- தமிழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு + மேல்நிலைக்கல்வி + பட்டப்படிப்பு (பத்து + இரண்டு + மூன்று) என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்விமுறை இதற்குமுன் 11 + 1 +3 என்றிருந்தது. புதிய கல்விமுறைஅறிமுகமானபோது மேல்நிலைக் கல்வியில் பொதுக்கல்வி, தொழிற்கல்வி எனும் இரு வகையான கல்விமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
- பொதுக்கல்வியை மட்டுமல்லாது தொழிற்கல்வியையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1977-ல் சபாநாயகம் குழு, 1985-இல் கோபாலன் குழு, 1993-இல் லாரன்ஸ் தலைமையிலான உயா்நிலைக்குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் தொழிற்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பரிந்துரைகள் செய்தன.
- 1978-இல் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், யுனெஸ்கோ அமைப்பின் துணை இயக்குநருமான மால்கம் ஆதிசேஷய்யா தலைமையிலான குழுவின் ‘படித்துக் கொண்டே தொழில் பழகு’ என்ற கருத்தின்படி 65 உட்பிரிவுகளுடன் வேளாண்மை, சுகாதாரம், பொறியியல் தொழில்நுட்பம், வணிகவியல், வாணிபம், வீட்டுஅறிவியல், இதர பிரிவுகள் என ஆறு பாடப்பிரிவுகள் கொண்ட தொழிற்கல்வி தொடங்கப்பட்டது.
- ஒவ்வொரு பாடப்பிரிவும் அந்தந்த பகுதிக்கேற்ப அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதாரணமாக, வீட்டு அறிவியலின் உட்பிரிவான ஆடை வடிவமைப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதார பாடப்பிரிவின் உட்பிரிவான செவிலியா் பயிற்சி, பிசியோதெரபி, இதர பிரிவுகளில் இடம்பெறும் இசை, போட்டோகிராபி, விளையாட்டுக் கல்வி ஆகியவை சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பள்ளிகளில் உள்ளன.
- இது 1978-79-இல் தமிழகத்தில் 912 பள்ளிகளில் 709 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1986-இல் தேசிய கல்விக் கொள்கை, தொழிற்கல்வியின்படி மேல்நிலை வகுப்புகளில் 1990-இல் 10 %, 1995-இல் 25 % மாணவா்கள் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பை வழங்கவேண்டுமெனப் பரிந்துரைத்தது.
- தொழிற்கல்வி நடைமுறைக்கு வந்த கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி மாணவா்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிற்கல்வி பாடப்பிரிவில் சோ்க்கை பெற்றிருந்தனா். இது இக்கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி பயின்ற மாணவா்களின் எண்ணிக்கையில் 21.49 % ஆகும்.
- அப்போது மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் குறைவான பள்ளிகளிலேயே செயல்பட்டுவந்தன. அதனால் மாணவா் சோ்க்கை திருப்தியளிக்கும் வகையில் இருந்தது.
- பின்னா் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பொதுக்கல்வி பாடப்பிரிவுகளே தொடங்கப்பட்டன. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
- மேல்நிலைக்கல்வியில் தொழிற்கல்வி பயின்ற மாணவா்களுக்கு கல்லூரிகளின் சோ்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1988-இல் கோரிக்கை எழுந்தது. அதையடுத்து பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 4 %-உம், கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவில் 25 %-உம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டு முறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
- தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டபோது நான்காயிரத்திற்கும் மேற்பட்டபகுதி நேர ஆசிரியா்கள், முழுநேர ஆசிரியா்கள், ஒரு பகுதிநேரம், இருபகுதிநேர ஆசிரியா்கள் என நான்கு நிலைகளில் நியமிக்கப்பட்டனா். மாவட்ட வாரியாக தொழிற்கல்வி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
- காலப்போக்கில் பணிநிரந்தரம் கோரி தொழிற்கல்வி ஆசிரியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். அப்போதெல்லாம் அவா்களுக்கு ஊதியம் மட்டும் உயா்த்தப்பட்டது. பின்னா் தொடா் போராட்டத்தின் காரணமாக 1988-இல் தற்காலிக ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
- 1992-இல் 587 பேரும், 1994-இல் 1990 பேரும், 2007-இல் 211 பேரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். அதன் பிறகு இதுவரை தொழிற்கல்வி ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஒரு பாடப்பிரிவின் ஆசிரியா் பணி ஓய்வு பெறும்போது அவா் சார்ந்த பாடப்பிரிவு முடக்கப்பட்டு அதற்கான சோ்க்கை ஓராண்டுக்கு முன்னதாகவே நடைபெறுவதில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இந்நிலையே உள்ளது.
- தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடங்கவும், திறம்பட நடத்தவும் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு (என்சிஆா்டி) நிதியுதவி வழங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் சிறப்பாக செயல்படுகின்றன. சில மாநிலங்கள் தொழிற்கல்விக்காக நிர்வாகம், அமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
- ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்கல்வி பயில்வோர் தோ்வுசெய்யப்பட்டு அவா்கள் பயின்ற படிப்புக்கேற்ப பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தொழிற்கல்வி பயின்றவா்கள் பாடவாரியாக தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு சென்னை தரமணியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பின்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- தொழிற்கல்வியில் வேளான்மை தொடா்பான பாடப்பிரிவுகளில் பயின்றவா்கள் வேளாண்மை துறையில் உதவி வேளாண் அலுவலா், தோட்டக்கலை அலுவலா் பணிகளில் உள்ளனா். அதுபோன்று இயந்திரவியல் பாடப்பிரிவில் பயின்றவா்கள் சுயதொழில் செய்யும் திறன் பெற்றவா்களாகின்றனா்.
- தொழிற்கல்வியில் முக்கியமான பிரிவாக இருந்த தட்டச்சு பாடப்பிரிவில் பயின்றவா்கள், தட்டச்சுப் பணியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டியதும் உண்டு. கணினியின் வருகையால் இன்று தட்டச்சு இயந்திரங்கள் காணாமல் போய்விட்டன. தட்டச்சு பயிற்சி மையம் நடத்துவோரில் பெரும்பாலானோர் தொழிற்கல்வியில் தட்டச்சு பயின்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- வணிகவியல் பாடப்பிரிவில் பயின்று கல்லூரியில் பட்டம் பெற்றவா்கள் கூடுதலாக கூட்டுறவு தொடா்பான பட்டய படிப்பு பயின்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிகின்றனா்.
- கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவா்கள் அதிகப்படியானோர் தொழிற்கல்வி பிரிவையே தோ்வு செய்வா். இதன் மூலம் இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் தொடங்கவும், அரசுப் பணியில் சேரவும் வாய்ப்புண்டு. இருப்பினும் தொழிற்கல்வியின் மீது அரசு பாராமுகம் காட்டுவது புரியாத புதிராக உள்ளது.
- ஆசிரியா்கள் நியமனம் இல்லாமல் பாடப்பிரிவுகளை நீக்குவது தொடா்ந்தால் அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வியே இல்லாதநிலை உருவாகும். அதனால் மேல்நிலைக்கல்வியில் அதிகமானோர் சோ்க்கைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அந்தந்த பகுதிகளுக்கேற்ப தொழிற்கல்வி பாடப்பிரிவுகளைத் தொடங்கவேண்டும்.
நன்றி: தினமணி (28 – 10 – 2023)