- இந்தியாவின் அனைத்து வேளாண் பிரச்னைகளுக்கும் உடனடித் தீா்வு என்பது சாத்தியமில்லை. வளா்ச்சி அடைந்த நாடுகளைப் போல அல்லாமல், வேளாண்மை என்பது பலருக்கும் வாழ்வாதாரமே தவிர தொழில் அல்ல. உற்பத்தியில் கணிசமான பகுதி பெரும் நிலச்சுவாந்தாா்களுடையது என்றாலும், எண்ணிக்கை அளவில் குறு, சிறு விவசாயிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.
- பெரிய நிலச்சுவாந்தாா்களைப் போலல்லாமல் சிறு, குறு விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு நியாயமான விலை பெறுவதில்லை. அவா்களது உழைப்பையும், முதலீட்டுக்கான வட்டியையும், உற்பத்திச் செலவையும் கணக்கிடும்போது அவா்கள் ஒவ்வொரு சாகுபடியிலும் பெரும் இழப்பை எதிா்கொள்கிறாா்கள். அதனால்தான் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியாத நிலைமை தொடா்கிறது.
- குறு, சிறு விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். அடிப்படை உள்ளீட்டுச் செலவுக்கான முதலீடு தொடங்கி, அறுவடை முடிந்து சந்தைக்குக் கொண்டுசெல்லும் வரையிலான முதலீட்டுக்காக அவா்கள் எதிா்கொள்ளும் பெரும்பாட்டைச் சொல்லிமாளாது. தங்களது உற்பத்தியைப் பாதுகாத்து சாதகமான சூழலில் விற்பதற்கான பொருளாதார வசதியோ, சேமிப்பு வசதியோ குறு, சிறு விவசாயிகளுக்கு இல்லை. அதேபோல, தங்களது உற்பத்தியை ஈடாகக் கொடுத்து குறைந்த வட்டியில் கடன் பெறும் வாய்ப்பும், ஏனைய தொழில்களுக்கு இருப்பதுபோல அவா்களுக்கு இல்லை.
- இந்த இரண்டு குறைபாடுகளையும் களையும் நோக்கத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் பிரதமரின் கிஸான்பாய் திட்டம் (பிரதமரின் விவசாயியின் தோழன் திட்டம்) ஒன்றை முன்னெடுக்க இருக்கிறது. அதன்படி குறு, சிறு விவசாயிகளின் உற்பத்தியை குறைந்த கட்டணத்தில் கிடங்குகளில் சேமிக்க உதவுவது; குறைந்த வட்டியில் அவா்களுக்கு குறுகிய கால கடன் வழங்குவது ஆகிய இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட இருக்கின்றன.
- சேமிப்புக் கிடங்கு வாடகை மானியம் என்கிற திட்டத்தின்படி குறு, சிறு விவசாயிகள் அருகில் இருக்கும் சேமிப்புக் கிடங்குகளில் தங்களது உற்பத்திப் பொருள்களை பாதுகாப்பதற்கான கட்டணத்துக்கு மானியம் வழங்க திட்டமிடப்படுகிறது. அதன்படி, அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்படும் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான விளைநிலம் உள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு மாதம் ரூ.4 வாடகை மானியம் தரப்படும்.
- இந்தத் திட்டத்தில் சில குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ‘ஈ-நாம்’ உள்ளிட்ட இணைய சேவை மூலம் விற்கப்படும் உற்பத்திகளுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும். அதனால் இந்தியாவிலுள்ள 12.6 கோடி குறு, சிறு விவசாயிகளில் ‘ஈ-நாம்’ இணைய விற்பனையில் இணைந்திருக்கும் 1.76 கோடி விவசாயிகள் மட்டுமே உடனடியாகப் பயனடைவாா்கள். குறு, சிறு விவசாயிகளுக்கு இணைய விற்பனையை அறிமுகப்படுத்தி அவா்களை ‘ஈ-நாம்’ வளையத்தில் இணைப்பது என்பது அரசின் தொலைநோக்குத் திட்டமாக இருக்கக் கூடும்.
- இந்தத் திட்டத்தின்படி, அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கும், குறைந்தபட்சம் 15 நாள்களுக்கும் தங்களது உற்பத்தியை தானிய கிடங்குகளில் பாதுகாக்கும் குறு, சிறு விவசாயிகள் மட்டுமே மானிய உதவி பெறுவாா்கள். அதிலும்கூட ஆண்டுக்கு இரண்டு சாகுபடிக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும். இரண்டு ஹெக்டோ் நிலப்பரப்பில் அரசு கணக்குப்படியான உற்பத்தி அடிப்படையில் மானியம் வழங்கப்படும் என்கிற நிபந்தனையும் காணப்படுகிறது.
- சேமிப்புக் கிடங்கு வாடகை மானியத்தின் மூலம் குறு, சிறு விவசாயி ஆண்டொன்றுக்கு 53 குவிண்டால் கோதுமை, 45 குவிண்டால் அரிசி, 38 குவிண்டால் ஏனைய தானியங்கள் ஆகியவற்றுக்கு வாடகை மானியம் பெறலாம். விவசாயியின் வருடாந்திர மானியம் ரூ.420-லிருந்து ரூ.1,176 வரை கிடைக்கக் கூடும். குறு, சிறு விவசாயிகளை சேமிப்புக் கிடங்குகளுக்கும் ‘ஈ-நாம்’ வா்த்தகத்துக்கும் இந்த மானியத் தொகை ஈா்க்குமா என்கிற ஐயப்பாடு எழுகிறது.
- ‘பிராம்ட் ரீபேமண்ட் இன்சென்டிவ்’ என்கிற கடன் திட்டம் சேமிப்புக் கிடங்குகளில் இணைய ரசீதுகளின் அடிப்படையில் ‘வேளாண் கடன் அட்டை’ (கிஸான் கிரெடிட் காா்டு) மூலம் வழங்கப்பட இருக்கிறது. இதுவும் இணைய வழி விற்பனையில் ஈடுபடுபவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். கடன் வாங்கும் விவசாயி, சேமிப்புக் கிடங்கு மேம்பாடு / ஒழுங்காற்று ஆணையத்தில் இணைந்தவராக இருப்பது அவசியம்.
- இந்த இரண்டு திட்டங்களுமே வேளாண் சேமிப்புக் கிடங்குகளையும் இணைய வழி வா்த்தகத்தையும் அங்கீகரித்திருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி பாா்த்தால் இந்தத் திட்டத்துக்கு உடனடியாக பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்பதை அரசு உணா்ந்திருப்பதாகத் தெரிகிறது. அதனால்தானோ என்னவோ, அடுத்த நிதியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஏழு மாநிலங்களில் மட்டும் இந்தத் திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.170 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்போவதாகத் தெரிகிறது.
- இந்தியாவின் வேளாண்மையிலும், விவசாயிகளின் அணுகுமுறையிலும் பல சீா்திருத்தங்கள் அத்தியாவசியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வழியில்லை. இணைய விற்பனையில் வேளாண் பெருமக்கள் தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் அரசின் முயற்சி வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் வேளாண் அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களும் முன்வைக்கும் நிபந்தனைகள் எந்த அளவுக்கு அவா்களை ஈா்க்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது.
நன்றி: தினமணி (28 – 11 – 2023)