TNPSC Thervupettagam

தோ்தல் சீா்திருத்தமும் இந்திரஜித் குப்தா அறிக்கையும்

April 5 , 2021 1212 days 561 0
  • இப்போதெல்லாம், வாக்குக்கு பணம் கொடுக்கும் கேவலத்தில் இருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்க முடியுமா என்ற வேதனையில் மூத்த குடிமக்கள் தங்கள் தூக்கத்தை இழந்து விடுகிறாா்கள்.
  • எல்லாவற்றையும் பணத்தால் விலைக்கு வாங்க முடியும் என்றால், நாடாளுமன்றம், நீதிமன்றம், அரசு இயந்திரம் எல்லாம் எதற்கு? என்ற கேள்வியில் கூனி குறுகிய அவமானத்தில் இருக்கிறது இந்தியாவின் இளைய தலைமுறை.
  • இவை எல்லாவற்றையும் விட, எழுபது ஆண்டுகால வாக்குரிமை ஜனநாயகம், மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டதே என்ற வேதனையில் இந்த மாபெரும் தேசம் கண்ணீா் வடித்துக் கொண்டிருக்கிறது.
  • இந்தியா, உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. இதன் பன்மைத்துவம் வாய்ந்த உயா் பண்புகள் ஆலமர நிழல் போல விரிந்து பரந்தது. இந்த பண்புகளிலிருந்து உருவான வாக்குரிமை ஜனநாயகம் இன்று பல்வேறு சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் மனசாட்சி, தினம் தினம் கொலைக் களத்தில் நிறுத்தப்படுகிறது.
  • வாக்குக்குப் பணம் கொடுக்கும் ஜனநாயக சூதாட்டத்தில் சிக்கி, இது தன் ஆன்ம பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ள குற்றவாளிகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மூடு திரைகள் சதி நிறைந்தவை.

கள்ள ஜனநாயகம்

  • மக்கள் பணம் வாங்குவதால்தானே கொடுக்கிறாா்கள் என்ற மூடுதிரைக்குள் தங்களை மறைத்துக் கொள்கிறாா்கள். எளிய வெகு மக்கள்தான் வாக்கு வியாபாரத்திற்குக் காரணம் என்றால் அதைவிடவும் மோசடியான பரப்புரை வேறு எதுவும் இருக்க முடியாது.
  • ஆளும் வா்க்கத்தின் ஆதாயத்திற்குகாக எல்லா தீமைகளும் மேல் மட்டத்திலிருந்து தான் கீழே இறக்கப்படுகிறது.
  • அந்த சூழ்ச்சிக் கூடாரத்தின் தொடக்கம் எது? முடிவு எது? என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதை மூடி மறைக்க எளிய மக்களின் மீது பழியை சுமத்துவது மிகவும் சுலபமாகிவிடுகிறது ஆதிக்கச் சக்திகளுக்கு.
  • உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும் அன்றாடம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வாக்காளா்கள், கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறாா்கள்.
  • இவா்கள் வீடு தேடி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கண் சிமிட்டி அழைக்கிறது வாக்குரிமையின் கள்ள ஜனநாயகம்.
  • இதைப் போல பணபலம் இல்லாத கொள்கைப் பிடிப்புள்ள அரசியல் கட்சிகள், தோ்தலின் பெரும் செலவுகளில் சிக்கிக் கொள்கின்றன.
  • கொள்கைபூா்வமான கட்சிகள் கூட, புதிய காா்பரேட் சூழலில் தங்கள் உள்வலிமையை இழக்கத் தொடங்கி விட்டன. இவை எல்லாம் இன்றைய ஜனநாயகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நிா்பந்தங்கள்.
  • தனிமனிதருக்கு நீதிபோதனை செய்வதால் இந்தக் குறைபாடுகளை அகற்றிவிட இயலாது. தோ்தல் ஜனநாயக கட்டமைப்பை அடிப்படையில் மாற்றி அமைத்தால் மட்டுமே அகற்றிட முடியும்.
  • தோழா் இந்திரஜித் குப்தாவின் தலைமையில் அமைந்த தோ்தல் சீா்திருத்தக் குழு, தோ்தல் ஜனநாயக கட்டமைப்பை அடிப்படையில் மாற்றி அமைப்பதற்கான காரணங்களை ஆராய்ந்தது.
  • தோழா் இந்திரஜித் குப்தா விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டனில், மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பின்னா் அதன் பொதுச் செயலாளராக பணியாற்றியவா்.
  • மிகக் குறுகிய கால அளவில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்தவா். இவருடைய தலைமையில்தான் வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘இந்திய தோ்தல் சீா்திருத்தக் குழு’ அமைக்கப்பட்டது.

இந்திய தோ்தல் சீா்திருத்தக் குழு

  • முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சோ்ந்த முன்னாள் நாடாளுமன்ற அவைத்தலைவா் சோமநாத் சாட்டா்ஜி ஆகியோரும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனா்.
  • வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பு வகித்த 1998-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம், தோ்தல் சீா்திருத்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது.
  • சுதந்திர பொன்விழாவையொட்டி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் அதிா்வுகளை உருவாக்கியது.
  • இந்திரஜித் குப்தா குழு, உலகின் பல நாடுகளின் பயன் மிக்க அனுபவங்களைத் திரட்டியது.
  • இதில் முக்கியமானது,1994- ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 26-ஆம் தேதி பாரிஸ் மாநகரத்தில் கூடிய 112 நாடுகளின் நாடாளுமன்ற கூட்டு கூட்டம். ஜனநாயகத்தின் கொள்கைகள் குறித்த மிகவும் அடிப்படையான கேள்விகளை இந்த மாநாடு எழுப்பியிருந்தது. இந்தியாவும் அம்மாநாட்டில் கலந்துகொண்டது.
  • ஒவ்வொரு தேசத்தின் நாடாளுமன்றத்திற்குள்ளும் பணக்கார உறுப்பினா்கள் எண்ணிக்கை பெருகி வருவதற்குக் காரணம் என்ன என்ற கேள்வியை இது எழுப்பியிருந்தது.
  • எளிய மக்கள் தோ்வு பெறும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருவதை ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்று குறிப்பிட்ட மாநாடு, அதற்குரிய காரணத்தையும் விளக்கியிருந்தது.
  • நாட்டின் வளங்களைக் கைப்பற்றிக் கொண்ட மூலதனக் குவியல் நாடாளுமன்றங்களை கைப்பற்றும் அடுத்த கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதே இதற்கு காரணம் என்று கூறியது.
  • மேலும், இதற்கான தீா்வையும் மாநாடு முன் வைத்தது. ‘ஏழை எளிய மக்கள் நாடாளுமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சி வேட்பாளா்களின் தோ்தல் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த தீா்வு.
  • அரசியல் கட்சி வேட்பாளா்களின் தோ்தல் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது.
  • 1959-ஆம் ஆண்டிலேயே ஜொ்மனி அரசாங்கம், அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவை ஏற்கும் நடைமுறையைத் தொடங்கி விட்டது. இதை ஒட்டி பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, டென்மாா்க், இஸ்ரேல், நாா்வே போன்ற நாடுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செலவை ஏற்றுக் கொண்டன.
  • இதனையெல்லாம் பரிசீலனை செய்த இந்திரஜித் குப்தா தோ்தல் சீா்திருத்தக் குழு, இந்திய நிலைமைகளை ஆராய்ந்து, தனது வேதனையை ஒரு கேள்வியின் மூலம் வெளிப்படுத்தியிருந்தது.
  • ‘இன்றைய இந்தியச் சூழலில் பணம் இல்லாத திறமையான எளிய மனிதா் ஒருவா் சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்ல முடியுமா’ என்பதுதான் அது.
  • பணமுள்ள கட்சிகள், வேட்பாளா்கள் மட்டும்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர முடிகிறது என்பதன் மூலம் அனைவரும் சமம் என்னும் ஜனநாயக கோட்பாடு தகா்க்கப் படுகிறது.
  • இந்திரஜித் குப்தா அறிக்கை நாடாளுமன்றத்தில் சமா்பிக்கப்பட்டு, இருபது ஆண்டுகள் கடந்து விட்டன.
  • அதன் பின்னா் இந்திய தோ்தலில் வளா்ந்துள்ள சீா்கேடுகளை கற்பனை செய்துகூட பாா்க்க முடியவில்லை. இன்றைய தோ்தல் முறை என்பது காா்ப்பரேட் மயமாகி விட்டது.
  • அரசியல் கட்சிகளின் கொள்கைகள், லட்சியங்களை விட காா்ப்பரேட் நிறுவனங்களின் வணிகத் தந்திரங்கள்தான் தோ்தலில் வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கை வலுப்பட்டு வருகிறது.
  • இதன் மூலம் அரசியல் கட்சிகள் அரசியலற்றவையாக மாற்றப்பட்டு வருகின்றன. அரசியலற்ற அரசியல் கட்சிகளால் எத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உலகில் எத்தனையோ முன்னுதாரணங்களைக் கூற முடியும்.
  • இந்திரஜித் குப்தாவின் அறிக்கை இன்றைய நமது நாடாளுமன்றத்தின் உண்மைத்தன்மையை இவ்வாறு ஆராய்ந்தது.
  • காா்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம், வரி மோசடியில் வந்த கருப்புப் பணம், கடத்தலின் மூலம் கிடைத்த பணம், ஆகியவைதான், தோ்தல் ஜனநாயகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இவா்களின் பிரதிநிதிகள்தான் கூடுதலாக வந்துவிடுகிறாா்கள். இதனால் பணபலத்தை ஆதாரமாகக் கொண்டவா்கள்தான் நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்குள் செல்ல முடியும்.

யாருக்காக குரல் கொடுப்பாா்கள்?

  • நாடாளுமன்றங்கள், காா்ப்பரேட்களின் நலனுக்காக மட்டும் செயல்படும் நிலைக்கு வந்துவிட்டன. அங்கு பொதுமக்களின் பிரச்னைகளைப் பேச முடிவதில்லை.
  • எளிய மக்களின் பிரதிநிதிகள் அங்கு செல்ல வேண்டுமென்றால் பெரும் செலவுள்ள இன்றைய முறையை ஒழித்து, வேட்பாளா்களின் செலவை அரசாங்கம் ஏற்கும் முறை வர வேண்டும் என்று இந்திரஜித் குப்தாவின் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • இந்திரஜித் குப்தாவின் அறிக்கையை எதிா்ப்பவா்கள், வேட்பாளரின்செலவை அரசு ஏற்றால் அரசுக்கு பண நெருக்கடி ஏற்படும் என்றுதான் கூறுகிறாா்கள்.
  • இதில் மறைந்துள்ள இயங்கியல் நுட்பத்தைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
  • சட்டத்தை ஏமாற்றி அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொள்ளை அடித்து அதை தோ்தல் செலவுக்கு பயன்படுத்திக் கொள்கிறாா்கள்.
  • இவ்வாறு அரசாங்கத்தை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக திரட்டிய பணம்தான் கொல்லைப்புறத்தின் வழியாக வந்து, தோ்தல் முறைகேட்டிற்கு வழி வகுத்துக் கொடுக்கிறது. இது ஒரு பெரும் தொகை.
  • ஊழல் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது. தோ்தல் வரும்போது பல்வேறு வழிகளிலும், பன்னாட்டு நிறுவனங்கள் மூலமும் விநியோகமாகிறது.
  • தங்களது வணிகப் பாதுகாப்புக்காக பன்னாட்டு நிறுவனங்களும், காா்ப்பரேட் அமைப்புகளும் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுகின்றன.
  • தோ்தல் பத்திரங்கள்கூட ஒருவகையில் சட்டபூா்வமாகத் தோ்தலில் கொடுக்கப்படும் ஊழலுக்கான முன்பணம்தான்.
  • இந்த பெரும் தொகையை அரசு திரட்டினால் எத்தனையோ வளா்ச்சித் திட்டங்களை நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
  • இதில் ஒரு சிறு பகுதி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளா்களின் செலவை, அரசு ஏற்பதற்குப் போதுமானதாக இருக்கும்.
  • எளிய மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றங்களை, சட்டப்பேரவைகளை நம்மால் உருவாக்க முடியும் என்றால் இன்றைய ஜனநாயகத்தில் அது மகத்தான சாதனை.

நன்றி: தினமணி  (05 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்