சிகள் மலையக தமிழர்களின் நலனில் போதிய கவனம் செலுத்துவதில்லை எனக் கூறி, மலையகப் பகுதியில் உள்ள சுமார் 8 லட்சம் தமிழர்களின் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மயில்வாகனம் திலகராஜு போட்டியிடுகிறார்.
  • தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது எட்டாக்கனி என்ற நிலையில், தமிழ் கட்சிகள் வெவ்வேறான நிலைப்பாடுகளுடன் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை எதிர்கொள்வது வருந்தத்தக்கது. எனினும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி அதிபர் தேர்தல் நடைபெறுவதால் தமிழர்களுக்கான கட்சிகள் பெறும் வாக்குகள் அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
  • 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி வாய்ப்பை இழந்ததற்கும், மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றதற்கும் தமிழர் கட்சிகள் பெற்ற வாக்குகளே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நம் நாட்டின் வட எல்லையில் நெருக்கடிகள் கொடுத்து வரும் சீனாவுடன் இலங்கை நெருக்கமான பொருளாதார, அரசியல் ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் பெருமளவு அந்நிய முதலீடு செய்து வருவதோடு, அந்நாட்டின் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி, அண்மைக் காலங்களில் சீனாவும் இலங்கைக்கு அதிக அளவில் உதவிகள் செய்து வருகிறது. சீனாவின் உதவிகளுக்கு கைம்மாறாக தென்சீனக் கடல் பகுதியில் வியத்னாம், பிலிப்பின்ஸ், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாட்டை இலங்கை ஆதரித்து வருகிறது. இலங்கையின் சீன ஆதரவு நிலைப்பாட்டிற்கு இடையிலும், இலங்கையை நட்பு நாடாகவே இந்தியா கருதுகிறது.
  • 2022-ஆம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அந்நாட்டுக்கு சுமார் ரூ. 32,000 கோடி கடன் உதவி செய்ததோடு, சர்வதேச நிதியத்தில் அந்நாடு கடன் பெறுவதற்கு இந்தியா சிபாரிசு செய்தது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் ரூ. 400 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள், எரிபொருள் ஆகியவற்றையும் அந்நாட்டுக்கு நம் நாடு அனுப்பியது.
  • மேலும், 60 லட்சம் டாலர் செலவில் கட்டப்பட்ட கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இந்திய அரசின் வீட்டு வசதி மூலமாக 154 வீடுகள் என மத்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி வருகிறது.
  • ஏறத்தாழ 40 ஆண்டுகால உள்நாட்டு போருக்குப் பின், மெல்ல மீண்டு வரும் இலங்கையின் அதிபர் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்படுபவர், இலங்கையின் பன்முகத்தன்மையை பாதுகாப்பவராக இருத்தல் வேண்டும். மேலும், இலங்கையின் வளர்ச்சியில் அக்கறை உடையவராக இருப்பதோடு மட்டுமின்றி, இந்தியாவுடன் அரசியல் ரீதியான சுமுக உறவினைத் தொடரும் வகையில், வெளியுறவுக் கொள்கையை வகுத்து தெற்காசிய பிராந்திய நாடுகளிடையே நல்லுறவை வளர்க்கும் அதிபராகவும் அவர் திகழ வேண்டும் என்பதே நம் விருப்பம்.

நன்றி: தினமணி (29 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்