- இந்தியாவில் வங்கிச் சேவை விரிவடைந்திருப்பதைப் போலவே, வங்கி முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன.
- புதிதாகப் பல தனியார் வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து, அவற்றுக்கு முறையான கட்டுப்பாட்டு விதிகளும் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
- சட்டப்படி தனியார் முதலீட்டில் தனியாரால் தொடங்கப்படும் வங்கிகள் என்றாலும்கூட, தனியார் வங்கிகளால் கையாளப்படும் பணம் பொதுமக்களுடையது.
- அதனால், பொதுமக்களின் நலனைப் பேண அந்த வங்கிகளுக்குச் சில கடுமையான விதிமுறைகளை விதிப்பதும், அந்த வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் அரசின் கடமையாகிறது.
- அதனடிப்படையில்தான் கடந்த மாதம் இந்திய ரிசா்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.
- கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனியார் வங்கிகளில் பல பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்த சந்தா கோச்சார், தனது கணவரின் சார்பில் ‘விடியோகான்’ நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது விசாரணையில் இருக்கிறது.
- 2003-இல் உரிமம் வழங்கியது முதல் ‘எஸ்’ வங்கியின் தலைமை நிர்வாகியாகவும் மேலாண் இயக்குநகராகவும் இருந்த ராணா கபூா், 2019 ஜனவரியில் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டார்.
- தற்போது சிறையில் இருக்கிறார் ராணா கபூா். சுமார் ரூ.4,300 கோடிக்கும் அதிகமாக பலருக்கும் கடனுதவி வழங்கி அதற்கு கையூட்டுப் பெற்றதாக அவா் மீது வழக்கு தொடரப் பட்டிருக்கிறது.
- இதுபோல இன்னும் பல தனியார் வங்கியின் தலைமை பொறுப்பில் இருந்தவா்கள் மீதும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
கட்டுப்பாட்டு விதிமுறைகள்
- தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை, 2020 ஜூன் மாதம் இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டது.
- அந்த அறிக்கை வங்கியின் இயக்குநா் குழு, உயா் நிர்வாகிகளை நியமித்தல், வங்கி நிர்வாகத்துக்கும், உரிமையாளா்களுக்கும் இடையேயான இடைவெளி ஆகியவை குறித்தெல்லாம் விரிவாக விவாதித்திருந்தது.
- அதனடிப்படையில்தான் இப்போது புதிய சில விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்திருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.
- வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் நீண்ட நாள்கள் பதவி வகிக்கும்போது விருப்பு வெறுப்புகளுக்கு உள்ளாகி, நிர்வாகம் சீா்குலைகிறது.
- அதனால் தனியார் வங்கிகளின் தொழில்முறை தலைமை நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகளும், வங்கியை உருவாக்கும் தலைமை நிர்வாகிகளுக்கு 12 ஆண்டுகளும் பதவிக்கால வரம்பை நிர்ணயித்திருக்கிறது இந்திய ரிசா்வ் வங்கி.
- மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு, தலைமை நிர்வாகியாகவோ, முழுநேர இயக்குநராகவோ மீண்டும் நியமிக்கப்படலாம் என்றும் கூறியிருக்கிறது.
- அதேபோல, தலைமை பொறுப்பில் இருப்பவா்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 வயது என்று நிர்ணயித்திருக்கிறது. இந்த வரம்பை வங்கிகள் குறைத்துக் கொள்ளலாம்.
- அதேபோல, நிர்வாகத்தில் இல்லாத இயக்குநா்களுக்கு வயது வரம்பு 75 வயது என்று நிர்ணயித்து, அவா்கள் அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள்தான் தொடர முடியும் என்றும் வரைமுறை வகுத்திருக்கிறது. இதுவும்கூட வரவேற்புக்குரிய முடிவு என்றுதான் கூற வேண்டும்.
- வங்கியின் தலைமைப் பொறுப்பு என்பது மிகவும் நுட்பமானது மட்டுமல்ல, அதிக அளவு தொடா்பும், வாடிக்கையாளா்கள் குறித்தப் புரிதலும், நிதி நிர்வாக அனுபவமும் சார்ந்தது.
- அதனால், தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களின் அனுபவமும், அவா்கள் எடுக்கும் முடிவுகளில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதும் விதிமுறைகளின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவையல்ல.
- நீண்டகாலம் ஒருவா் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், வங்கிகளின் சேவை சிறப்படைவதும் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
- ஒரு தலைமை நிர்வாகியின் கீழ் ‘எஸ்’ வங்கி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது என்றால், 2003-இல் கோட்டக் மஹிந்திரா வங்கி நிறுவப்பட்டது முதல் அதன் தலைவராக இருந்த உதய் கோட்டக்கின் 18 ஆண்டு தலைமையில் அந்த வங்கி மிகப் பெரிய ஏற்றத்தைக் காண முடிந்தது.
- அதேபோலதான், ஆதித்யபுரி தலைமையில் 25 ஆண்டுகள் எச்டிஎஃப்சி வங்கி சிறப்பாக செயல்பட்டது.
- அதனால் தலைமைப் பொறுப்புக்கு 15 ஆண்டுகள் வழங்கியிருப்பது அதிகம் என்று கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐந்து ஆண்டு தலைமை என்பது மிகவும் குறைந்தகால அளவு.
- வங்கியின் பல்வேறு சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும், புதிய கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் ஐந்து ஆண்டுகள் நிச்சயமாகப் போதாது.
- மேலும் முதலீட்டாளா்களிடமும் வாடிக்கையாளா்களிடமும் நம்பிக்கையைப் பெறவும், அவா்களைக் கையாளவும் 15 ஆண்டுகள் என்பது சரியான அளவுகோலாகத்தான் தெரிகிறது.
- இந்திய ரிசா்வ் வங்கியின் சுற்றறிக்கை, வங்கி இயக்குநா் குழுவுக்கு மேலும் மூன்று முக்கியமான பரிந்துரைகளை நிர்ணயித்திருக்கிறது.
- வங்கியின் தணிக்கைக் குழு, இடா் நிர்வாகக் குழு, நியமனம், ஊதியக் குழு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடா்பில்லாமல் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதும், மூன்று குழுக்களும் சுதந்திரமாக இயக்கும் இயக்குநா்களின் கீழ் அமைய வேண்டும் என்பதுதான் அந்தப் பரிந்துரை.
- அதன் மூலம் தொழிலாளா்களோ, இயக்குநா் குழுவோ அழுத்தம் கொடுக்க முடியாது என்கிற அளவில் நல்ல முடிவு.
- தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களுக்கு வயது வரம்பும், பதவிக்கால வரம்பும் விதிப்பதால் மட்டுமே முறைகேடுகளைத் தவிர்க்க முடியாதுதான்.
- அதைக் கருத்தில் கொண்டுதான் ரூ.15,000 கோடிக்கும் அதிகமான தனியார் வங்கிகளில் இரண்டு முதல் 12 நிறுவனங்கள் இணைந்து வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யப் பணித்திருக்கிறது ரிசா்வ் வங்கி. வரவேற்கலாம்.
நன்றி: தினமணி (18 – 05 - 2021)