TNPSC Thervupettagam

தொடரும் மோசடிகள்!

August 27 , 2024 139 days 141 0

தொடரும் மோசடிகள்!

  • நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த தி மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தேவநாதன் யாதவ் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
  • 1872-இல் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இதற்கு மாதந்தோறும் 10 முதல் 11 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களும் ஓய்வூதியத் திட்டங்களும் உள்ளன. நகைக் கடனும் வழங்கப்பட்டு வந்தது.
  • இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு வட்டியோ, முதிர்வுத் தொகையோ அளிக்கப்படாததால் பொருளாதார குற்றப் பிரிவில் 140 பேர் புகார் அளித்ததை அடுத்து தேவநாதன் உள்பட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுபோன்று நிதி நிறுவன மோசடிகள் நடைபெறுவது புதிதொன்றுமல்ல.
  • சென்னையைச் சேர்ந்த ஹிஜாவு நிறுவனம் மாதந்தோறும் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1,620 கோடி வசூலித்து மோசடி செய்தது. அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாகி உள்ளனர்.
  • சென்னையில் செயல்பட்ட மற்றொரு நிறுவனமான ஆருத்ரா கோல்டு டிரேடிங் மாதந்தோறும் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக 2020 செப்டம்பர் முதல் 2022 மே வரை மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.2,400 கோடி பெற்று மோசடி செய்துள்ளது.
  • இதேபோன்று, திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த "பாசி ஃபோரக்ஸ் டிரேடிங்' என்ற நிதி நிறுவனம் 58,571 பேரிடமிருந்து ரூ.930 கோடி முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது.
  • ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளில் ஈமு கோழி வளர்ப்பதில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கூறி பல நிறுவனங்கள் 2010-ஆம் ஆண்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டன. இது தொடர்பான வழக்குகள் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன.
  • இங்கு குறிப்பிடப்பட்டவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலத்தான். தமிழகம் முழுவதும் 1,160 நிதி நிறுவனங்கள் 9.20 லட்சம் பேரிடம் ரூ.14,000 கோடி மோசடி செய்ததாக வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட 3,800 பேரில் 1,900-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கடந்த பல பத்தாண்டுகளாகவே சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ இத்தகைய மோசடிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இது தவிர தீபாவளி பட்டாசு சீட்டு, பலகார சீட்டு, வீட்டுமனைக்கான சீட்டு, துணி சீட்டு, நகை சீட்டு, ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல சீட்டு போன்றவையும் உரிய அங்கீகாரம் பெறாமலே பகுதிகள்தோறும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
  • இதுபோன்ற நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏமாற்ற வேண்டும் என்று தொடங்கப்படுபவை அல்ல. ஓரளவு நல்ல நோக்கத்துடன்தான் தொடங்கப்படுகின்றன. எனினும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக பலவித சலுகைகளை அறிவிக்கின்றன. அதிக வட்டி, பிரபல உணவகங்களில் அறிமுகக் கூட்டம், தங்க நாணயங்கள் அளிப்பது, சுற்றுலா அழைத்துச் செல்வது, முக்கியப் பிரமுகர்களை இயக்குநர்களாக ஆக்குவது போன்றவற்றால் பொதுமக்களைக் கவர்கின்றனர்.
  • முதலீட்டாளர்களை பண்ணை வீடுகள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக ஆக்குவதாகக் கூறியும் சில நிறுவனங்கள் ஈர்க்கின்றன.
  • எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதியவர்களும், மகன்- மகள் திருமணம், கல்விச் செலவுக்கு உதவும் என நினைத்து நடுத்தர வர்க்கத்தினரும் இதுபோன்ற நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். சிலர் உழைக்காமலே அதிக பணம் ஈட்டும் பேராசையுடனும் முதலீடு செய்கின்றனர்.
  • தனக்கு நன்கு அறிமுகமான முகவர் ஒருவர் மூலம் முதலில் ஒருவர் முதலீடு செய்தவுடன் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சங்கிலித் தொடர்போன்று சிக்கிக் கொள்கின்றனர்.
  • நிதி நிறுவனத்தில் அதிக அளவில் பணம் குவியும்போது, அதை பங்குச் சந்தை, மனை வணிகம், திரைப்படத் துறை போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர். ஏதாவது ஒரு கட்டத்தில் சிக்கல் ஏற்படும்போது ஒட்டுமொத்த நிறுவனமுமே பாதிப்புக்கு உள்ளாவதுடன் பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த முதலீட்டாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது.
  • நிதி நிறுவன மோசடிகள் 1990-களில் அதிகரித்ததை அடுத்து, முதலீட்டாளர்களைக் காப்பதற்காக 1997-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு சட்டம் இயற்றியது. மோசடியாளர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கு என்றே 2000-ஆம் ஆண்டில் பொருளாதார குற்றப் பிரிவு உருவாக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.
  • இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் மோசடிகள் குறையாமல் அதிகரித்தே வந்துள்ளன. இதனால் நடுத்தர வர்க்கத்து பெண்கள், முதியோர் உள்ளிட்ட பலரது கனவுகள் சிதைந்துள்ளன.
  • அப்பாவி பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க நிதி நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். பொதுமக்களும் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல், அரசு வங்கிகளில் அல்லது திட்டங்களில் முதலீடு செய்தால் முதலுக்கு மோசம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.

நன்றி: தினமணி (27 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்