தொடரும் மோதல் கொலைகள்: முடிவிலா ஆபத்து!
- தமிழ்நாட்டில், காவல் துறையினர் நடத்தும் மோதல் கொலைகளின் (Encounters) எண்ணிக்கை அதிகரித்துவருவது ஆபத்தானது. இத்தகைய மோதல் கொலைகள் பெரும்பாலும் போலியானவை; சட்டத்துக்குப் புறம்பானவை என மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் உள்ளிட்டோர் பல முறை சுட்டிக்காட்டிய பின்னரும் இப்படியான சம்பவங்கள் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது.
- சென்னையில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, சீஸிங் ராஜா ஆகிய மூன்று பேர் காவல் துறையினர் நடத்திய மோதல் கொலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முதல் இருவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
- மோதல் கொலைகளில் கொல்லப்படுபவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால், அதைக் கொண்டாடும் மனநிலை சிலரிடம் இருக்கிறது. எனினும், இப்படியான மோதல் கொலைகளுக்குப் பிறகும் குற்றச்செயல்கள் குறைந்துவிடுவதில்லை என்பதே நிதர்சனம். இந்தச் சூழலில், காவல் துறையினர் இப்படியான மோதல் கொலைகளை மேற்கொள்வது, வழக்கை விரைவாக முடிப்பதற்கான முயற்சியா உண்மையை மறைக்கும் தந்திரமா என்னும் கேள்விகள் எழுகின்றன.
- சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட நபர், காவல் துறையினரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்துத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறி சுட்டுக்கொல்லப்பட்டது, பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கும் மும்பை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டிருக்கிறது.
- இப்படியான மோதல் கொலைகளின் பின்னணிக் காரணிகளாகக் காவல் துறையினர் தெரிவிக்கும் தகவல்கள் ஏறத்தாழ ஒரே பாணியில் இருப்பதும் சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டுவதாகக் காவல் துறையினருடன் சென்று, அங்கு திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி, மோதல் கொலைகளைக் காவல் துறையினர் நியாயப்படுத்துவது தொடர்கதையாகிவிட்டது.
- மோதல் கொலைகள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றவை அல்ல. 1997இல் மனித உரிமைகள் ஆணையத்தின் அப்போதைய தலைவர் நீதிபதி வெங்கடாச்சலய்யா அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், ‘மோதல் கொலையில் ஈடுபடும் காவலர்கள் மீது மரணம் விளைவிக்கும் குற்றம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். போலியான மோதல் கொலையில் ஈடுபடும் காவலர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று 2011இல் உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்திருந்தது. எனினும், இத்தகைய நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை.
- சில மோதல் கொலைகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை முழுமை அடைவதில்லை; சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பல குற்ற நிகழ்வுகள் தொடர்பான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகள் கிடைக்கும் நிலையில், காவல் துறையினர் நடத்தும் மோதல் கொலைகள் தொடர்பான காட்சிகள் கிடைப்பதில்லை. தவிர, சிறையில் நிகழும் மரணங்கள், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்குக் கை / கால் முறிவு ஏற்படுவது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன.
- சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதாகச் சொல்லிக்கொண்டு இப்படிச் சட்டத்துக்குப் புறம்பாகக் காவல் துறையினர் செயல்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் அரசியல் பின்னணி, சமூகப் பின்னணி என எதையும் பொருட்படுத்தாமல், காவல் துறையும் நீதித் துறையும் மிகுந்த கூருணர்வுடன் செயல்பட்டு குற்றங்களைக் களைய முன்வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அவலங்கள் முடிவுக்கு வரும்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2024)