- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ளப் போராடுவது போதாதென்று இயற்கையின் சீற்றமும் புயல்கள் உருவத்தில் இந்தியாவை தாக்குவது தாங்கொணாத் துயரம்.
- இந்தியாவின் மேற்கு கடற்கரையை "டவ்-தே' புயலும், கிழக்குக் கடற்கரையை "யாஸ்' புயலும் தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்திருக்கின்றன.
- "யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிஸா மாநிலங்களில் ஓரளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் அதிக அளவிலான உயிரிழப்புகள் இல்லாமல் காப்பாற்றப்பட்டன.
- மேற்குக் கடற்கரையைத் தாக்கிய "டவ்-தே' புயலால், கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 75-க்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டது.
- அந்தப் புயலால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து இரண்டு வாரங்களாகியும் இன்னும் அந்த மாநிலங்கள் முழுமையாக மீளவில்லை என்பதுதான் உண்மை.
- மணிக்கு 185 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் வீசிய புயல் காற்றால், வழிநெடுக மரங்கள் வேரோடு சாய்ந்தன; சுவர்கள் இடிந்து விழுந்தன; மண்ணாலான வீடுகள் உருத்தெரியாமல் அழிந்தன.
- மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிரமும், குஜராத்தும் ஏற்கெனவே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றன.
- அந்த மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் தடுப்பூசி திட்டம் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப் பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என்றாலும்கூட, புதிய பிரச்னைகளை அது எழுப்பியிருக்கிறது.
டவ்-தே
- "டவ்-தே' புயல் காரணமாக குஜராத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். மகாராஷ்டிரத்திலும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
- அதன் விளைவாக நோய்த்தொற்றுப் பரவல் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் உறைந்து கிடக்கிறது மாநில அரசுகளின் சுகாதாரத்துறை.
- 2021-இல் இந்தியாவின் மேற்கு கடற்கரையைத் தாக்கும் முதல் புயல் "டவ்-தே'.
- கடந்த 30 ஆண்டுகளில் மேற்கு கடற்கரையைத் தாக்கிய மிகக் கடுமையான புயலும் இதுதான்.
- கடந்த ஆண்டு "நிசர்கா' புயலும் அதற்கு முந்தைய ஆண்டு "வாயு' புயலும் இந்தியாவின் மேற்கு கடற்கரையைத் தாக்கியிருக்கின்றன.
- நான்காவது ஆண்டாகத் தொடர்ந்து அரபிக் கடலில் பருவ மழைக் காலத்துக்கு முன்னர், புயலுடன் கூடிய மழை காணப்படுவது பேரிடர் மேலாண்மைக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால்.
- சாதாரணமாக, அரபிக் கடலைவிட வங்காள விரிகுடா கடலில்தான் அதிக அளவில் புயல் உருவாவது வழக்கம்.
- அதேபோல, வீரியமுள்ள காற்றுடன் அடிக்கும் புயலும் வங்காள விரிகுடாவில் உருவாகி மேற்கு கடற்கரையைத் தாக்கும் புயலாகத்தான் இருக்கும். ஆண்டுதோறும் இரண்டு, மூன்று புயல்கள் அரபிக் கடலில் உருவானாலும்கூட அவை கடலிலேயே வீரியம் இழந்துவிடும்.
- 4,000-க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்குக் காரணமான 1998 குஜராத் புயலுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் தீவிரமான காற்றுடன் கூடிய புயல் மேற்கு கடற்கரையைத் தாக்குகிறது.
- உலகிலுள்ள ஏனைய கடல் பகுதிகளைவிட இந்து மகா சமுத்திரத்தின் மேற்குப் பகுதிதான் கடந்த ஒரு நூற்றாண்டாக அதிக வெப்பமடைந்து வருவதாக பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- வங்காள விரிகுடாவில் நீர்மட்ட வெப்பநிலை சராசரியாக 28 டிகிரி என்றால், அரபிக் கடலின் வெப்பநிலை அதைவிட ஒன்றிரண்டு டிகிரி குறைவாகவே இருக்கும். கடந்த 40 ஆண்டுகளில் அரபிக் கடலின் வெப்பநிலையும் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- நீர்மட்ட வெப்பமும், காற்றில் காணப்படும் ஈரமும் புயலின் வன்மையை அதிகரிக்கின்றன. நீர்மட்ட வெப்பம் அதிகரித்ததுதான் எதிர்பாராத நேரத்தில் மிகவும் வீரியமாக "டவ்-தே' புயல் உருவானதற்கு காரணம் என்று கருதப் படுகிறது.
- இந்தியா ஒரு தீபகற்பம் என்பதால், ஆண்டுதோறும் புயல்களால் தாக்கப்படுவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், சமீபத்தில் தாக்கிய "டவ்-தே' புயல், இயற்கை சமநிலை மாற்றத்துக்கான அறிகுறியாகத் தெரிகிறது.
- சாதாரணமாக பருவமழைக்குப் பிறகு புயல் அடிப்பதுதான் வழக்கம். "டவ்-தே', பருவ மழைக்கு முன்பு உருவானதும், இந்த அளவுக்கு கடுமையான வேகத்துடன் காற்று வீசியதும் புதியதொரு வழக்கத்துக்கு வழிகோலியிருப்பதாகத் தெரிகிறது.
போராட தயாராக வேண்டும்
- பிரச்னை இத்துடன் முடிந்துவிடவில்லை. கடல் வெப்பம் அதிகரிப்பதால் புயல்கள் அதிக அளவில் உருவாகும் என்பது மட்டுமல்ல, எதிர்பாராத நேரத்தில் காற்றுடன் கூடிய மழையும், புயலும் உருவாகும் அபாயமும் உண்டு.
- மிக வேகமாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, வேகமான காற்றுடன் புயல் வீசும். அதைக் கண்காணிப்பதில் சற்று கவனக்குறைவு இருந்தாலும், பேரிழப்புகளையும் உயிரிழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
- புயல்கள் மட்டுமல்லாமல், மிகக் கடுமையான பருவமழை பாதிப்பையும் கடல் வெப்ப அதிகரிப்பு ஏற்படுத்தக் கூடும்.
- கிழக்கு கடற்கரையோ, மேற்கு கடற்கரையோ, வங்காள விரிகுடாவோ, அரபிக் கடலோ எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் புயல் உருவாகும் என்பதை உணர்ந்து அதை எதிர்கொள்ள முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதும், நமது வானிலை ஆய்வு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதும் மிக அவசியம்.
- "இஸ்ரோ'வின் செயற்கைக்கோள்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
- இயற்கையை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டுமே தவிர, அதனை எதிர்த்துப் போரிடுவது இயலாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நன்றி: தினமணி (02 – 06 - 2021)