தொடரும் உறவு - வளரும் நெருக்கம்!
- குவைத் மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல்-ஷபாவின் அழைப்பை ஏற்று பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட இரண்டு நாள் அரசுமுறைப் பயணம், இரு நாட்டு உறவில் குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும். 1981-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்திக்குப் பிறகு, 43 ஆண்டுகள் கழித்து குவைத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிக்கிறாா். பிரதமா் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் முபாரக் அல்-கபீா்’ அந்த நாட்டு மன்னரால் வழங்கப்பட்டிருப்பதிலிருந்து, எந்த அளவுக்கு இந்தியாவுக்கு குவைத் முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெரிகிறது.
- பாரசீக வளைகுடாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது ஈராக், சவூதி அரேபியா நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வளைகுடா நாடான குவைத். ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு மன்னராட்சி நாடும் அந்தப் பகுதியில் குவைத் மட்டுமே.
- இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையேயான உறவு என்பது சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்று சில அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. மத்திய தரைக்கடல் நாடுகள், மெசபட்டோமியா பகுதிகளுடனான இந்திய வா்த்தகத்தின் மையமாக ஒரு காலத்தில் குவைத் விளங்கியது. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுடன் வா்த்தக, கலாசார உறவுகள் 2000 ஆண்டுகளாக குவைத்துக்கு இருந்திருக்கிறது.
- நமது கொற்கைத் துறைமுகத்தைப்போலவே, ஒரு காலத்தில் முத்துகள் விளையும் பகுதியாக குவைத் இருந்தது. குவைத்தின் முத்துகள், அரேபிய குதிரைகள், பாஸ்ரா பேரீச்சம் பழம் உள்ளிட்டவை இந்திய வாசனைத் திரவியங்கள், ஜவுளி, உணவுப் பொருள்களுக்காகப் பண்டமாற்று வா்த்தகம் செய்யப்பட்டது குறித்து ஏராளமான பதிவுகளும், சான்றுகளும் காணப்படுகின்றன.
- 1920-இல் ஜப்பானின் மிக்கிமோடோ செயற்கை முத்துகள் வரத்தொடங்கியதும், 1929-இல் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கமும் இயற்கை முத்துக்களுக்கான வரவேற்பைக் குறைத்தன. ஆனால், எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதால், குவைத்தின் பொருளாதாரம் வேறு வகையில் செழிப்படையத் தொடங்கியது. உலகின் ஆறாவது கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை நிறுவியதில் முக்கியப் பங்கு வகித்தது என்பதும் குவைத்தின் முக்கியத்துவத்துக்கான பிற காரணங்கள்.
- 1961-இல் பிரிட்டனில் இருந்து முழுமையாகத் தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடானபோது, குவைத்தை அங்கீகரித்து அந்த நாட்டுடன் தூதரக உறவு ஏற்படுத்திய முதல் நாடு இந்தியா. அது மட்டுமல்ல, 1961 வரை குவைத்தின் அதிகாரபூா்வ செலாவணியாக இந்திய ரூபாய்தான் இருந்து வந்தது.
- சா்வதேச அளவில் மிகப் பெரிய தேசிய முதலீட்டு நிதி வைத்திருக்கும் நாடுகளில் குவைத்தும் ஒன்று. மாா்ச் 2024 கணக்குப்படி 92,400 கோடி டாலா், குவைத் முதலீட்டு ஆணையத்தின் கையிருப்பில் உள்ளது. இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளிலும், பல உற்பத்தி முனைப்புகளிலும், குவைத் முதலீட்டு ஆணையம் தொடா்ந்து முதலீடுகளை வழங்கி வருகிறது.
- வா்த்தக உறவு என்று எடுத்துக் கொண்டால், ஆண்டொன்றுக்கு 1,047 கோடி டாலா் அளவில்தான் காணப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 3%தான் என்றாலும், குவைத்தின் இந்திய முதலீடுகள் 1,000 கோடி டாலரைவிட அதிகம்.
- குவைத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்தியாவுக்குக் கணிசமான பங்கு உண்டு. இந்திய தொழில்நுட்ப வல்லுநா்களும், நிறுவனங்களும்தான் குவைத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கக் காரணம். வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் குவைத்தும் இணைந்து செயல்படுகின்றன என்றாலும், அவற்றை மேலும் அதிகரிக்க பிரதமரின் அரசுமுறைப் பயணம், புதிய பாதையை வகுத்திருக்கிறது.
- இந்தியா-குவைத் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் உள்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. பாதுகாப்பு, கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகியவை அதில் அடங்கும். இரு தரப்பு நல்லுறவை வியூகக் கூட்டாண்மை (ஸ்ராடஜிக் பாா்ட்னா்ஷிப்) நிலைக்கு உயா்த்த பிரதமா் மோடியும், குவைத் மன்னரும் முடிவெடுத்திருப்பது, மிக முக்கியமான ராஜதந்திர வெற்றி.
- ‘‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து விதத்திலான பயங்கரவாதமும் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டனத்துக்குரியது. பயங்கரவாதிகளுக்கு நிதி, புகலிடம் கிடைப்பதைத் தடுப்பதோடு, பயங்கரவாதக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்ய இருநாடுகளும் உறுதி ஏற்கின்றன’’ என்கிற கூட்டறிக்கை பாகிஸ்தானுக்கு விடப்பட்டிருக்கும் மறைமுகக் கண்டனம்.
- குவைத்தில் வாழ்வது 49 லட்சம் போ் என்றால், அதில் சுமாா் 10 லட்சம் போ் இந்தியா்கள். குவைத்தில் எந்தப் பணியாக இருந்தாலும் இந்தியத் தொழிலாளா்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குவைத்தில் உள்ள 26 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 60,000 மாணவா்கள் இந்தியாவின் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில்தான் படிக்கிறாா்கள்.
- கொவைட் கொள்ளைநோய்த் தொற்றுத் தொடங்கியபோது 2 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பிக் கொடுத்ததை குவைத்தும், இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்றவுடன் உடனடியாக குவைத் உதவியதை இந்தியாவும் மறந்துவிட முடியாது. வரலாற்று உறவு, பிரதமரின் விஜயத்தால் நெருக்கமான வியூகக் கூட்டாண்மை உறவாக வலுப்பெற்றிருக்கிறது.
நன்றி: தினமணி (24 – 12 – 2024)