தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுப்பது அறமா?
- ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர்கள் கடந்த மூன்று வாரங்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 1,550 தொழிலாளர்கள் வெளியிலும், 300 தொழிலாளர்கள் உள்ளேயும் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாகத் திருவிழாக்கள் காத்திருக்கின்றன. மக்கள் கையில் பணம் புரளும் காலம்.
- சாம்சங் சாதனங்கள் அமோகமாகச் சந்தையில் விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. ஆனாலும் பிரச்சினையைச் சுமுகமாக முடித்து, உற்பத்தியில் கவனம் செலுத்த நிர்வாகம் தயாராக இல்லை. தொழிலாளர் துறை அமைச்சர் தலையிட்டு ஒருமுறையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் முன்னிலையில் ஒருமுறையும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் முன்னேற்றம் ஏதும் இல்லை.
பின்னணி என்ன?
- சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து மூன்று மாதங்களாகப் பதிவு எண், சான்றிதழுக்காகக் காத்திருக்கும் பின்னணியில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவது கவனிக்கத்தக்கது. உண்மையில் இது புதிய அனுபவம்தான். இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் 1926இன்படி, ஒரு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டால், அதற்கு வேண்டிய ஆவணங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்து, 45 நாள்களில் பதிவு எண்ணையும் சான்றிதழையும் பதிவுசெய்யத் தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர் பிரதிநிதி 7 பேரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- சில நேரம் தாமதமானாலும் நிச்சயம் கிடைத்துவிடும். ஆனால், ‘சாம்சங்’ என்கிற பெயர் தொழிற்சங்கத்துடன் இருக்கக் கூடாது என நிர்வாகம் ஆட்சேபித்தது. இது சரியல்ல எனச் சொல்ல வேண்டிய தொழிலாளர் துறைப் பதிவாளர் மற்றும் இணை ஆணையர் (சமரசம் 2), சாம்சங் என்கிற பெயர் இருப்பதைத் தவிர்த்து, வேறு பெயர் வைக்க முடியுமா எனத் தொழிற்சங்கத்திடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
- இதில் வேடிக்கை என்னவென்றால், ‘தி நேஷனல் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் யூனியன்’ என்பது கொரியாவில் உள்ள சாம்சங் தொழிற்சங்கத்தின் பெயர். கொரியாவைப் போல் தமிழ்நாட்டில் சம்பளம் இல்லை, வீடு வசதி இல்லை, வேலைநேரம் இல்லை. இந்தப் பின்னணியில் கொரியத் தொழிலாளர் சங்கத்தில் நிறுவனத்தின் பெயரை அனுமதிக்கும் நிர்வாகம், இந்தியாவில் மறுப்பது முரணான செயல். தமிழ்நாடு அரசு சரியாகத் தலையீடு செய்யவில்லை என முன்வைக்கப்படும் விமர்சனத்தில் உள்ள நியாயத்தை உணர வேண்டும்.
- தொழிற்சங்கம் அமைப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்ட முறையான ஏற்பாடுகள் நடைபெற்று, சங்கம் அமைக்கப்பட்ட செய்தி மட்டும் நிர்வாகத்துக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அன்று முதல் நிறுவனம் உள்ளேயே ஒரு கமிட்டி அமைத்திருப்பதாகவும், அதை ஏற்க வேண்டும் என்றும் தொழிலாளர்களிடம் நிர்வாகம் கட்டாயம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து தொழிலாளர்களில் சிலரைப் பழிவாங்கும் வகையில், தனிமைப்படுத்தி, நிறுவனத்துக்குள் அமரவைப்பதும் நடந்துள்ளது.
- தொடர்ந்து நிர்வாகத்தில் உள்ள சிலர், தொழிலாளர்களிடம் தனிப்பட்ட மிரட்டலும் விடுத்துள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில், தொழிற்சங்கத் தலைவர் இ.முத்துக்குமாரிடம் முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்துதான், தவிர்க்க முடியாமல் வேலை நிறுத்தம் என்கிற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வரலாற்றைச் சற்றே நினைவுகூர்வது நல்லது.
தமிழகம் முன்னோடி:
- 1918 ஏப்ரல் 27, இந்தியாவிலேயே பதிவு செய்யப்பட்ட முதல் தொழிற்சங்கமாக ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ இருந்தது. ‘பெருந்தமிழர்’ வ.உ.சி. தலைமையில் நடைபெற்ற தூத்துக்குடி கோரல் பஞ்சாலை மட்டுமல்ல, சென்னை பி அண்டு சி மில் தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேர் கலந்துகொண்ட வேலைநிறுத்தம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாக மாறுமோ என்கிற அச்சம் நிறைந்த நேரத்தில், தலைமை வகித்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகினர்.
- பி.பி.வாடியா தலைவராகவும், ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுச் செயல்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்தது. அதன் பின்னரே இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் 1926 உருவாக்கப்பட்டது. ஏராளமான போராட்டங்களும், விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்தபோதிலும்கூட, வரலாற்றுச் செய்திகள் நமக்குச் சுயமரியாதையை, நம் நாட்டின் மீதான பற்றை மேம்படுத்துகின்றன. அடுத்தடுத்த தலைமுறையினரின் உரிமைகளை ஓரளவு மேம்படுத்துவதாகவும் உள்ளன.
தொழிற்சங்கம் முதலீட்டுக்கு எதிரியல்ல:
- தமிழ்நாட்டில் 1960 காலக்கட்டத்தில், 2008, 2010 காலத்தில் சில அடக்குமுறைகளும், தேவையற்ற சர்ச்சைகளும் உருவாகின. அதைத் தொடர்ந்து மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இயற்றுவது குறித்து கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அது சாத்தியப்படவில்லை.
- தற்போது மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொழில் உறவு சட்டத் தொகுப்பு 2020, தொழிலாளர்களுக்குப் பாதகமான பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், தொழிற்சங்க அங்கீகாரத்தை வலியுறுத்துகிறது. இதற்கான விதிகள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டு அதிகாரிகள், தொழிற்சங்கப் பதிவைத் திட்டமிட்டுத் தாமதம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை.
- கொரிய சொல்லகராதியில் ‘சாம்சங்’ என்றால் மூன்று நட்சத்திரங்கள் எனப் பொருள். இந்நிறுவனம் 14 நாடுகளில் 32 ஆலைகளைக் கொண்டுள்ளது. அனைத்திலும் சட்ட நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளது. 16 வயதுக்குக் கீழான வயதுடையவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்நிறுவனம் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில், மிகைப்பணி உள்ளிட்டவற்றுக்கு நியாயமான பணப்பலன்கள் இல்லாதது, நியாயமற்ற நிர்வாக நடவடிக்கைகள் போன்றவை தொழிற்சங்கம் அமைக்கப்பட்டதற்குக் கூடுதல் காரணங்கள். இதில் அரசு முதலீடுகளையும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் சமமாகக் கருத வேண்டும். முதலீட்டுக்காக உரிமைகளை விட்டுக்கொடுப்பது சரியாக இருக்காது. ஒட்டுமொத்த மனிதகுலமும் சில தசாப்தங்கள் கடந்து பார்க்கையில், ஒட்டுமொத்தமாக முன்னேறியதாக இருக்க வேண்டும். அதையே தொழிற்சங்கங்களும், அதன் கீழ் போராடும் தொழிலாளர்களும் வலியுறுத்துகிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 10 – 2024)