TNPSC Thervupettagam

தொ.மு.சி. என்றொரு தனித்துவ ஆளுமை

October 22 , 2023 446 days 353 0
  • தமிழ் நவீன இலக்கியத்தின் மூலவர், தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி தொ.மு.சி ரகுநாதனின் நூற்றாண்டின் நிறைவு இது. அரசியலிலும், இலக்கியத்திலும் தடம் பதித்த நெல்லைச் சீமையில் பாரதி, புதுமைப்பித்தனின் தொடர்கண்ணி ரகுநாதன். செல்வமும், செல்வாக்கும், கலை இலக்கிய மரபு மிக்க குடும்பம் அவருடையது. இளமை வாழ்வில் தீராத அறிவுத் தேடலும், அகன்ற வாசிப்பும் அவருக்கு வாய்த்தது. கூடவே நாட்டுப்பற்றும், சமூக உணர்வும் மேலோங்கிற்று. அவரின் நட்புத்தேர்வு இடதுசாரி வட்டாரமானது. 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மாணவனாகப் போராட்டக் களம் புகுந்தார். படிப்பு தடைப்பட்டது. டி.கே.சி., அ. சீனிவாசராகவன், மு. அருணாச்சலக் கவுண்டர் ஆகியோரின் தொடர்பும் வாய்த்தது.
  • திருநெல்வேலியில் ஒரே காலகட்டத்தில் முற்போக்கு இயக்கத்தில் தொழிற்பட்டவர்கள் நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவசங்கரன் ஆகிய மூவர். ஓரிரு வயது வித்தியாசம் கொண்டவர்கள். நா.வா. முழுக்க ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல் சார்ந்து இயங்கினார். தி.க.சி. இலக்கியத் திறனாய்வைக் கைக்கொண்டு, தாமரை இதழ்வழி பணி செய்தார். ரகுநாதன் படைப்பாளர், திறனாய்வாளர், ஆய்வாளர் என்ற நிலைகளில் தன் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டார். ரகுநாதன் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளுக்கு வெளியே சமூகவியல் - வரலாறு சார்ந்த ஆய்வு முறைமைகளை உருவாக்கிச் செயற்படுத்தினார்.
  • எதையும் மாற்றி யோசிப்பதும், புதிதாய் வடிப்பதும் அவரின் இயல்புகள். பேச்சு, படைப்பு, ஆய்வு, இயக்கம் ஆகிய யாவற்றிலும் முனைப்போடு செயல்படத் தொடங்கினார். தன் குடும்பம் சார்ந்த அறிமுகத்தை அவர் விரும்பியதில்லை. அவருக்கு அடையாளமாகிப்போன தொ.மு.சி - தொண்டைமான் முத்தையா என்ற முன்னொட்டைக் கூட அவர் விரும்பியதில்லை. சிதம்பர ரகுநாதன் அல்லது ரகுநாதன் என்பதே அவரின் ஏற்பாக அமைந்தது. இது அவரின் தனித்துவம். இறுதி வரை வணங்காமுடியாகவே வாழ்ந்தவர் அவர். ஞானச் செருக்கு அவரின் நடையில், உடையில், பேச்சில் வெளிப்படும். அவரின் படைப்பும் ஆய்வும் கூட இத்தளத்திலேயே இயங்கின. தான் கூறியதைத் தானே மறுத்தாலன்றி ஒப்பார். அதுவும் பிற்காலத்தில் நிகழ்ந்தது. எதையும் ‘உறுதிபட’ மொழிதல் அவரின் முதலும் முடிவுமான எழுத்துச் சூத்திரம்.
  • ரகுநாதன் எல்லா வகையிலும் விடுதலை உணர்வு கொண்டவர். கட்டுக்குள் இருக்க நேர்ந்தாலும் கர்ஜிக்கும் பேராளுமை அவருக்கிருந்தது. ஏறக்குறைய புதுமைப்பித்தனும் அவரும் இவ்வியல்பில் நாணயத்தின் இரு பக்கங்கள்.
  • பதினெட்டு வயதில் எழுதத் தொடங்குகிறார். முதல் பத்தாண்டுகள் இதழ்களோடு பயணிக்கிறார். தினமணி, முல்லை, சக்தி, சாந்தி ஆகிய இதழ்களில் அவர் பணியாற்றிய பத்தாண்டுகள் இளம் ரகுநாதனை தீவிர இலக்கியவாதியாக்கிற்று எனலாம். குடும்பச் சொத்தில் அவருக்குக் கிடைத்த உரிமைத்தொகையே ‘சாந்தி’ (1954 - 56) இதழுக்கு மூலதனமானது. இக்காலக்கட்டத்திலேதான் அவர் படைப்பில் தீவிரமாக இயங்கினார். கு. அழகிரிசாமியின் தோழமை அவருக்கு வாய்த்தது. சுந்தர ராமசாமி போன்றவர்கள் புதுமைப்பித்தனின் மறு வடிவமாக ரகுநாதனைக் கண்டார்கள். சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் படைத்தார்.
  • ரகுநாதனின் சிறுகதைகள் வடிவ நேர்த்தியும் கருத்து தேர்ச்சியும் மிக்கவை. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் அவரின் சில சிறுகதைகளும் நிச்சயம் அடங்கும். வென்றிலன் என்ற போதும், பிரிவு உபசாரம், ஆனைத்தீ, நீயும் நானும் போன்றவை முக்கியமானவை. தொன்மங்களைக் கையாள்வதும், எள்ளல் நடையும் அவரின் தனித்துவங்கள்.
  • புயல், முதலிரவு, கன்னிகா போன்ற தொடக்க கால நாவல்கள் உளம் சார்ந்து நவீன மனப் போரட்டங்களை முன்வைத்தன. பாலியலின் பன்முகத்தைப் பேசின. இவை அவரின் சோதனை முயற்சிகள். ஏராளம் விற்றுத் தீர்ந்தன. இவைகளில் முதலிரவு தடை செய்யப்படக் காரணம்கூட, விற்பனை குறித்த பொறாமைதான் என்ற தகவலும் உண்டு. இதன் தொடர்ச்சியாகத்தான் ‘பஞ்சும் பசியும்’ எனும் புதுமையானதொரு படைப்பை அளித்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்தார்.  ‘பஞ்சும் பசியும்’ நாவல் எளிய தமிழ்ப் பாட்டாளிகளின் முகத்தை இலக்கியச் சித்திரமாக்கித் தந்தது. அதன் கலை அழகியல் கூறுகளின் போதாமையையும் விஞ்சித் தமிழில் புதுத்தடம் பதித்து நிற்கிறது.
  • அதே போல இருபத்து நான்காம் வயதில் ரகுநாதன் படைத்த ‘இலக்கிய விமர்சனம்’ தமிழில் இலக்கியத் திறனாய்வு குறித்த முதல் நூல். அழகியல் பார்வைகளை அள்ளித் தந்த நூல். கருத்தியலில் மட்டுமல்ல நடைச்சிறப்பிலும் கவர்ந்திழுத்த நூல். கல்விப்புல மேலைக் கோட்பாட்டு மரபிலான இலக்கிய விமரிசனங்களுக்கு மாற்றாகவும் இதனைக் கருத இயலும், இதில் நவீனத்துவக் கூறுகள் தென்பட்டாலும், பின்னர்தான் கொண்ட யதார்த்தவாத அணுகுமுறைகளுக்கு இந்நூலிலேயே ரகுநாதன் கட்டியம் கூறி விடுகிறார்.
  • அறுபதுகளின் தொடக்கத்தில் திராவிட இயக்க எழுச்சிக்கு மாற்றாக அல்லது இணையாக எழுந்த பொதுவுடைமை இயக்கப் பண்பாட்டுக்களத்தில் ரகுநாதன் முன்னிலை எடுக்கிறார். ஜீவா தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனும் பண்பாட்டு அமைப்பின் கொள்கையை முன் மொழிகிறார். இலக்கிய இதழுக்குத் ‘தாமரை’ எனப் பெயரிட்டு, இடதுசாரி இலக்கிய இதழாக மலர்ச்சியுற உதவுகிறார். ‘தமிழால் முடியும்’ என்று தாய் மொழிக்கல்விக்காக குரல் கொடுக்கிறார். தமிழ்நாடு முழுவதிலும் பட்டி மன்றங்கள், கவியரங்குகளில் முழங்குகிறார். அவரின் மேடைக்கவிதைகள் அதன் நிகழ்த்துக்கையால், உடல் மொழியால் புகழ் பெற்றன. கட்டணம் செலுத்திக் கவியரங்கம் காணும் நிலை கூட அன்று இருந்தது.
  • ‘திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்’ எனும் புகழ் பெற்ற கவிதை -.

“அறிவொளி கொண்டு நான் வருவேன் – காணும்

அண்ட சராசரம் அனைத்தையும் மாந்தர்

இருகரம் அதனுள் வசப்படத் தருவேன்;

ஈசர்க்கு நிகராய் மனிதனைப் புரிவேன்.”

  • அவரின் கம்பீரக்குரல் கேட்டோர் உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
  • ரகுநாதனின் இரண்டு கண்கள் என பாரதியையும், புதுமைப்பித்தனையும் சொல்லலாம். தன் வாழ்நாள் முழுக்க இந்த இரு ஆளுமைகளையும் தோள்களில் சுமந்தார். வாளும் கேடயமுமாக அமைந்து ஆய்வுலகில் இவர்களை நிலை நாட்டினார். அதில் பெருமிதம் கொண்டார். பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடிகள். மக்களின் மனச்சான்றாக வாழ்ந்தவர்கள். கலை இலக்கியப் பங்களிப்பு செய்தவர்கள். இவர்கள் ‘பொன்னே போல் போற்றப்பட வேண்டிய முன்னோர்கள்’ என்ற திடமான எண்ணம் அவருக்கு இருந்தது.
  • 1952 ல் எழுதிய ‘ புதுமைப்பித்தன் வரலாறும்’ 1999 ல் எழுதிய ‘புதுமைப்பித்தன் கதைகள் – சில விமர்சனங்களும், விஷமத்தனங்களும்’ புதுமைப்பித்தனை தமிழ்ச் சமூக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் நிலை நிறுத்தும் முயற்சிகள். வாழ்க்கை வரலாறுகளில் புதுமையானது புதுமைப்பித்தன் வரலாறு. ஐம்பது ஆண்டுகள் கழித்து வெளியான  ‘விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’ தமிழ் இலக்கிய உலகின் வர்க்க, வர்ண, கருத்து மோதல்களை நுட்பமாக முன்வைத்தது.
  • பாரதி ஆய்வுகளில் அவரின் ‘பாரதி - காலமும் கருத்தும்’ ஒரு மைல் கல். பல புதிய வெளிச்சங்களைத் தந்தது. சாகித்திய அகாதெமி விருதும் பெற்றது. அதே போல பாரதியும் ஷெல்லியும், கங்கையும் காவிரியும் ஆகிய பாரதி ஆய்வுகள் ஒப்பிலக்கியத்துக்கு அரிய கொடை எனலாம். பாரதி சிலபார்வைகள், பாஞ்சாலிசபதம் – உறை பொருளும் மறைபொருளும் போன்ற நூல்கள் பாரதி இயலுக்கு வளம் சேர்ப்பவை.
  • ரகுநாதன் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். அடிப்படையில் மார்க்சியர். இந்தியத் தத்துவப் போக்குகளை அறிந்தவர். தருக்கவியலில் அவருக்கு நாட்டம் உண்டு. அவரின் ஆய்வுகளில் தடை விடை முறையும், விவாத முறையும் நிரப்பி இருக்கும். சமூக வளர்ச்சி நிலைகளை உள்வாங்கி இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். 'இளங்கோவடிகள் யார்?' அவரின் அரிய அசுர முயற்சி. ஆனால் பெரிய அளவில் விவாதிக்கப்படாதது அவருக்கும் வருத்தமே. நுஃமான் போன்றவர்கள் எதிர் விமர்சனம் செய்தனர். அதை ரகுநாதன் நேர்மையுடன் அணுகினார். ‘நான் சமுதாயவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். அவர் இலக்கியவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்’ என மறுமொழி தந்தார். தொடக்கத்தில் தமிழ் இலக்கியத்தின் தத்துவச் சார்புகள் குறித்து சரஸ்வதி இதழில் எழுதினார். திருக்குறள் குறித்து விரிவாக எழுத திட்டமிட்டிருந்தார். அதேபோல அவர் நிரம்பப் பேசி எழுதாமல் விட்டது கம்பன். கம்பனில் இலயித்து அவர் பேசுவதைக் கேட்பதே இன்பம். மாற்றுப் பார்வைகள் பல அவரிடம் இருந்தன. அவை எழுதா ஆவணங்களாகவே போய் விட்டன.
  •  சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை ஆழங்கால்பட்ட ஆய்வு மனம் அவருக்கு இருந்தது. அதிகம் பேசப்படாத இடைக்கால - சிற்றிலக்கியங்கள் குறித்து ‘சமுதாய இலக்கியம்’ எனும் நூலினைப் படைத்தார். அவரின் இலக்கிய வாழ்வின் பெரும்பகுதி (1967 – 1988) சோவியத் நாடு செய்தித் துறையில் கழிந்தது. மொழிபெயர்ப்பு முழு நேரப் பணியானது, அவருக்கு பெருவிருப்பு இல்லை என்றாலும் அதையும் திறம்படச் செய்தார். மொழி பெயர்ப்பு நுட்பங்கள் அவருக்கு கைவந்தது. மொழிபெயர்ப்பு குறித்து சில வரையறைகளும் அவருக்கு இருந்தன. தாய் நாவல், லெனின் கவிதாஞ்சலி உள்ளிட்ட பல புகழ் பெற்ற சாகாவரமிக்க மொழிபெயர்ப்புகளை அவர் தமிழுக்கு வழங்கினார்.
  • இலங்கையின் முற்போக்கு இயக்கத்துக்கும் ரகுநாதன் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். சாந்தியும், சரஸ்வதியும், தாமரையும் ஈழத்தில் அதிகம் செல்வாக்கு பெற ரகுநாதனே காரணம். 1956-ல் மற்றும் 1983-ல் இலங்கைக்குச் சென்றார். க.கைலாசபதி கா. சிவத்தம்பி ஆகிய இரு அறிஞர்களை தமிழகத்தோடு தொடர்புபடுத்தி ஆய்வுலகில் வலம் வரச்செய்தார். இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தார். இலங்கையில் ஜீவா என்கிற பெயரும், ரகுநாதன் என்கிற பெயரும் பரவலாக பலரின் பெயர்களாக சூட்டப்பட்டுள்ளமையும் அவரின் சிறப்பை உணர்த்தும்.
  • ரகுநாதன் கடைசிவரை பொதுவுடைமைக் கட்சியில் இருந்தார். தொடக்கம் முதலே அவர் ஒரு கலகக்காரராகவும் திகழ்ந்தார். எதிர்க்கலாசாரத்தை வலியுறுத்தினார். அந்தோனியா கிராம்ஷியை வரவேற்றார்.
  • புதுமைப்பித்தன் வரிசையில் ரகுநாதனும் தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர். வழக்கமான மௌனத்தால் அவரின் நூற்றாண்டையும் கடந்து செல்வது துயரமே.
  • (1923-2023 -  தொ.மு.சி. நூற்றாண்டு)

நன்றி: தினமணி (22 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்