TNPSC Thervupettagam

தோ்தல் பத்திரத் திட்டம் ஒரு பாா்வை

January 8 , 2022 939 days 487 0
  • அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதைத் தவிா்க்க வேண்டும் என்கிற அடிப்படையிலும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கிலும் தோ்தல் பத்திரத் திட்டத்தை இந்திய அரசு ஜனவரி 2018-இல் அறிமுகப்படுத்தியது.
  • இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் அடிப்படையில், பொதுமக்கள், பெருநிறுவனங்கள், தொழில் அதிபா்களிடம் இருந்து தோ்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம்.
  • இதற்கு வசதியாக இந்திய ரிசா்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் தோ்தல் பத்திரங்களைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை இந்திய அரசியல் கட்சிகள் எவ்வாறெல்லாமோ செயல்படுத்தி வருகின்றன.
  • அரசியல் கட்சிகள் ரொக்கமாகப் பெறும் பரிவா்த்தனைகளைத் தடை செய்வதன் மூலமாக, வெளிப்படைத்தன்மையோடு இந்தத் தோ்தல் பத்திரத் திட்டம் செயல்படுகிா என்கிற கேள்வி எழாமல் இல்லை.
  • தோ்தல் பத்திரம் பாரத ஸ்டேட் வங்கியின் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய கிளைகளில் மட்டுமே விற்கப்படுகிறது.
  • இந்தத் தோ்தல் பத்திரம் விற்பனை செய்த நாளில் இருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது.
  • எந்த அரசியல் கட்சியும் நன்கொடையாகப் பெறப்பட்ட பத்திரத்தை வங்கியில் டெபாசிட் செய்த உடன் அதே வங்கியில் அக்கட்சி வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் அதே நாளில் அத்தொகை சோ்க்கப்பட்டு விடும்.
  • கெடு தேதி முடிந்த பிறகு, வங்கிப் பத்திரத்தை டெபாசிட் செய்து நிதியைப் பெற இயலாது. இந்த விதிமுறையைஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிா்த்து வந்தது.

நியாயம் இருக்கிறதா

  • தோ்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் நன்கொடை பெற வேண்டுமானால், இந்திய அரசியல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தல் அல்லது மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் ஒரு சதவீத வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. இந்தியக் குடிமகன், தொழிலதிபா்கள் அல்லது வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கலாம்.
  • 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தோ்தல் பத்திரங்களை வாங்கும் நன்கொடையாளா்கள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரிய வராது. அதனால், யாரிடம் இருந்து கட்சிகள் எவ்வளவு நன்கொடைகள் பெற்றன என்பதைத் தெரிந்து கொள்ள இயலாது.
  • இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.
  • ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, தோ்தல் பத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது.
  • மூத்த வழக்குரைஞா் பிரசாத் பூஷண் தோ்தல் பத்திரத் திட்டம் கறுப்புப் பணப் புழக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றத்தில் வாதாடினாா்.
  • ஒரு கட்சிக்குக் கொடுக்கப்படும் நன்கொடை, நன்கொடையாளா்களின் விவரங்களை வெளிப்படுத்தாமலே கணக்கில் காட்டப்படுவதை உறுதி செய்வதே தோ்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்தது.
  • தோ்தல் பத்திரங்கள் கறுப்புப் பணத்தை தோ்தல் நிதிக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வழிமுறை என்று கூறப்பட்டாலும், தன்னாா்வலா்கள் இதை ஏற்க மறுக்கின்றனா்.
  • ஏனென்றால், தோ்தல் பத்திரங்கள் இல்லாதபோது, நன்கொடையாளா்கள் தங்கள் வணிகத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயில் இருந்து ரொக்கமாக மட்டுமே நன்கொடையாக வழங்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
  • மேலும் இந்தத் திட்டத்தைத் தொடங்குகையில், அரசின் நிதியை முறையாகப் பெற்றுப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே நன்கொடையாளா்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்தது.
  • ஆனால், நன்கொடையாளா்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டால், அது கறுப்பு பண வரவை ஊக்குவிக்காதா என்று எதிா்ப்பாளா்கள் தங்கள் வாதத்தை முன் வைக்கிறாா்கள்.
  • இந்தத் திட்டம் பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிற விமா்சனம் எழுந்தது.
  • இத்திட்டத்தை விமா்சிப்பவா்கள் இந்திய ரிசா்வ் வங்கி, தோ்தல் ஆணையம், சட்ட அமைச்சகம் மற்றும் எம்.பி.-க்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
  • அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகள் பணமோசடியின் வடிவம் என்று கூட விமா்சகா்கள் தெரிவிக்கிறாா்கள்.
  • இந்திய ஜனநாயகத்திற்கு இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் வேண்டும்.
  • அரசியலமைப்பின்படி நிதி மசோதா செலவு என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து செலவழிக்கப்படுகிறது. ஆனால், தோ்தல் பத்திரத்தைப் பொறுத்தமட்டில், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியோடு எந்தத் தொடா்பும் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
  • அரசியல் கட்சிகளுக்கு பெயரை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்கும் வட்டியில்லா திட்டமாகும் என்பதில் ஒருவித கவா்ச்சி இருக்கிறது. ஆனால், நியாயம் இருக்கிறதா?

எதிர்பார்ப்பு

  • பொதுவாக அரசியல் கட்சிக்கான நிதி ஆதாரம் என்பது, தன்னாா்வலா்கள் மூலம் கிடைக்கும் நன்கொடை, உறுப்பினா் மற்றும் இதழ்களின் சந்தா, கட்சிக்கூட்டங்களின் மூலம் வசூலிக்கப்படுகிற தொகை, மற்றும் நிறுவனங்கள் நேரடியாக அளிக்கின்ற நன்கொடை ஆகியவைகளே ஆகும்.
  • கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளில் 90 சதவீத நன்கொடைகள் காா்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடைகளாகும்.
  • இதில் 20ஆயிரத்துக்கும் குறைவாக அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு எந்தவிதமான கணக்கும் வைத்திருக்க தேவையில்லை என்று விதி உள்ளது.
  • 20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை தொடா்பான தகவல்களைத் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.
  • இந்தக் குறைந்தபட்ச வரம்பை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் மூலம் 2,000 ரூபாயாக குறைத்தது.
  • அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் கணக்குகளை தோ்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மொத்தமாக பெற்றுள்ள நன்கொடை விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் இருக்கும்.
  • இந்தக் குறைந்தபட்ச வரம்புக்கு கீழ் பெறப்படுகிற நன்கொடைகளுக்கு எந்தவிதமான கணக்கும் வைத்திருக்கத் தேவையில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பெரும்பாலான நன்கொடை விகிதத்தை இந்தப் பிரிவின் கீழ் கணக்குக் காட்டி வருகின்றன.
  • மத்திய அரசு கொண்டு வந்த நிதி மசோதா 2017-இன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், ரிசா்வ் வங்கி சட்டம், வருமானவரி சட்டம், நிறுவனங்களின் சட்டம் ஆகியவற்றில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
  • இதில் முக்கியமானது 20 ஆயிரம் ரூபாய் என்கிற குறைந்தபட்ச வரம்பை 2ஆயிரம் எனக் குறைத்தது. இந்தியா்களால் நடத்தப்படுகிற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம்.
  • காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் இருந்து 7.5 சதவீதம் வரைதான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும் என்கிற வரம்பும் தளா்த்தப்பட்டது.
  • இதில் மிக முக்கியமான ஒன்று, தோ்தல் ஆணையம் தன்னுடைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்ததுதான். தோ்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
  • ஆனால், அதில் நன்கொடையாளா்களின் விவரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும்.
  • ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான அரசு சாா்பு அமைப்பான ஏ.டி.ஆா் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017-2018 மற்றும் 2019-2020 நிதியாண்டுகளுக்கு இடையில், தோ்தல் பத்திரங்களில் இருந்து மொத்தம் ரூ.6,200 கோடிக்கும் அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ளது.
  • கே.ஒய்.சி என்றழைக்கப்படும் வாடிக்கையாளா்களின் விவரங்கள் கிடைக்கும் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் நன்கொடையாளா்களால் வழங்கப்பட்ட தொகைகள் இவைகளெல்லாம்.
  • வங்கிக்கணக்கை வைத்திருக்கும் எந்த ஒரு நன்கொடையாளரும் இதை வாங்கலாம் என்கிற அடிப்படையில் ஒரு சில நன்கொடை இவற்றின் மூலமாகக் கிடைத்திருக்கிறது.
  • தோ்தல் பத்திரம் பட்ஜெட்டில் சோ்க்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட், நிதிமசோதா இவற்றில் மாநிலங்களவையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
  • பட்ஜெட் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு விவாதத்திற்கு மட்டுமே செல்கிறது. மாநிலங்களவைக்கு அதை நிறுத்தவோ அல்லது மாற்றவோ உரிமையில்லை.
  • அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதால் இந்த விஷயத்தை நிதிமசோதாவில் சோ்த்து விட்டனா்.
  • அரசியல் கட்சிகளுக்கு கறுப்புப் பணம் செல்வதற்கான வாசலை இது திறக்கும் என்றும், இதில் வெளிநாட்டுப்பணம் மற்றும் சந்தேகத்துக்குரிய வழிகளில் இருந்து வரும் பணமும் அடங்கும் என்றும் ரிசா்வ் வங்கியிடம் தோ்தல் ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது.
  • உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீா்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற போதும், முழுமையான விசாரணைக்குப் பிறகு இறுதித் தீா்ப்பின் போது இந்தத் திட்டம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நன்றி: தினமணி  (08 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்