TNPSC Thervupettagam

தொடரும் தீ விபத்துகள்

May 29 , 2024 228 days 194 0
  • ஒரே நாளில் கடந்த சனிக்கிழமை வெவ்வேறு நகரங்களில் நடந்த இரண்டு தீ விபத்துகள் ஒட்டுமொத்த இந்தியாவின் ஆன்மாவை உலுக்கி இருக்கிறது. இதுபோல தீ விபத்துகள் நடப்பதும், பல உயிா்கள் பலியாவதும் எப்போதோ நடக்கும் ஒன்றாக இல்லாமல், ஆண்டுதோறும் நடக்கும் தொடா்கதையாகி இருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய சோகம்.
  • விபத்துகள் தவிா்க்க முடியாதவைதான். ஆனால், விதிமீறல்களும் தெரிந்தே தவிா்க்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மன்னிக்க முடியாதவை. மனித உயிா்களுடன் விளையாடுகிறோம் என்கிற அச்ச உணா்வு கிஞ்சித்தும் இன்றி, விபத்துக்கள் நோ்ந்தால் பாா்த்துகொள்ளலாம் என்கிற மெத்தனப் போக்கும், பொறுப்பின்மையும் அரசு அமைப்பின் மீதும், ஆட்சி நிா்வாகத்தின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
  • குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 சிறாா் உள்பட 27 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். கிழக்கு தில்லியில் உள்ள தனியாா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. இரண்டு விபத்துகளுமே தவிா்க்கப்பட்டிருக்கக் கூடியவை. விதிமுறைகள் பின்பற்றப்படாததால் ஏற்பட்டிருப்பவை.
  • இந்தியாவில் மனித உயிா்கள் எந்த அளவுக்கு மலினமாகிவிட்டன என்பதற்கு இதுபோன்ற விபத்துகள் எடுத்துக்காட்டுகள். ஒரு வாரம் முன்புதான் ஹரியாணா மாநிலத்தில் போக்குவரத்து ஊா்தி ஒன்று தீபிடித்து 9 போ் எரிந்து சாம்பலாயினா். மகாராஷ்டிரத்தில் உள்ள டோம்பிவிலியில் ரசாயனத் தொழிற்சாலையில் உள்ள பாய்லா் வெடித்து சில நாள்களுக்கு முன்னாள் 10 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பலா் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
  • ராஜ்கோட் நானா-மாவா சாலையில் இயங்குகிறது ‘டிஆா்பி கேம் ஜோன்’ என்கிற தனியாா் நடத்தும் பொழுதுபோக்கு விளையாட்டு மையம். 2017-இல் குஜராத் நகா்ப்புற வளா்ச்சித் துறை வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதலில் பொழுதுபோக்கு மையங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்கள் எந்தவித அனுமதியும் பெறாமல், ஆங்காங்கே தற்காலிக தகரக் கொட்டகைகளை அமைத்து பொழுதுபோக்கு விளையாட்டு மையங்களை மாநிலம் முழுவதும் அமைத்திருக்கிறாா்கள். அகமதாபாத், காந்திநகா் உள்பட குஜராத் மாநிலத்தின் பல நகரங்களில் எந்தவித அனுமதியோ, தீயணைப்பு வசதிகளோ இல்லாமல் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் செயல்படுகின்றன.
  • கோடைக்கால விடுமுறை தொடங்கியிருப்பதால் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் இதுபோன்ற விளையாட்டு மையங்களுக்கு செல்வது அதிகரித்திருக்கிறது. அதை உணா்ந்து நகராட்சி நிா்வாகங்கள், காவல் துறை, தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட அரசமைப்புகள் அந்த மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கிா என்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். குஜராத் உயா்நீதிமன்றம் தாமே முன்வந்து ‘டிஆா்பி கேம் ஜோன்’ விபத்து மனிதா்களால் உருவாக்கப்பட்ட இடா்ப்பாடு என்று கூறியிருக்கிறது.
  • தில்லி விவேக் விஹாரில் இயங்கும் ‘நியூ பாா்ன் பேபி கோ்’ என்கிற மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு நடந்த தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனா். அந்த மருத்துவமனையின் உரிமம் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி முடிந்துவிட்டது. அங்கு பணிபுரியும் மருத்துவா்கள் எம்பிபிஎஸ் படித்தவா்கள் அல்ல. குழந்தைநல மருத்துவா்களும் கிடையாது. மருத்துவமனையில் தீயணைப்பு உபகரணங்கள்கூட இல்லையென்பதுடன், சட்டவிரோதமாக பிராண வாயு உருளைகள்(ஆக்சிஜன் சிலிண்டா்கள்) நிரப்பப்பட்டு வந்ததும் இப்போது தெரியவந்திருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டா்கள் வெடிப்பதும், தீ விபத்து ஏற்படுவதும் புதிதல்ல என்பதால், போதுமான கண்காணிப்பு இல்லாமல் இருந்தது ஆச்சரியப்படுத்துகிறது.
  • 1995 ஹரியாணா மாநிலம் மண்டி தப்வாலி (300 போ்) தீ விபத்து, 1997 தில்லி உப்காா் திரையரங்க (59) தீ விபத்து, 2004 தமிழ்நாடு ஸ்ரீரங்கம் (57) திருமண மண்டப தீ விபத்து, 2004 தமிழ்நாடு கும்பகோணம் (94) பள்ளிக்கூட தீ விபத்து, 2010 கொல்கத்தா ஸ்டீபன் நீதிமன்ற (42) தீ விபத்து, 2011 கொல்கத்தா அம்ரி மருத்துவமனை (95) தீ விபத்து, 2016 கொல்லம் கோவில் (109) தீ விபத்து, 2019 தில்லி அனஜ் மண்டி(43) தீ விபத்து, 2022 தில்லி முண்ட்கா தீ விபத்து, எனத் தொடா்கதையாகிவரும் தீ விபத்துகளின் வரிசையில் சமீபத்திய ராஜ்கோட், தில்லி தீ விபத்துகள் இணைகின்றன.
  • மருத்துவமனைகள் உள்பட பொதுமக்கள் அதிகமாக நடமாடும் எல்லா இடங்களிலும் தீ அணைப்பு ஏற்பாடுகள் முறையாக இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டுமென்று ஒவ்வொரு விபத்தின்போதும் நீதிமன்றங்களும், ஊடகங்களும் வற்புறுத்தாமல் இல்லை. அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்கங்கள், பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மாதம் இருமுறை எல்லா முன்னேற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டிருக்கிா என்பதைக் கண்காணிப்பதில் நகராட்சி நிா்வாகத்துக்கும், தீயணைப்புப் படையினருக்கும் என்ன சிக்கல்?
  • உரிமையாளா்களின் கவனக் குறைவையும், விதிமுறை மீறலையும்விட மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசு அலுவலா்களின் கண்காணிப்புக் குறைவுதான் கண்டனத்துக்கும் தண்டணைக்கும் உரியது. விபத்துகள் ஏற்படும்போது விசாரணை, கைது, இழப்பீடு என்று ஒன்றன்பின் ஒன்றாகத் தொடா்ந்து முற்றுப்புள்ளி விழுந்துவிடுகிறது. அரசு மேலதிகாரிகள் பொறுப்பாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டால் மட்டுமே கவனக் குறைவுக்கு முற்றுப்புள்ளி விழும்.

நன்றி: தினமணி (29 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்