TNPSC Thervupettagam

தேவையற்ற திருத்தங்கள்

July 28 , 2020 1634 days 854 0
  • கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை அவசரச் சட்டங்களாக நிறைவேற்றி வருகிறது.

  • அவற்றில், சில மசோதாக்கள், அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, அவற்றுக்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அந்த வரிசையில், "சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்டம் - 2006'-இல், மத்திய அரசு பல்வேறு திருத்தங்களைத் தற்போது கொண்டு வர முயற்சித்து வருகிறது.

  • சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கொண்டுவரப்பட்டுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 -இல், ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு மாறாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

  • இது, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய மசோதா, "தேசிய பசுமைத் தீர்ப்பாயம்', உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள இயற்கை வளங்கள், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அழிவுக்குள்ளாகும் நிலை ஏற்படும்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இல்லை

  • தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் என்று உலக அளவில் 190 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்பட்டியலில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

  • அதாவது, கடந்த ஆண்டு இருந்ததைவிட இவ்வாண்டு 14 இடங்கள் முன்னேறியுள்ளது இந்தியா. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 168 - ஆவது இடத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

  • இதன்மூலம் தெரியவருவது, தொழில்துறை வளர்ச்சிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இல்லை என்பதே. சுரங்கங்கள் அமைக்கவும் தொழிற்சாலைகள் கட்டவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது,

  • சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துகளைப் பெற வேண்டும் என்று "சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்டம் - 2006' -இல் வலியுறுத்தப்பட்டிருந்தது.

  • ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு குழுவின் அறிக்கையின் சிறு குறிப்பு மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டு வருகிறது.

  • அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

  • இந்நிலையில், சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 நடைமுறைக்கு வந்தால், இதுவரை வெளியிடப்பட்டு வந்த மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையும் இனி மறைக்கப்படும்.

  • சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்டம் 2006 இன்படி, சுரங்கங்கள் அமைத்து கனிம வளங்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகள்வரை மட்டுமே குத்தகை வழங்கப்பட்டது. ஆனால், சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 நடைமுறைக்கு வந்தால், குத்தகைக் காலம் 50 ஆண்டுகள்வரை நீட்டிக்கப்படும்.

  • இதன்மூலம், பன்னாட்டு நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் மட்டுமே பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.

  • அதேபோல், நீர்வழிச்சாலை, சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அனுமதி பெற வேண்டிய அவசியமும் இருக்காது.

  • இதனால் காப்புக் காடுகள் ("ரிசர்வ் பாரஸ்ட்') வழியாகக் கூட எளிதாக சாலை அமைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால், பல்லுயிர்க் கூட்டம் மிகப் பெரிய அச்சுறுத்தலைச் சந்திக்கும்.

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், துறைசார்ந்த அலுவலர்களும் தொடர்புடைய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கருத்துகளை முன்வைக்க முடியும்.

  • சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கு, மத்திய - மாநில அரசுகள் சார்பில் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா - 2020 நடைமுறைக்கு வந்தால், மாநில வல்லுநர் குழு நிராகரித்தாலும், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமலேயே மற்றொரு வல்லுநர் குழுவை அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு தன்வசப்படுத்தியுள்ளது. இதன்மூலம், வல்லுநர் குழுக்களின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்படும்.

கடமையும் பொறுப்பும்

  • அதேபோல், 50ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர மீட்டர் வரையிலான பரப்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கு மட்டுமே மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், 20ஆயிரம் முதல் 50ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலான திட்டப் பணிகளுக்கு மதிப்பீட்டுக் குழுவின் ஒப்புதல் தேவையில்லை எனவும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

  • மேலும், இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்பது அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

  • இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா-2020, சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • மதிப்பீட்டுக் குழுவில் இயற்கை ஆர்வலர்களையும், பழங்குடியின மக்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்தால்தான், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.

  • உலக மயமாக்கல், புவி வெப்பம் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு இடையே, எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான குடிநீரும் தூய்மையான காற்றும் கிடைப்பதை உறுதி செய்வதற்கு நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என கடந்த கால் நூற்றாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

  • அந்த வகையில், சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா - 2020 குறித்தும், அதனால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

நன்றி: தினமணி (28-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்