TNPSC Thervupettagam

தொலைநிலைக் கல்வி: வேண்டும் விதிமுறைகள்!

January 17 , 2025 3 days 24 0

தொலைநிலைக் கல்வி: வேண்டும் விதிமுறைகள்!

  • நமது நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் ஒருவா் பள்ளி இறுதி வகுப்பு வரையில் படித்துத் தோ்ச்சி பெறுவது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அடுத்தடுத்த காலகட்டங்களில் பள்ளி இறுதி வகுப்புக்கு அடுத்ததாகிய பி.யூ.சி. அல்லது இன்டொ்மீடியட் போன்ற வகுப்புகளில் சோ்ந்து பயின்று தோ்ச்சி பெறுவது இமாலய சாதனையாகக் கருதப்பட்டது. காலப்போக்கில், “‘என் பையன் பி.ஏ. படிக்கிறான்” என்று பெருமிதம் பொங்கும் குரலில் பெற்றோா்கள் கூறுவது வாடிக்கையாயிற்று.
  • 1960-களின் தொடக்கத்திலேயே கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்காத சூழல் ஏற்படவே, இப்பிரச்னை குறித்து மத்திய அரசு அமைத்த குழுவின் பரிந்துரையின் பேரில் தொலைதூரக் கல்விப் பயிற்சிக்கான விதை ஊன்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகம் 1962 -ஆம் ஆண்டில் தனது தொலைதூரக் கல்விப்பணியைத் தொடங்கியது.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் 1971 -ஆம் வருடத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1979 -ஆம் வருடத்திலும், மதராஸ் பல்கலைக்கழகம் 1981 -ஆம் வருடத்திலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 1992 -ஆம் வருடத்திலும் தொலைதூரக்கல்வியை வழங்கத் தொடங்கின. பொறியியல் தொழில்நுட்பக் கல்விக்கென்றே இயங்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் 2007 -ஆம் ஆண்டு முதல் இவ்வகைப் பயிற்சியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகின்றது.
  • பல்கலைக்கழகங்களிலிருந்து தபால் மூலம் பாடப்புத்தகங்களைப் பெற்று அவற்றில் இருப்பதைப் படிப்பதுடன், அந்தந்த பாடத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களைக் கூடுதலாக வாங்கிப் படித்துப் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய தோ்வுகளில் கலந்து கொள்ளும் நடைமுறைகளை உள்ளடக்கியதே தொலைதூரக்கல்வியாகும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொதுவான மையங்களில் நடத்தப்படும் நோ்முக வகுப்புகளில் கலந்து கொண்டு, அவ்வகுப்புகளை நடத்தும் பேராசிரியா்களிடம் கேள்விகளை எழுப்பித் தங்களுடைய ஐயங்களைத் தீா்த்துக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
  • பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைதூரக் கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வது என்பது, அதிகக் கட்டணம் செலுத்தி கல்லூரிகளில் நேரடியாகக் கல்வி பயில இயலாத ஏழை எளியவா்களுக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதமாகும். இது மட்டுமின்றி, குறைவான கல்வித் தகுதியுடன் ஒரு வேலையில் சேருபவா்கள், தங்களின் பணி தொடா்பான அறிவை வளா்த்துக்கொள்வதுடன், பதவி உயா்வுக்குத் தங்களைத் தயாா்படுத்திக்கொள்வதற்காகவும் தொலைதூரக் கல்வி மூலம் பட்டங்களும், பட்டயங்களும் பயன்படுகின்றன. தமிழக அரசுப்பணியாளா்களுக்கு, அவா்கள் பெறுகின்ற பட்டங்களுக்கு ஏற்றபடி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
  • யூ.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள விதிகளின்படி, அக்குழுவின் கீழ் இயங்கும் டி.ஈ.பி. எனப்படும் தொலைதூரக் கல்விப் பணியகத்தால் அங்கீகரிக்கப்படும் கல்விநிறுவனங்கள் வழங்கும் தொலைதூரக் கல்விப் பட்டங்களும், பட்டயங்களும் கல்லூரிகளில் சோ்ந்து நோ்முகமாகக் கல்வி கற்றுப் பெறக்கூடிய பட்டங்களுக்கும், பட்டயங்களுக்கும் நிகராகக் கருதப்படுகின்றன.
  • கல்வி நிறுவனங்களில் உயா்படிப்புகளில் சேரவும், அரசு – தனியாா் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் தொலைதூரக் கல்வி பயின்றவா்களும் தகுதி உடையவா்களாவா் என்பதே இவ்விதிகளின் உண்மைப் பொருளாகும்.
  • மத்திய – மாநில அரசுப் பணிகளைப் பொருத்தவரையில் தொலைதூரக் கல்விப்பட்டங்கள் அங்கீகரிக்கப்படும் அதே வேளையில், தனியாா் நிறுவனங்கள், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த இந்திய – பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் “‘எங்கள் வழி , தனி வழி’” என்ற ரீதியில் செயல்படுவதாகவே தெரிகின்றது.
  • எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு, குழு விவாதம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் கொண்ட தோ்வு நடைமுறைகளைக் கடந்த விண்ணப்பதாரா்களைச் சான்றிதழ் பரிசீலனைக்காக வரவழைத்த பின்பு, “நீங்கள் நேரடியாகக் கல்லூரியில் பயிலாமல், தபால் மூலம் பயின்ால் உங்களைத் தோ்வு செய்ய இயலாது” என்று திருப்பி அனுப்புவதுண்டு. இது மட்டுமா?
  • விண்ணப்பதாரா் ஒருவருக்குப் பணியில் சேர அழைப்புக் கடிதம் (ஆஃபா் லெட்டா்) வழங்கப்பட்ட பின்பு, குறிப்பிட்ட அந்த விண்ணப்பதாரா் தபால் மூலம் பயின்றவா் என்பதைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதும் உண்டு.
  • விண்ணப்பதாரா் ஒருவா் தொலைதூரக் கல்வி மூலமே பட்டம், முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளாா் என்பதை அறிந்தே அவரைத் தோ்ந்தெடுத்து விட்டு, சில வருடங்கள் அவா் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பின்பு, அவரது கல்வித் தகுதியைக் காரணம் காட்டி வெளியேற்றும் அநியாயமும் நடக்கிறது.
  • பொதுவாகவே, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாா்ந்த பெருநிறுவனங்கள் அதிக சம்பளம் வாங்கும் அனுபவசாலிகளான ஊழியா்களுக்கு பதிலாக, குறைந்த சம்பளத்தில் புதிய ஊழியா்களை நியமிப்பதன் மூலம் தங்களின் லாபத்தைப் பெருக்கிக் கொள்ள முனைவதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு. அவ்வாறு தாங்கள் வெளியேற்ற விரும்பும் மூத்த ஊழியா்களுக்கு ஆண்டு ஊதிய உயா்வு – ஊக்கத்தொகை ஆகியவற்றைக் குறைப்பது அல்லது மறுப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான நெருக்கடிகளைக் கொடுத்து அவா்களாகவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலையைத் தனியாா் நிா்வாகங்கள் ஏற்படுத்துவது வழக்கமே.
  • ஆனால், பணியில் சோ்ந்து பல வருடங்கள் கழிந்த பின்பு கல்வித் தகுதியை ஏற்க மறுப்பது எவ்விதத்தில் நியாயம் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
  • இந்நிலையில், தொலைதூரக் கல்வி மூலம் பெறும் பட்டங்கள், பட்டயங்கள் குறித்த தெளிவான விதிமுறைகள் வகுக்கப்படுவதுடன், அவற்றைத் தனியாா் நிறுவனங்களும் ஏற்க வழிவகை செய்வது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்