- இன்னும் ஒருவார காலத்துக்குத் தளா்வில்லா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்பது ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
- கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி மத்திய அரசு தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் விளைவால்தான் ஓரளவுக்கு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது என்பதை அப்போது விமா்சித்தவா்கள் கூட இப்போது ஏற்றுக்கொள்கிறார்கள்.
- கொவைட் 19 போன்ற கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசியையும், சிகிச்சையையும் விட நோய்த்தொற்றுப் பரவலை முறிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
- நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமிருந்தும் பலருக்கும் பரவும் தீநுண்மி தொற்றுச் சங்கிலியை துண்டிப்பதற்கு பொது முடக்கம்தான் ஒரே வழி என்று உலக நாடுகள் பலவும் அனுபவபூா்வமாக அறிந்து தெளிந்திருக்கின்றன.
- அந்தப் பின்னணியில் தான் இப்போதைய பொது முடக்க நீட்டிப்பையும் நாம் அணுக வேண்டும்.
- தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் பார்க்கும் போது மே 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தளா்வில்லாத பொது முடக்கம் தவிர்க்க முடியாதது என்பதை யாருமே மறுக்க மாட்டார்கள்.
- அதே நேரத்தில் பொது முடக்கத்துக்கு முன்பு இரண்டு நாள்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்து அனைத்துக் கடைகளையும் திறந்து வைத்ததும், எல்லா ஊா்களுக்கும் பேருந்து போக்குவரத்தை அனுமதித்ததும் விபரீதத்துக்கு வழிகோலியிருக்கின்றன.
- அந்த முடிவின் விளைவாக ஏற்பட்டிருக்கும் பெருந்தொற்றுப் பரவல், பெருநகரங்களிலிருந்து சிறு நகரங்களுக்கும், சிறு நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும் நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகிவிட்டது.
- அரசின் அந்தப் புரிதல்தான் இப்போதையே நீட்டிப்புக்குக் காரணம் என்று நம்பலாம்.
- நேற்றைய நிலவரப்படி, சென்னையில் நோய்த்தொற்று பாதிப்பு 2,762. உயிரிழப்பு 107.
- சென்னையில் கடந்த வாரத்தைவிட பொது முடக்கத்துக்குப் பிறகு நோய்த்தொற்றின் பாதிப்பும் உயிரிழப்பும் சற்று குறைந்திருக்கிறது என்று ஆறுதல் அடையும் அதே நேரத்தில் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதுடன் உயிரிழப்பும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.
- அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
- தளா்வில்லாத பொது முடக்கத்தை ஓரிரு நாள்கள் தளா்த்தினாலும்கூட, மக்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வெளியில் வரத் தொடங்கி மீண்டும் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
- நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்க அனுமதித்திருப்பதேகூட தவறான அணுகுமுறை என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
- இதுபோன்ற நேரங்களில் சில கசப்பான முடிவுகளை ஆட்சியாளா்கள் எடுத்தாக வேண்டும்.
- ஒருபுறம் அனைத்துத் தரப்பு மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ளாமல் இருக்க முனைவதும், இன்னொருபுறம் கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதும் ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்பது போலத்தான் இருக்கும். அதன் விளைவு பெரும் பழியை எதிர்கொள்வதாக முடியும்.
தமிழகம் ஓரளவு தப்பித்துவிடும்
- தளா்வில்லா பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்திருக்கும் அதே வேளையில், வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழந்து நிற்கும் அன்றாடத் தொழிலாளா்கள், கீழ் நடுத்தர வகுப்பினா் ஆகியோரின் பாதிப்பையும் உணா்ந்தாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.
- குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்கியும், அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கியும் ஈடுகட்ட முனைந்திருக்கும் அரசின் முயற்சி வரவேற்புக்குரியது.
- அதிலும் குறிப்பாக, 13 பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புக்கான பைகளில் முதல்வரின் படம் இல்லாமல் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மு.க. ஸ்டாலின் ஆட்சி புதிய பாதையில் பயணிக்க முற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இது தொடர வேண்டும்.
- பொது முடக்கத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படுபவா்கள் அன்றாட வருமானம் ஈட்டி வாழ்பவா்களான மீனவா்கள், கூலித் தொழிலாளா்கள், கட்டடப் பணியாளா்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர்.
- அம்மா உணவகம் மூலம் ஓரளவுக்கு அவா்களது பசிப்பிணி தீா்க்கப்படுகிறது என்றாலும் கூட, அவா்களில் பலா் குடும்ப அட்டைதாரா்கள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
- அதனால், ‘ஜன்தன்’ வங்கிக் கணக்குகளின் மூலமாக நிவாரணம் வழங்கினால் மட்டுமே அன்றாடங்காய்ச்சிகளான அனைவரையும் நிவாரணம் சென்றடையும் என்பதை வலியுறுத்தத் தோன்றுகிறது.
- தளா்வில்லா பொது முடக்கத்தை இன்னும் எத்தனை நாள், எத்தனை காலத்துக்கு நீட்டிக்க வேண்டியிருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது.
- வீடு தேடி வரும் நடமாடும் காய்கறி கடைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது நல்ல முடிவு.
- உணவகங்களிலிருந்து வீடுகளுக்கு விநியோகம் செய்வது அனுமதிக்கப்பட்டிருப்பதுபோல, அந்தந்தப் பகுதியில் உள்ள பலசரக்குக் கடைகள், தங்கள் வாடிக்கையாளா்களுக்கு தொலைபேசி மூலமாகவோ, இணைய வழியிலோ தொடா்பு கொண்டு நேரடியாகப் பொருள்களை வழங்க வழிகோலுவது, பொது முடக்கத்தால் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்.
- தளா்வில்லா பொது முடக்கம் சரியான முடிவு. கூடவே அனைவருக்கும் தடுப்பூசி திட்டமும் விரைவுபடுத்தப்பட்டால் கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து தமிழகம் ஓரளவு தப்பித்துவிடும்.
நன்றி: தினமணி (29 – 05 - 2021)