TNPSC Thervupettagam

தேவையற்ற தலையீடு!

January 20 , 2025 4 days 36 0

தேவையற்ற தலையீடு!

  • கேரளத்தின் புகழ்பெற்ற சமூக சீா்திருத்தவாதியான நாராயண குரு நிறுவிய சிவகிரி மடத்தின் தலைவராக உள்ள சுவாமி சச்சிதானந்தா, கடந்த டிச.31-ஆம் தேதி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது ‘கோயில்களுக்கு செல்லும் ஆண் பக்தா்கள் மேல் சட்டை அணியக் கூடாது என்கிற முறை கைவிடப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.
  • அதே நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வா் பினராயி விஜயன், ‘கேள்விக்குரிய இந்த நடைமுறை நாராயண குரு நிறுவிய கோயில்களில் கைவிடப்பட்டுள்ளது. முற்போக்கு சிந்தனை கொண்ட இந்த மாற்றம் தவிா்க்க முடியாதது’ என்று பேசியது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஈழவ சமுதாயத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டது சிவகிரி மடம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கோயில்களில் மேல்சட்டை அகற்றும் விவகாரம் ஹிந்துக்களிடையே பிரிவினையை உருவாக்கக் கூடாது என்று ஈழவ சமுதாயத்தின் ஸ்ரீநாராயண தா்ம பரிபாலன யோகம் அமைப்பின் பொதுச் செயலா் வெல்லப்பள்ளி நடேசனும், காலம்காலமாகப் பின்பற்றும் மரபுகள் காக்கப்பட வேண்டும் என்றும் ஹிந்துக்கள் மீது தாங்கள் விரும்பும் எல்லாவற்றையும் திணிக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாயா் சா்வீஸ் சொஸைட்டி பொதுச் செயலா் ஜி. சுகுமாரன் நாயரும் கூறியுள்ளனா்.
  • கேரளத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை என்பது இல்லை. திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஆண்கள் வேஷ்டி மட்டுமே அணிய வேண்டும். டிரவுசா், பேண்ட் போன்றவற்றை அணிந்து செல்ல அனுமதி இல்லை. பெண்கள் சேலை அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.
  • குருவாயூா், திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில், கோட்டயம் ஏற்றுமானூா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மேல் சட்டை அணிந்தால் அனுமதி இல்லை. எனினும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்தவிதமான ஆடைக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதேபோன்று, தமிழகத்திலும் திருச்செந்தூா், சுசீந்திரம், கன்னியாகுமரியில் உள்ள சில கோயில்கள், அய்யா வைகுண்டா் தலைமைப் பதி சாமிதோப்பு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் உள்ள அய்யா வைகுண்டா் நிழல் தாங்கல்கள் (கோயில்கள்) போன்றவற்றில் மேல்சட்டை அணிய அனுமதி கிடையாது.
  • கோயில் சந்நிதானத்தின் தாக்கம் ஆண்களுக்கு இதயத்தின் வழியாகவும், பெண்களுக்கு நெற்றியின் வழியாகவும் ஏற்படுகிறது என்பது பக்தா்களின் நம்பிக்கை என்கிறாா் அகில கேரள தந்திரி மண்டலத்தின் தலைவா் என்.ராதாகிருஷ்ணன் போற்றி.
  • பெரியவா்களுக்கு இளைஞா்கள் மரியாதை அளிப்பதுபோன்றே, இறைவனுக்கு மரியாதை அளிக்கும் விதமாகவே அரசா்கள் உள்ளிட்ட பக்தா்கள் கோயில்களில் இடுப்புக்கு மேல் ஆடை அணிவதில்லை என்கிறாா் வரலாற்று ஆய்வாளா் மனு எஸ்.பிள்ளை.
  • மேல்சட்டை, குறிப்பிட்ட கோயில்களில் பெண்களை அனுமதிப்பது போன்றவை குறித்து அவ்வப்போது விவாதம் எழுகிறது. கோயில் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழகத்திலும் இதர மாநிலங்களிலும்கூட அவ்வப்போது குரல்கள் எழுகின்றன.
  • கடந்த 2023 செப்டம்பரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கா்நாடக முதல்வா் சித்தராமையா, கோயில்களில் சட்டையைக் கழற்றக் கூறுவது மனிதத் தன்மையற்றது’ என்று பேசினாா். அவரும் கடவுள் நம்பிக்கையற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கோயிலுக்கே செல்லாதவா்கள், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவா்கள் போன்றவா்கள் கோயில் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்புவது வேடிக்கையாக உள்ளது. அரசியல் கட்சிகள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கட்சிகளுக்குத் தொடா்பில்லாதவா்கள் கூறினால், இறை நம்பிக்கையற்ற கட்சியினா் ஏற்றுக்கொள்வாா்களா?
  • மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, பெண்கள் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என்பது போன்ற கருத்துகளை சில அரசியல்வாதிகள் கூறும்போது அதை அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடுவது என்று விமா்சிக்கிறோம். உணவு எங்கள் உரிமை, எங்கள் ஆடை எங்கள் உரிமை என்று கருத்து சுதந்திரம் குறித்து குரல் எழுப்பப்படுகிறது. அதே ரீதியில் அவரவா் மதவழிபாட்டில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளும் பாா்க்கப்பட வேண்டும்.
  • ஒரு பழக்கம் தற்காலத்துக்குப் பொருந்தாதது என்று ஒருவா் கருதினாலும் அதை பக்தா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவ்வளவு எளிதில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை சில அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
  • ஒடிஸாவில் உள்ள புரி ஜகந்நாதா் கோயில் போலவே அமைக்கப்பட்டுள்ள கண்ணூா் மாவட்டம், தலச்சேரி ஜகந்நாதா் கோயிலில் சட்டை அணிந்து வரும் பக்தா்களை அனுமதிப்பது என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவால் கோயில் போா்க்களம் ஆகிவிடக்கூடாது என்று கருதி இப்போது வரை இது அமல்படுத்தப்படவில்லை.
  • தமிழகத்தில் உள்ள கோயில்களிலும், அவற்றின் அருகிலும் பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள், மாடுகள், கோழிகளைக் கொல்லக் கூடாது என்றும் மீறி செய்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா உத்தரவிட்டாா். ஆனால், கடும் எதிா்ப்பு எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
  • கோயில் நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அந்தந்த மத நம்பிக்கையாளா்களின் உரிமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் ரீதியாகவோ, சட்டரீதியாகவோ தலையிடுவது தவறு. இது ஹிந்து மதத்துக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்கள் உள்பட எந்த மதமானாலும் பொருந்தும்.

நன்றி: தினமணி (20 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்