TNPSC Thervupettagam

தொடரும் வன்கொடுமை: களையப்பட வேண்டிய அநீதி

July 28 , 2023 534 days 307 0
  • அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரைக் காலில் விழவைத்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பட்டியல் சாதியைச் சேர்ந்த அன்பரசனின் வீட்டு நிகழ்ச்சிக் கொண்டாட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதியினர் இத்தகைய வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. சமூக நீதி மண் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில், பட்டியல் சாதியினருக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைச் சம்பவங்களின் சமீபத்திய உதாரணம் இது.
  • ஏற்கெனவே உள்ள சட்டப் பிரிவுகளின் போதாமையால்தான் 1989 இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைகளைக் கணக்கில்கொண்டும் பட்டியல் பழங்குடிச் சமூகத்தினரை உள்படுத்தியும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை 2021 இன்படி, இந்தச் சட்டத்தின் கீழ் அந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் 50,900 ஆகும். 2020 இல் இவ்வழக்குகள் 50,291 ஆக இருந்தன. ஓராண்டில் 1.2% வன்கொடுமை வழக்குகள் அதிகரித்துள்ளன. 2019 இல் இது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 45,935 என்பது கவனம்கொள்ளத்தக்கது.
  • பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக வன்முறை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை பெற்றிருப்பதாக 2022 ஜூலையில் மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டை விட கல்வியில் பின்தங்கியுள்ள பிஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள், வன்கொடுமைகளில் தமிழ்நாட்டுக்கு அடுத்த நிலையில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 345 கிராமங்கள் பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்கொடுமை நடைபெறும் இடங்கள் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் இந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. வேங்கைவயலில் பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கு, அந்த வழக்கு விசாரணையில் நீடிக்கும் தாமதம் ஆகியவை இதற்குச் சிறந்த உதாரணம். அதே ஊரில் இரட்டைக்குவளை முறையும் நடைமுறையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
  • தென்முடியனூரில் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்த கோயில் நுழைவு நிகழ்ச்சிக்குப் பிறகு பட்டியல் சாதி மக்கள் மீது வன்முறை நடைபெற்றது. மதுரை மாவட்டம் காயம்பட்டியில் ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகப் பட்டியல் சாதித் தம்பதியினர் ஆடை அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இப்படி சேலம், மதுரை, விருத்தாசலம், தென்காசி எனப் பல மாவட்டங்களில் பட்டியல் சாதியினருக்கு எதிரான பல்வேறு வன்முறைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  • ஆளும் அரசுகள் ஆதிக்கச் சாதியினரின் வாக்குகளைக் கருத்தில் கொண்டே இந்த விஷயத்தை அணுகுகின்றன என்பது இந்த வழக்கு விசாரணைகளில் நீடிக்கும் தொய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டிய காவல் துறை போன்ற அமைப்புகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுவருவது குறித்த குற்றச்சாட்டுகளும் உண்டு.
  • அரசும் நிர்வாக அமைப்பும் இதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதைத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசமைப்பின்படி அரசும் நிர்வாக அமைப்புகளும் நீதி வழுவாமல் இனியாவது தங்கள் கடமையாற்றி பட்டியல் சாதி மக்களின் உரிமையை நிலைநாட்ட உறுதியுடன் செயல்பட வேண்டும்.

நன்றி: இந்துதமிழ் திசை (28– 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்