- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகை ஆழத் தொடங்கிவிட்டது. ஒலிம்பிக்கிலும் அது கால் பதித்துவிட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பல ஆக்கபூர்வமான விஷயங்களுக்காகக் கையில் எடுத்திருக்கிறார்கள். ‘ஒலிம்பிக் ஏஐ திட்டம்’ என்கிற பெயரில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டத்தை வகுத்துள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
பாதுகாப்புப் பணிகள்:
- உலக நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் ஒலிம்பிக்கிற்காகப் பாரிஸ் வந்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்வது பிரான்ஸ் அரசுக்கு மிகப் பெரிய சவால்தான்.
- அடுக்கடுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக ஒலிம்பிக் கிராமம், போட்டிகள் நடைபெறும் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்புப் பணிகளுக்காக ஏஐ தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.
- பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கக்கூடிய நபர்கள், உடைமைகள், வாகனங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றைப் படம்பிடித்துப் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அனுப்பிவிடும். தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் கொண்டு சென்றால் அவர்களையும் கண்டறிந்து தகவல் சொல்லிவிடுமாம் ஏஐ கேமரா.
மொழிபெயர்ப்புச் சேவைகள்:
- ஒலிம்பிக் நிகழ்வின்போது டன் கணக்கில் வெளியேறும் மாசுகளைக் கட்டுப்படுத்த பாரிஸ் வருவோர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு உதவும் வகையில் மெட்ரோ ரயில்களில் ஏஐ தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு கருவிகளுடன் 3,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
- இதேபோல பிரெஞ்சு மொழியிலிருந்து கொரியா, அரபி உள்பட 16 மொழிகளில் பதில் அளிக்கக்கூடிய ஏஐ மொழிபெயர்ப்புக் கருவிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கூகுள் ஏஐ, மைக்ரோசாஃப்ட் ஏஐ போன்று திறன்பேசிகளில் மேம்படுத்தப்பட்டுள்ள ஏஐ வசதிகளைக் கொண்டும் பாரிஸில் பயணிப்பவர்கள் மொழி தடையைச் சமாளித்துவிடலாம்.
சமூக வலைதளத்தில் ஏஐ:
- ஒலிம்பிக்கின்போது சமூக வலைதளத்தில் சில பிரச்சினைகள் வெடிப்பது வழக்கமான ஒன்று. நாடுகளுக்கு இடையே, வீரர் வீராங்கனைகளுக்கு எதிராக நடைபெறும் இணையத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஏஐ பயன்படுத்தப்படுகிறது.
- அதாவது, ஒலிம்பிக் சைபர் பாதுகாப்புப் பணிகளில் ஏஐ முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பதிவிடப்படும் தரவுகளைக் கண்காணிக்கும் ஏஐ, வெறுப்புப் பேச்சுகள், அமைதியைச் சீர்குலைக்கும் பதிவுகள் ஆகியவற்றைப் புகார் செய்து நீக்கிவிடும். ஆக, ஒலிம்பிக்கிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் சேவை, தேவையாகியிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)