- வேலை தொடர்பான விபத்துகளாலும் நோய்களாலும் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கமும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் மிகுந்த பொருத்தப்பாடு உடையவை. தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியமான பணிச்சூழல் ஆகிய இரு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில், 63%க்கும் அதிகமான இறப்புகள் ஆசிய-பசிபிக் பகுதி நாடுகளில்தான் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், வாரத்துக்கு 55 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக வேலை நேரம் நடைமுறையில் இருப்பதுதான் இந்த இறப்புகளுக்கு முக்கியமான காரணம் என அந்த அறிக்கை சொல்கிறது. 2016இல், சுமார் 7.45 லட்சம் பேர் பணியிடத்தில் இறந்துள்ளனர். பணியிடத்திலுள்ள நுண்துகள்கள், வாயு, புகை பாதிப்பால் 4.5 லட்சம் இறப்புகளும் தொழிலிடக் காயங்களால் 3.63 லட்சம் இறப்புகளும் ஏற்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. உலகளவில் அதிகத் தொழிலாளர் இறப்பு நிகழும் நாடுகளில், சீனா முதலிடம் வகிக்கிறது. ஆனால், அங்கு 2000இல் 4,79,454ஆக இருந்த தொழிலாளர் இறப்புகள், 2016இல் 4,60,257ஆகக் குறைந்துள்ளன.
- மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில், 2000இல் 3,45,418ஆக இருந்த தொழிலாளர் இறப்புகள், 2010இல் 3,70,599ஆகவும் 2016இல் 4,16,910ஆகவும் கூடியிருப்பது கவலைக்குரியது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தொழில்சார் பாதுகாப்பு-சுகாதாரம் என்னும் தலைப்பில், 1981 மற்றும் 2006 ஆண்டுகளில் நடந்த இரண்டு மாநாடுகளின் தீர்மானங்களையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 187 உறுப்பு நாடுகளில், இதுவரை 79 நாடுகள் மட்டுமே 1981 தீர்மானத்தையும் 62 நாடுகள் மட்டுமே 2006 தீர்மானத்தையும் அங்கீகரித்துள்ளன.
- நவம்பர் மாதம் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தை அடுத்து, தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் பல, சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் தீர்மானங்களை அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியதும் இங்கே நினைவுகூரத்தக்கது. 2000-2016 காலகட்டத்தில், குரோமியம் வெளியேற்றம் அதிகமானதால் ஏற்படும் மூச்சுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்களின் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்று இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. கல்நார் கனிம (asbestos) வெளியேற்றத்தால் இடைத்தோலியப்புற்று 40% அதிகரித்துள்ளது. தோல் புற்றுநோயின் விகிதம் 2000க்கும் 2020க்கும் இடையில், 37% அதிகரித்துள்ளது. இந்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான பாதுகாப்பு, தொழிலாளர்களுக்குச் செய்துதரப்படாததால் பல நோய்களுக்கு ஆளாகியும் தொழிலாளர்கள் இறக்க நேரிடுகிறது.
- சங்கம் அமைத்துக்கொள்வது, உரிமைகளுக்கான ஒன்றுபடுதல் போன்ற உரிமைகளை அங்கீகரிப்பது, அனைத்து வகையான கட்டாய உழைப்பை நீக்குதல், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல், வேலை தொடர்பான பாகுபாட்டை நீக்குதல், பாதுகாப்பான, ஆரோக்கியமான பணிச்சூழல் ஆகிய தீர்மானங்களை இந்த அறிக்கைஇப்போது வலியுறுத்துகிறது. இவற்றை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு வேலையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்ய வேண்டும். சென்னை வேளச்சேரியில் கட்டுமானத்துக்காக வெட்டப்பட்டிருந்த 50 அடி பள்ளத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பினால் அடித்துச் செல்லப்பட்டு விழுந்த தொழிலாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். இது போன்ற அசம்பாவிதங்கள், பணியிடப் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 12 – 2023)