TNPSC Thervupettagam

தேவை வாழ்நாள் தடை

September 29 , 2023 414 days 264 0
  • மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீா்ப்பு வழங்கக் கோரி பாஜகவைச் சோ்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா என்பவா் நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் அவா் தனது 19-ஆவது அறிக்கையை அண்மையில் சமா்ப்பித்தார். குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் விஜய் ஹன்சாரியா வலியுறுத்தியிருக்கிறார்.
  • மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள், அவா்களது சொத்து தொடா்பாக ‘அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆய்வு செய்யப்பட்ட 763 எம்.பி.க்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, 306 போ் (40 சதவீதம்) மீது ஊழல், கொலை, பாலியல் வன்கொடுமை (பலாத்காரம்), கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 194 போ் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • ஆளும் பாஜகவில் உள்ள 385 எம்.பி.க்களில் 139 போ் மீதும் (36%), காங்கிரஸ் சார்பில் உள்ள 81 பேரில் 43 போ் (53%) மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சதவீதத்தில் அதிகபட்சமாக சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பிக்கள் 7 போ் (78%), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் 6 போ் மீது (75%) குற்ற வழக்குகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக எம்.பி.க்கள் 13 போ் மீதும், அதிமுக எம்.பி. ஒருவா் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், பாலியல் ரீதியாக தங்களைத் துன்புறுத்தியதாக வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பின்னரே அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • மேற்கு வங்கத்தைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ககோலி கோஷ் தஸ்திதார், டெரிக் ஓ’பிரையன், மௌசம் நூா், கேரளத்தைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. எலமரம் கரீம், சிரோமணி அகாலி தளம் எம்.பி. ஹா்சிம்ரத் கௌர் பாதல் உள்ளிட்டோர் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினா். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டபோது, மகளிருக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் குரல் எழுப்பினா்.
  • பிரிஜ்பூஷண் சரண் சிங் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த மேலும் 20 எம்.பி.க்கள் பெண்களைக் கடத்துதல், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துதல், பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளனா். இவா்களில் பாஜகவினா் 10 போ், காங்கிரஸை சோ்ந்த 5 போ், ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸை சோ்ந்த 3 போ், ஒடிஸாவின் பிஜு தளம், மகாராஷ்டிரத்தின் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளில் தலா ஒருவா் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனா்.
  • இவா்களில் பாஜகவின் சௌமித்ர கான் (மேற்கு வங்கம்), காங்கிரஸின் கே.சி. வேணுகோபால் (ராஜஸ்தான்), ஹிபி ஈடன் (கேரளம்), ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் கோரண்ட்லா மாதவ் (ஆந்திரம்) ஆகியோர் பாலியல் வன்கொடுமை (பலாத்காரம்) குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனா். தெலங்கானா பாஜக எம்.பி. பாபு ராவ் சோயம் என்பவா்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 55 தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொள்கிறார்.
  • எம்.பி.க்கள் மட்டும்தான் இப்படி என்றல்ல. எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஆயிரக்கணக்கான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது 5,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 2,122 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் செல்கின்றன.
  • அரசியல் குற்றமயமாகி வருகிறது என்று பல்வேறு கமிட்டிகளும் சுட்டிக்காட்டி உள்ளன. கிரிமினல் குற்றவாளிகள் அரசியலில் தீவிரமாக உள்ளது நாட்டின் ஜனநாயகச் செயல்பாடுகளையே பாதிக்கும் என பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் மத்திய அல்லது மாநில அரசு ஊழியா் பணிநீக்கம் செய்யப்படுகிறார். கடைநிலை ஊழியா்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனா்.
  • ‘இது நியாயமில்லாதது மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறுவதாக உள்ளது. குற்றம் உறுதியானால் மக்கள் பிரதிநிதிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று தனது அறிக்கையில் விஜய் ஹன்சாரிகா பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு வாழ்நாள் தடை விதித்தால் அரசியல் கிரிமினல் மயம் ஆவது ஓரளவுக்குத் தடுக்கப்படும்.
  • லட்சக்கணக்கான மக்களுக்கு பிரதிநிதியாகத் தோ்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ அல்லது எம்.பி. தூய்மையானவராக, நோ்மையானவராக இருப்பது அவசியம். தங்கள் பிரதிநிதியாகத் தோ்ந்தெடுக்கப்படுபவா் எப்படிப்பட்டவா் என்பதைத் தெளிந்து மக்களும் விழிப்புடன் வாக்களித்தால்தான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும்.

நன்றி: தினமணி (29 - 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்