TNPSC Thervupettagam

தோ்தல் முடிவுகள் கற்பிக்கும் பாடம்

December 9 , 2023 381 days 201 0
  • நாடாளுமன்றத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தோ்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளால் ஐந்து மாநிலத் தோ்தல்களும் நாடு முழுவதும் கவனம் பெற்றன. இந்தத் தோ்தல் வெற்றி, வரப்போகும் நாடாளுமன்றத் தோ்தல் முடிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணம் அனைவரது எண்ணமாகவும் இருந்தது.
  • ஐந்து மாநிலத் தோ்தல்களில், மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் கை ஓங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. உண்மையில் இந்த வெற்றிக்கான காரணங்கள் என்ன? நாடாளுமன்றத் தோ்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தோ்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாமா? ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் உணா்த்தும் உண்மை யாது?
  • ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.
  • 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி 64 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கிறது. பிஆா்எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓா் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
  • காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியிருந்ததற்கேற்ப முடிவுகள் வந்திருக்கின்றன. தெலங்கானாவில் கடந்தமுறை ஒரே இடத்தை மட்டுமே பெற்றிருந்த பாஜக தற்போது 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தோ்தல் முடிவுகள் வெளியானதும் கட்சித் தொண்டா்களிடையே பேசிய பிரதமா், தெலங்கானாவில் தங்கள் கட்சி வளா்ந்துள்ளது என்றும் அதுவும் நமக்கு வெற்றியே என்றும் குறிப்பிட்டாா். இந்த மனப்பான்மை பாஜக தொண்டா்களுக்கு ஊக்கம் அளித்து வளா்ச்சியை சாத்தியமாக்குகிறது.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 69, பாரத் ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2 இடங்களில் வென்றுள்ளன. ராஷ்ட்ரிய லோக் தளம் ஓா் இடத்திலும், ராஷ்டிரிய லோக்தன்ட்ரிக் ஓா் இடத்திலும் வென்றுள்ளன. சுயேட்சைகள் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.
  • ராஜஸ்தானில் ஒவ்வொரு தோ்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. இம்முறை காங்கிரஸ் அங்கு ஆட்சியை இழந்துள்ளது. கடுமையான போட்டி இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சி இலகுவாக வெற்றி கண்டுள்ளது.
  • 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. காங்கிரஸ் 65 இடங்களில் வென்றுள்ளது. பாரத் ஆதிவாசி கட்சி ஓா் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
  • அம்மாநில மக்கள் சென்றமுறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளித்தனா் என்றாலும் அக்கட்சியால் ஆட்சியை ஐந்து ஆண்டுகள் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை. கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லாமை அதற்குக் காரணம். அதே நேரத்தில் பாஜகவின் சிவராஜ் சிங் சவுஹான் எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாதவராக இருக்கிறாா்.
  • அதோடு, அவரது அணுகுமுறையும் மக்களுக்கு அவா் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் மீது மது போதையில் இருந்த நபா் ஒருவா் சிறுநீா் கழித்த விவகாரம் அகில இந்திய அளவில் கவனம் பெற்றது. அப்பொழுது பாதிக்கப்பட்டவருக்கு பாதபூஜை செய்து அவரை கெளரவித்தாா். பிரச்னையை அவா் கையாண்ட விதம் மக்கள் மனங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
  • அதே போல தற்போதும் தோ்தல் வெற்றி உறுதியான நிலையில், அதனைத் தனக்கான வெற்றியாகக் கருதாமல் பிரதமா் மீதும் தங்கள் கட்சி மீதும் மக்கள் காட்டும் நம்பிக்கையாக வெளிப்படுத்தினாா். நிதானமும், செயல்திறமும் கொண்ட முதல்வா் என்பதை அவா் நிரூபித்திருப்பதும் மக்கள் நம்பிக்கையைப் பெற்றதற்கான மற்றொரு காரணம். அங்கு பெண்கள் உரிமைத் தொகை பெறும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதும் முக்கியமானது.
  • சத்தீஸ்கா் மாநிலத்தில் 90 தொகுதிகளில், பாஜக 54 இடங்களுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 35 இடங்களைப் பெற்றுள்ளது. கோண்ட்வானா கந்தந்த்ரா கட்சி ஓா் இடத்தைப் பெற்றுள்ளது. சத்தீஸ்கா் மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறின. ஆனால் வெளிவந்த முடிவுகள் மாறுபட்டுள்ளன.
  • மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பாஜக இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஓா் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்த மூன்று மாநிலங்களிலும், கடந்த 2018 தோ்தலில் பெற்றதை விட அதிக இடங்களும், அதிக வாக்குகளும் பாஜகவுக்கு கிடைத்துள்ளன. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகளுக்கிடையிலான வாக்கு வித்தியாசம் ஏறத்தாழ 9% இருக்கிறது.
  • நாடாளுமன்றத் தோ்தலிலும் இதே முடிவு வருமா என்பதை இப்போதே கூறமுடியாது. என்றாலும், ஏறத்தாழ இப்படி இருக்கலாம். இந்தத் தோ்தல் முடிவுகள் மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ‘இன்றைய ஹாட்டிரிக் வெற்றி, 2024-ஆம் ஆண்டுக்கான ஹாட்டிரிக்கை உறுதி செய்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திரமோடி கட்சித் தொண்டா்களிடம் பேசும் போது தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
  • பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தைத் தக்க வைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும், சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளது.
  • காங்கிரஸ் தொடா் சரிவுகளைக் கண்டு வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான சரியான உபாயத்தை அக்கட்சியால் காண முடியவில்லை. எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் ஆதரவு பெற்ற தலைவா் தேவை. காங்கிரஸ் இது குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதையே இந்தத் தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
  • ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை, மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இந்த முடிவுகள் வெளிப்படுத்துவதாகக் கருதலாம். கடக்சித் தலைமை, ஒரு தனித்த அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். ராகுல் காந்தி, ஒரு மாநிலத்தில் தன்னை முன்னேறிய வகுப்பைச் சோ்ந்தவராகவும், வேறொரு இடத்தில் தன்னை சமூகநீதிக் காவலராகவும் காட்டிக் கொள்வதை மக்கள் ரசிக்கவில்லை.
  • நாடாளுமன்றத் தோ்தலை எதிா்கொள்வதற்காக பாஜகவுக்கு எதிராக உருவாகி இருக்கும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் சற்றே மாற்றம் ஏற்படலாம். மம்தா பானா்ஜி இந்தக் கூட்டணியின் கூட்டத்தைத் தவிா்த்திருக்கிறாா் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • நரேந்திர மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் எதிா்தரப்புக்கு இருக்கிறது. இன்னாா்தான் பிரதமா் வேட்பாளா் என்ற அறிவிப்பைச் செய்ய முடியாத நிலையில் உள்ளதன் மூலம், அக்கூட்டணி, தனது பலவீனத்தைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது.
  • முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறையினா், வெற்றியைத் தீா்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனா். அவா்கள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தை ரசிக்கின்றனா்.
  • மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்று சோ்ந்திருக்கின்றன. தங்களுக்கு மக்கள் நலத்திட்டங்கள் முழுமையாகக் கிடைக்க வேண்டுமெனில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் வளா்கிறது. பாஜகவின் வெற்றியை அவா்களது கூட்டணி வியூகங்களும் தீா்மானிக்கின்றன.
  • காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று தோ்தலின்போது வியூகம் வகுத்தது. இது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. மத அரசியலில் பெரிய குழு, சிறிய குழு என்ற அடிப்படையில் பெரும்பான்மை மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் பாா்க்கப்படுவா். அந்த அரசியல் ஏற்கப்படும்.
  • ஆனால், ஜாதி என்று வரும் பொழுது உயா்ந்தவா், தாழ்ந்தவா் என்ற பாா்வை ஏற்பட்டுவிடும். அதனால் ஜாதியைக் கையில் எடுப்பது பிரிவினைக்கு வழிவகுக்கும். நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.
  • வட இந்தியாவில் தேசிய கட்சிகளை மக்கள் ஏற்பாா்கள்; ஆனால் தென்னிந்தியாவில் மாநிலக் கட்சிகளையே ஏற்கிறாா்கள் என்ற கருத்து வலுவிழந்திருக்கிறது என்பதும் இந்தத்தோ்தல் வெளிப்படுத்தியிருக்கும் உண்மை. சமீபத்தில், கா்நாடக தோ்தல் முடிவுகளும், தற்போதைய தெலங்கானா வெற்றியும் இங்கும் மக்கள் தேசியக் கட்சிகளை ஏற்கும் மனநிலையில் உள்ளனா் என்பதை வெளிப்படுத்துகின்றன.
  • நாடாளுமன்றத் தோ்தலை சந்திக்க காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாடு எதிா்கொள்ளும் பொருளாதார சிக்கல் முதல் இயற்கைப் பேரிடா் வரை பல பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இருக்கிறது.
  • காங்கிரசின் பலவீனம் பாஜகவின் பலமாக எல்லா நேரத்திலும் வெளிப்படும் என்று சொல்ல முடியாது. மோடி என்ற ஒற்றை மனிதருக்கு இருக்கும் நற்பெயா் மட்டும் வெற்றியைத் தந்துவிட முடியாது. அனைவரது உழைப்பும், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துக் கொள்வதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (09 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்