தேவை விழிப்புணர்வு...!
- இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவால் விடும் வகையில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகளின் பெயரில் நடைபெறும் ஆன்லைன் பண மோசடிகளால் பொதுமக்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். எண்ம பரிவர்த்தனை முறையால் வங்கிச் சேவைகள் எளிமையாகிவிட்ட நிலையில், நாளுக்கு நாள் புதிது புதிதாக ஆன்லைன் மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன.
- இணையம் மற்றும் கைப்பேசி செயலி பரிவர்த்தனை போன்றவற்றை வங்கிகள் ஊக்குவித்து வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் இந்த இணையவழி சார்ந்த தொழில்நுட்பங்களைக் கையாள வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அந்த நிறுவனப் பணியாளர்கள் வங்கிகளின் கணினி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்போது, அவர்களில் சிலர் வாடிக்கையாளர்களின் விவரங்களை இணையவழிக் குற்றவாளிகளுக்கு விற்றுவிடுவதாக மத்திய இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
- வங்கிகளின் தரவுகளைப் பெறும் இணையக் குற்றவாளிகள், அந்த வங்கிகளின் சர்வர்களில் உள்நுழைந்து வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், பண மோசடிகளில் ஈடுபடுகின்றனர். வங்கிகளின் சர்வர்களில் உள்நுழைந்து வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பார்வையிடும் இணையக் குற்றவாளிகள், தங்களுக்கு வாய்ப்பானவர்களுக்கு வலைவீசுகின்றனர். இதைத் தடுக்க பொதுத் துறை, தனியார் வங்கிகளின் நிர்வாகம் சார்ந்த உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
- இணையவழி மோசடிகள் ஒருவகை என்றால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களிடமிருந்து பெரும் முதலீட்டைப் பெற்று ஏமாற்றும் மோசடி மற்றொரு வகை. சென்னை, கோவை, புதுச்சேரியில் இந்த மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
- கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபம் பெறலாம் எனக் கூறி, கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்ட கும்பல், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் பலரிடம் ரூ.50 கோடி அளவுக்கு மோசடி செய்தது. இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி, 2 பேரைக் கைது செய்து விசாரித்ததில், அவர்களின் தொடர்பு நாடு முழுவதும் இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் தங்களின் இந்த மோசடித் திட்டத்தில் திரைப்பட பிரபலங்களையும் ஈடுபடுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- தேசிய அளவில் இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படும் முதல் மாநிலமாக தெலங்கானா உள்ளது. அடுத்து தமிழ்நாடும், தில்லியும் உள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. வங்கி, நிதி சார்ந்த சேவைத் துறை, காப்பீடு, மருத்துவத் துறைகள்தான் இணையவழிக் குற்றவாளிகளின் பிரதான இலக்காக உள்ளன.
- இந்தியாவில் நிகழாண்டில் இணையவழிக் குற்றங்களால் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாக நிதி இழப்புகள் ஏற்படும்; இதில் 70 சதவீதம் உயர் மதிப்புள்ள மோசடியாக இருக்கும் என்று இந்த வகை குற்றங்களை ஆராய்ந்து வரும் "கிளவுட் எஸ்இகே' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2024-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.11,333 கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டதால், அதை மையமாகக் கொண்டே மேற்கண்ட அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
- முந்தைய குற்றங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தை மையமாகக் கொண்டு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில், வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்த்து போராடத் தேவையான நடவடிக்கைக்கான நுண்ணறிவை வழங்க உள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் மீதான இணையவழித் தாக்குதல்கள் பொதுவானதாகிவிட்டன. இதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களையும், குற்றங்களில் தப்பிக்கும் நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். அந்த நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான முன்னுரிமைகளை அரசு அளிக்க வேண்டும்.
- இதற்கு பாரம்பரிய பாதுகாப்பு தீர்வுகள் மட்டும் போதாது. நவீன இணையவழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதைக் காட்டிலும் உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் உடனடியாகக் களமிறங்கினால் மட்டுமே இணையவழி அச்சுறுத்தல்கள் தீவிரமடையும் முன்பாக, தற்காத்துக் கொள்ள முடியும்.
- ஒவ்வொரு துறையிலும் மேம்பட்ட எண்மமயமாக்கலை நோக்கி இந்தியா முன்னேறிவரும் நிலையில், இணையவழித் தாக்குதல்கள் அவற்றுக்கு பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்தின் சூழலைக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படும் நிபுணர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஊழியர்களும் எதிர்வினையாற்றி, சூழலைப் புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருக்க பயிற்சியளிக்க வேண்டும்.
- இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக அரசின் அறிவுறுத்தல்களை தனிநபர்கள் கடைப்பிடிக்க வேண்டும். முதலீடு சார்ந்த கவர்ச்சிகர அறிவிப்புகள், காவல் அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு வரும் "டிஜிட்டல் அரஸ்ட்' மிரட்டல்கள், வங்கிப் பரிமாற்றங்களில் கூடுதல் கவனத்துடன்இருத்தல் போன்றவற்றால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
- பாதுகாப்பான கடவுச்சொற்கள் (பாஸ்வேர்ட்கள்), நம்பகமான செயலிகளைப் பயன்படுத்துதல், பொது இடங்களில் இலவச இணைய வசதியைப் பயன்படுத்தி நிதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தரவுகள் திருடப்படும் அபாயம் இருப்பதை அறிந்துகொள்ளுதல் போன்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சுய விழிப்புணர்வே இணையவழி மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்க உதவும்.
நன்றி: தினமணி (05 – 03 – 2025)