- தோ்தல் ஆண்டாக இருக்கப் போகிறது 2024. அதன் தொடக்கமாக வங்கதேசத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வங்க தேசத்தைத் தொடா்ந்து உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தோ்தல்கள் நடைபெற இருக்கின்றன. ஏறத்தாழ 400 கோடி வாக்காளா்கள், அதாவது உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிபோ் தங்களது தேசத்தை யார் ஆளப் போகிறார்கள் என்பதைத் தங்களது வாக்குகளின் மூலம் தீா்மானிக்க இருக்கிறார்கள்.
- உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்த ஆண்டு 18-ஆவது மக்களவைத் தோ்தலைச் சந்திக்க இருக்கிறது. அதேபோல, உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, இந்த ஆண்டு தனது 47-ஆவது அதிபா் யார் என்பதை தீா்மானிக்க இருக்கிறது.
- பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, உக்ரைன், பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா, துனிஷியா, கானா, ரெவண்டா, நேம்பியா, மொசாம்பிக், செனகல், டோகோ, தெற்கு சூடான் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளும் தோ்தலைச் சந்திக்க இருக்கின்றன.
- தெற்கு ஆசியாவுக்கும் இது தோ்தல் சீசன். வங்க தேசத்தைத் தொடா்ந்து பூடான் இந்த மாதம் தோ்தலைச் சந்திக்க இருக்கிறது. அடுத்த மாதம் பாகிஸ்தானும், ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையும் தோ்தலை எதிா்கொள்ளப் போகின்றன.
- உலகளாவிய அளவில் நடைபெற இருக்கும் தோ்தல்களால் ஜனநாயகம் துடிப்பாக இருப்பதாகத் தெரிந்தாலும்கூட, அதில் முரண்கள் இல்லாமல் இல்லை. தோ்தல் நடைபெறுவதாலேயே அதை ஜனநாயகம் என்று நம்மால் வரையறுத்துவிட முடியவில்லை. கம்யூனிஸ சா்வாதிகார நாடான சீனாவில்கூடத்தான் தோ்தல் நடக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- ரஷியாவிலும், ஈரானிலும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தோ்தல் நிச்சயமாக கண்துடைப்பு நாடகமாகத்தான் இருக்கப் போகிறது. ஈரானில் அயோத்துல்லாஹ் ஆட்சி ஏறத்தாழ 25 எதிர்கட்சி வேட்பாளா்களை ஏற்கனவே தகுதிநீக்கம் செய்துவிட்டது.
- ரஷியாவில் ஐந்தாவது முறையாக அதிபா் பதவிக்குப் போட்டியிடுகிறார் விளாதிமீா் புதின். 2018-இல் பிரதான எதிர்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவாலினி தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டார். 76% வாக்குகளுடன் புதின் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
- இந்த முறை லிபரல் ஜனநாயகக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கியும், புதிய மக்கள் கட்சியின் விலாடிஸ்லாவ், தவன்கோவ்வும் மார்ச் 15 தோ்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். ஆனால் முடிவு கடந்த தோ்தலைப்போலவேதான் இருக்கும் என்பது உலகறிந்த ரகசியம்.
- சமீபத்தில் வங்க தேசத்தில் ஜனவரி 7-ஆம் தேதி நடந்த தோ்தலை, எதிர்கட்சியான வங்க தேச தேசியக் கட்சி புறக்கணித்து இருந்தது. அதன் முக்கியத் தலைவா்கள் அனைவரும் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனா். அதனால் முறையான தோ்தல் வங்க தேசத்தில் நடைபெறவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் விமா்சிக்கின்றன.
- அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபா் தோ்தல் சா்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதில் வியப்பில்லை. வேடிக்கை என்னவென்றால் அமெரிக்க மக்களின் சராசரி வயது 38 ஆண்டுகள். தோ்தல் களத்திலிருக்கும் இப்போதைய அதிபா் பைடனின் வயது 81. அவரை எதிர்த்துக் களமிறங்க இருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனல்ட் டிரம்பின் வயது 77. இவா்களில் யாா் வெற்றி பெற்றாலும் அவா்கள் சராசரி அமெரிக்கப் பிரஜையின் உணா்வை பிரதிபலிப்பவா்களாக இருக்கப் போவதில்லை.
- கூா்ந்து கவனிக்கப்படும் தோ்தல் நடைபெற இருக்கும் இன்னொரு நாடு தைவான். இன்னும் ஒரு வாரத்தில் அங்கே நடைபெற இருக்கும் தோ்தலில் சீன ஆதரவுக் கூட்டணி, ஆளும் ஜனநாயகக் முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கிறது. தோ்தல் முடிவைப் பொறுத்து சா்வதேச அரசியலில் பல மாற்றங்கள் நிகழக்கூடும்.
- தோ்தல் ஜனநாயகம் என்பது 1789-இல் அமெரிக்காவில் முறைப்படுத்தப்பட்டது முதல், உலகம் ஜனநாயம், சா்வாதிகாரம், ஜனநாயகப் போர்வையிலான சா்வாதிகாரம் என்கிற மூன்று வகையிலான ஆட்சிமுறைகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு பிரச்னைகள் சா்வதேச அளவில் முன்னிலை பெறுகின்றன.
- சோஷலிஸம், கம்யூனிஸம் பரவலான ஆதரவைப் பெற்றதும், அதைத் தொடா்ந்து சந்தைப் பொருளாதாரம் முற்றிலுமாக கம்யூனிஸ சித்தாந்தத்தை தடம் புரள வைத்ததும் கடந்த நூறு ஆண்டுகளாக உலகம் சந்தித்த கொள்கை அடிப்படையிலான அரசியல்.
- 21-ஆம் நூற்றாண்டு அதிலிருந்து மாறுபடுகிறது. பெரும்பாலான நாடுகளில் இப்போது பொது எதிரியாக அந்நியா்கள் பார்க்கப்படுகிறார்கள். குடியேற்றம் பிரச்னையாக மாறியிருக்கிறது. குறிப்பாக, பல நாடுகளில் குடியேறியிருக்கும் இஸ்லாமியா்களுக்கு எதிரான மனநிலை தோ்தல்களில் பிரதிபலிக்கின்றன. தாங்கள் அடைக்கலம் தேடும் நாடுகளின் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளாமல், தனித்துவத்தை தக்கவைத்துக் கொள்கிறாா்கள் என்பதும், இன ரீதியாக வேறுபடுகிறார்கள் என்பதும் அதற்கு காரணம். ஹங்கேரி, இத்தாலி, நெதா்லாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு நடந்த தோ்தல்களில் குடியேற்றதுக்கு எதிரான பரப்புரைகள் வெற்றி அடைந்திருக்கின்றன.
- உலகம் எந்த திசையை நோக்கி எப்படிப் பயணிக்கப் போகிறது என்பதை 2024-இல் நடைபெற இருக்கும் தோ்தல் முடிவுகள் நிர்ணயிக்கும்!
நன்றி: தினமணி (11 – 01 – 2024)