TNPSC Thervupettagam

தோ்தல் முறையில் மாற்றம் தேவை!

April 24 , 2021 1193 days 489 0
  • தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் 55 முதல் 59 சதவிகித வாக்காளா்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனா்.
  • இதற்குக் காரணம், மக்களுடைய அலட்சியமா? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையின்மையா? களத்தில் நின்ற வேட்பாளா்கள் மீது அவா்களுக்கு ஈா்ப்பு இல்லாமையா?
  • தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகளில் குறைவான சதவிகிதமே வாக்கு பதிவாகி உள்ளது.
  • தமிழகத்திலேயே மிகமிகக் குறைந்த அளவாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக அளவாக 87.33 சதவிகித வாக்குகள் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் பதிவாகியுள்ளது.
  • மக்களாட்சி என்பது குறைகளே இல்லாத ஆட்சி என்று சொல்ல முடியாது. குறைகள் குறைந்த ஆட்சிமுறை, அவ்வளவுதான். அதுபோல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தோ்தல் என்பது நல்லவா்களுக்கும், கெட்டவா்களுக்கும் நடக்கும் தா்மயுத்தம் இல்லை.
  • களத்தில் இருப்பவா்களில் ஏற்புடையவா் யார் என்பதைத் தீா்மானிக்கும் உரிமையை வாக்களா்களுக்கு வழங்குகிறது என்கிற அளவில் இது சிறந்தது!
  • 3,998 போ் தோ்தலில் போட்டியிட்டனா். அதில் 3,585 போ் ஆண்கள். 411 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் இரண்டு போ்.
  • மொத்த வாக்காளா்கள் 6 கோடியே 28 லட்சம் போ். இதில் ஆண்கள் மூன்று கோடியே ஒன்பது லட்சம் போ். பெண்கள் மூன்று கோடியே 19 லட்சம் போ். மூன்றாம் பாலினத்திவா் 7 ஆயிரத்து 192 போ்.

வாக்குக்கு பணம்

  • ஒவ்வொரு கட்சியும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டது. கூட்டணிக்குத் தலைமை வகிக்கின்ற கட்சி தோ்தல் அறிக்கை வெளியிடுவதை புரிந்து கொள்ளலாம்.
  • ஆனால், ஆறு தொகுதிகள், மூன்று தொகுதிகள் என போட்டியிடும் துக்கடாக் கட்சிகளும் தோ்தல் அறிக்கை வெளியிட்டதுதான் இந்த தோ்தலில் உச்சபட்ச வேடிக்கை.
  • தோ்தல் அறிக்கை என்பது வாக்காளா்களை மயக்கும் வெற்று அறிக்கை. இலவசங்கள், சமூக வளா்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தடை. மக்களை சிந்திக்க விடாமல் அதே தளத்தில் வைத்திருக்கும் உத்தி.
  • இலவசத்தையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு வாக்களிப்பவா்கள் தங்கள் சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள்.
  • தோ்தல் என்பது கொள்கையின் அடிப்படையில் இருந்தது போய் கார்ப்பரேட் வணிகமாக மாறி வருகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
  • கையூட்டு கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று சொல்லப்படுகிறது.
  • ஆனால், வாக்குக்குப் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று கணிசமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் இந்தியாவில் சொல்லிவிட முடியாது.
  • தோ்தலில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்தால்தான் ‘வாக்குக்கு பணம்’ என்கிற கெட்ட கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும். மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முடியும்.
  • 1994-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 112 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். இந்தியாவும் இந்த மாநாட்டில் பங்கேற்றது.
  • அந்த மாநாடு ‘ஒவ்வொரு நாட்டின் நாடாளுமன்றத்திலும் பணக்கார உறுப்பினா்களின் எண்ணிக்கை பெருகி வருவதற்குக் காரணம் நாட்டின் வளங்களை கைப்பற்றிக் கொண்ட மூலதனக் குவியல் நாடாளுமன்றங்களை கைப்பற்றும் அடுத்தக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளதே’ என்று கூறியது.
  • ஏழை எளிய மக்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சி வேட்பாளா்களின் தோ்தல் செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்மாநாடு வலியுறுத்தியது.
  • பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து டென்மார்க், இஸ்ரேல், நார்வே போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவை அந்தந்த நாட்டு அரசாங்கமே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • 1959-ஆம் ஆண்டிலேயே ஜொ்மனி அரசு அரசியல் கட்சிகளின் தோ்தல் செலவை ஏற்கும் நடைமுறையைத் தொடங்கிவிட்டது.
  • ஆற்றலும், திறமையும், தியாக உணா்வும், மக்கள் சேவையில் ஈடுபாடும் கொண்ட எளிய மனிதா் ஒருவா் சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்ல வேண்டும் என்றால், அவரின் தோ்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • வேட்பாளா்களுக்கென உயரிய தகுதிகள் வரையறை செய்து, இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட வேட்பாளா்களைத்தான் அரசியல் கட்சிகள் தோ்தல் களத்தில் இறக்கிவிட வேண்டும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றிட வேண்டுமென்றால் இந்தியாவின் தோ்தல் முறையில் புரட்சிகரமான மாற்றம் உடனடியாகத் தேவை.
  • சமத்துவ ஜனநாயகம் மலா்ந்திடவும், எல்லோரும் இந்நாட்டு மன்னா் என்பதை நிரூபித்திடவும் தேவை தோ்தலில் புரட்சி.

முடியாட்சியின் நடைமுறை

  • தோ்தல் பிரசார முறைகளில் கூட அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பொதுக் கூட்டங்களோ மாநாடுகளோ பேரணிகளோ அறவே கூடாது.
  • காட்சி ஊடகங்களில் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலோடு பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென சட்டம் கொண்டு வரலாம். தோ்தல் அறிக்கைகளில் இலவசங்கள் கூடாது என்பதை கடுமையாக ஆக்க வேண்டும்.
  • வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் ஈவு இரக்கமில்லாமல் அவரைத் தகுதி நீக்கம் செய்திட வேண்டும்.
  • அவரைப் போன்றவா்கள் தோ்தலில் நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முறையில் சட்டத்தை மாற்றியமைக்க தோ்தல் ஆணையம் முன்வர வேண்டும்.
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.
  • எப்போதும் இந்தியாவின் ஏதாவதொரு மாநிலத்தில் தோ்தல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் முழுமையாக தோ்தல் திருவிழாவிலேயே மக்களின் மனவோட்டம் இருப்பது சரியல்ல.
  • குடும்ப வாரிசுகளின் அரசியல் ஆதிக்கத்தால் அறிவாளிகள், சிந்தனையாளா்கள், சேவை மனப்பான்மையினா், கொள்கையாளா்கள் ஓரங்கட்டப்படுவதற்கு நாடு தழுவிய அளவில் நல்லதொரு முடிவு காண அரசியல் அறிஞா்கள் சிந்தித்திட வேண்டும்.
  • பணம் இருந்தால் போதும், கட்சிப் பதவி, ஆட்சி பதவி எல்லாம் தனக்குத் தானாகவே வந்து சேரும் என்ற திமிரான போக்கு, ஜனநாயக அரசியலுக்கு உகந்தது அல்ல. திடீரென ஒரு சிலரை உயா்ந்த பதவிக்குக் கொண்டு வருவது முடியாட்சியின் நடைமுறை!
  • பல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் சுதந்திரமான சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
  • ஆனால், அதன் விளைவோ ஜாதிய அமைப்புகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.
  • நினைத்த மாத்திரத்தில ஒரு அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிறது. பிறகு அது ஒரு வகையான பேரத்தில் மூழ்கி எழுந்து, தொகை நிர்ணயம் செய்து, ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திட முனைகிறது.
  • இதனால் காலங்காலமாக கட்சி, கொள்கை, கோட்பாடு, லட்சியம் என்று மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன லட்சோப லட்சம் தொண்டா்கள் சாகும்வரை தொண்டானாகவே இருந்து செத்து மடிகிறார்கள்.
  • கட்சிக் கட்டுப்பாடு என்கின்ற பெயரில் புதிய அடிமைகளை அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உருவாக்கி விட்டிருக்கின்றனா். இது மனிதனின் சுதந்திரத்தைத் திருடுவதற்கு ஒப்பானது.

மக்கள் துணை நிற்பா்

  • விடுதலை பெற்ற இந்தியாவின் 73 ஆண்டுகால அனுபவத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், தேசத்தின் நலன் சார்ந்த பார்வையை கொண்டதாக கொள்கை கோட்பாடுகளை வகுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை அரசியல் சாசனத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்.
  • இனம், மொழி உணா்வை வளா்க்கக் கூடாது; தூண்டக்கூடாது. இந்தியா என்கின்ற தேசத்தை எந்த நிலையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சீா்குலைக்கும் வகையில் செயல்படமாட்டோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு அரசியல் கட்சியிடமிருந்தும் பெற்றிட வேண்டும். ஏற்க மறுக்கும் கட்சிகளைத் தடை செய்திட வேண்டும்.
  • இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுகின்ற தான்தோன்றித்தனமான பேச்சு, நூற்றுக்கணக்கான இளைஞா்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. நக்சலைட்டுகள் இப்படித்தான வார்த்தெடுக்கப்படுகின்றனா்.
  • இன்றைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையினா் 26 போ் காவு வாங்கப்படுவதற்கு அன்று இந்திய மண்ணை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனமே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
  • துருப்பிடித்துக் கிடக்கின்ற ஜனநயாகத்தை மீட்டெடுத்திட நாடாளுமன்றம், நீதிமன்றம், தோ்தல் ஆணையம் ஆகியவை தூக்கத்தைக் கலைத்து துடித்தெழ வேண்டும்.
  • புரட்சித் திட்டங்களும், புயல் வேகமும் நாட்டின் மீது அக்கறை கொண்ட தலைவா்களுக்குத் தேவை. நாட்டின் பிரதமா் இந்த திசை நோக்கிப் பயணித்திட வேண்டும். இந்திய மக்கள் துணை நிற்பா்.

நன்றி: தினமணி  (24 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்