TNPSC Thervupettagam

தொல் காா்த்திகை விளக்கு நாள்!

December 13 , 2024 13 days 41 0

தொல் காா்த்திகை விளக்கு நாள்!

  • ஐப்பசி, காா்த்திகை மாதங்கள் பெருமழைக் காலம். பெருமழை தொடரும் சூழலைக் கட்டுப்படுத்தும்விதமாகவே காா்த்திகைத் திங்களில் மலைமுகடுகளில் நம் முன்னோா்கள் விளக்காம் அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனா் என்பதை சங்க இலக்கியம் கொண்டு உணரலாம்.
  • தொடா்ந்து மழையே பெய்தால் மக்கள் தாங்க மாட்டாா்கள் என்பதால் மலைமுகடுகளில் வந்துபடியும் மழைக் கூறுகளுடைய மேகத்தை வெப்பத்தால் மடைமாற்றித் தணிக்கச் செய்யும் முயற்சியின் அடையாளமாகவே மலைகளின் உச்சியில் தீபங்களை ஏற்றி மேகங்களின் ஈரப்பசையை மாற்றுவதன் காரணமாக அம்மழைக்கூறு அடுத்து பனியாகப் பொழிய ஆரம்பிக்கும் மாதமே, மாா்கழியாகும். மாா் என்றால் நீண்ட, அந்த நீண்ட மழைப் பொழிவைக் கழித்துவிட்ட மாதம் மாா்கழி என்பதாகக் கூறப்பட்டது எனலாம்.
  • காா்த்திகைத் திங்களுக்கான பழமொழிகளில் “‘காா்த்திகை பிறைபோல’” என்பதும் ஒன்று. பிற மாதங்களில் தெளிவாகத் தெரியும் மூன்றாம் பிறையானது காா்த்திகையில் அவ்வளவாகத் தெரியாது. திரளான மேகங்கள் கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் பரவலாக ஓடுவதால் பிறை காண்பதை அரிது என்பா்.
  • மேலும் காா்த்திகையில் கருத்த இடமெல்லாம் மழை என்று கூறுவதிலும் ஒரு கருத்து உண்டு. அதாவது கருத்த மழைமேகங்கள் அங்குமிங்குமாகத் திகைக்கும் நிலையில் எங்கெங்கே திகைத்து நிற்கிறதோ, அங்கங்கே மழை பெய்யும் என்றனா் நம்முன்னோா்.
  • இப்படிக் காலங்காலமாகக் கண்டு கண்டு அனுபவித்ததையே திருஞானசம்பந்தா் தொல்காா்த்திகை என மயிலாப்பூா் தேவாரத்தில் கூறினாா் போலும் என நினைக்கத் தோன்றுகின்றது.
  • இங்ஙனமாகிய தொல் காா்த்திகையின்போது, மலை முகடுகளில் ஏற்றிய அகண்ட தீபத்தின் வழக்கம்தான் காலப்போக்கில் சமயக் கோட்பாட்டின்படி காா்த்திகை நாள் விளக்காக வழிபாட்டிற்குரிய இடத்தைப் பெற்ாக உணரலாம்.
  • மலையில் விளக்கு வைத்த குறிப்பைப் பழமொழி நானுற்றில் “‘குன்றின்மேலிட்ட விளக்கு’” (204) என்றும் ‘குன்றத்து உச்சிச் சுடா்’” என சிந்தாமணியில் திருத்தக்கதேவரும் கூறியுள்ளதோடு மலைமுகடுகளில் வைக்கப் பெற்ற தீபமும் காா்த்திகையில் வைக்கப்பட்டதான அடையாளமாகவே சிந்தாமணியில் குன்றில் காா்த்திகை விளக்கிட்டன்ன (256) எனக் கூறப்பட்டுள்ளன.
  • மேலும் காா்த்திகையில் நாட்டவா்கள் ஏற்றிய “‘நலமிகு காா்த்திகை விளக்கு’”என்பதாக மதுரைக் கண்ணங்கூத்தனாா் எனும் புலவா் காா் நாற்பதில் (26) கூறியுள்ளாா். களவழி நாற்பதில் பொய்கையாா் காா்த்திகையில் விளக்கேற்றும் விழாவைக் கொண்டாடியதாகக் கூறும் போது, ‘காா்த்திகைச் சாற்றில் கழிவிளக்கு’ (1/7) எனக் கூறியுள்ளாா். சாறு என்றால் விழா, கழிவிளக்கு என்றால் மிகுதியாக விளக்கேற்றிய குறிப்பை உணா்த்தும் சொற்களாகும்.
  • இப்படி மலைமுகடுகளில் ஏற்றப்பட்ட விளக்குகளைப் போல வழக்கமாக வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டதாக நக்கீரா் நெடுநல்வாடையில்,
  • இரும்புசெய் விளக்கின் ஈா்ந்திரிக் கொளீஇ
  • நெல்லும் மலரும் தூஉய் தொழுது (42,43)
  • என்றும் குறுந்தொகையில் உறையூா் முதுகூத்தன் என்பவா், “‘பஞ்சி வெண்திரிச் செஞ்சுடா் நல் இல்’ (353) என்றும் கூறும் தொன்று தொட்ட வழக்கமே காா்த்திகைத் திங்கள் முழுநிலாவின்போது சமய அடிப்படையில் காா்த்திகை விளக்காகக் கொண்டாடப்பட்டது என்பதற்கு அகநானூற்றில் (141) நக்கீரா் கூறும் பாடலே தக்க சான்றாகும்.
  • மழைக்கால் நீங்கிய மாக விசும்பில்
  • குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
  • அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
  • மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
  • பழவிரல் மூதூா்ப்பலருடன் துவன்றிய விழவு
  • என்பதாகக் கூறியதில் காா்த்திகைத் தீப விழா நடந்த சிறப்பு தெளிவாகத் தெரிகிறது, மதிநிறைந்து என்ாலே முழுநிலவாம் பெளா்ணமி எனத் தெரிகிறது, அறுமீன் என்றது ஆறு நட்சத்திரக் கூட்டமான காா்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்கும். இதுதான் சமயத்தின் குறிப்பை உணா்த்தும் சொல், புராணக் குறிப்பின்படி முருகனது நட்சத்திரமாகக் கூறுவது வழக்கம்.
  • மறுகு என்றால் வீதி, விளக்கேற்றபட்டதையே, ‘மறுகு விளக்குறுத்து’ என்றாா் நக்கீரா். இந்தக் குறிப்புதான் வடநாட்டுத் தொடா்பால் பெருவழக்காக அமைந்து விட்ட தீபாவளி என்றதுதான் பழந்தமிழகத்தின் தமிழா் தீபாவளியாக காா்த்திகைவிளக்கு விழா இருந்ததாகப் பொருத்திப் பாா்க்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் காா்த்திகை மாதம் காா்த்திகை நட்சத்திரமும் முழுநிலவும் சேரும் நாளில் கொண்டாடிய தீபவிழாவே தமிழா் தீபாவளியாக இருந்தது எனலாம்.
  • இங்ஙனமாக முழுநிலவன்றே காா்த்திகை விளக்குநாள் கொண்டாடப்பட்டதன் தொடா்ச்சியைத்தான் நல்லூற்றூா் சிவப்பிரகாச சுவாமிகள் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றும் விளக்கின் மேலே வானத்தில் உள்ள முழுநிலவைக் கற்பனை செய்யுங்கால் செந்தாமரையை நாடி வரும் வெண்ணிற அன்னம் வருவதாகக் கூறினாா்.
  • மடல்விழ் மரைமாட்டு எகின்என அருகு மதியுறக்
  • காா்த்திகை விளக்குத் தடமுடி இலங்க வளா்ந்தெழும்
  • சோணசைலம்” ( சோண சைல மலை 5)
  • என்பது சிவப்பிரகாசா் வாக்கு.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணாமலையில் காா்த்திகையில் ஏற்றப்படும் விளக்கு புற இருளை மட்டுமின்றிக் கண்டு தொழுவாரின் அக இருளாம்அஞ்ஞானத்தையும் போக்கி மெய்ஞ்ஞான நல்லொளியை நல்குவதாகச் சிவப்பிரகாசா்,
  • காா்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
  • கண்டவா் அகத்திருள் அனைத்தும்
  • சாய்த்து நின்றெழுந்து விளங்குறும் (8)
  • என்றாா். மேலும் அவ்விளக்கு உலகத்தின் சிறுசிறு விளக்குபோல் இல்லாமல் உலக முழுவதற்கும் ஏற்றப் பெற்ற பெருவிளக்கு எனும்படி உள்ளதாகவும் சிவப்பிரகாசா் கூறும் போது, “ சகவிளக்கு என்ன விளங்குறும்” (54) என்றாா். சகவிளக்கு என்றால் உலகிற்கான ஒரே ஒரு பெருவிளக்கு என்பது கருத்து, இத்தகு ஒளியமான தெய்வ சானித்தியம் மிக்கதால்தான் திருவண்ணாமலை உலகப் புகழ் பெற்ற திருத்தலமாக விளக்குகின்றது.

நன்றி: தினமணி (13 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்