TNPSC Thervupettagam

தொழிலாளர் உரிமைகள்: தொடங்கிய இடத்துக்கே மீண்டும் திரும்புகிறோமா?

May 29 , 2020 1693 days 754 0
  • சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னால், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் பயனாக இந்தியாவிலேயே தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்றுவதற்கான வாய்ப்பு பிறந்தது.
  • அதன்படி, தொழிலாளர்கள் குறித்துச் சட்டம் இயற்றுவதற்கு மத்திய சட்டமன்றத்திடம் அளிக்கப்பட்ட அதிகாரம், 1935-க்குப் பிறகு மாநிலங்களுக்கும் பகிரப்பட்டது.
  • தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்துமே கடந்த நூறு ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டவைதான்.
  • அதற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டங்கள் யாவும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கே சாதகமாக இருந்தன. அப்போதைய காலகட்டத்தில் தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது என்று தெரிந்துகொண்டால்தான், இந்தச் சட்டங்களால் என்னென்ன பாதுகாப்பை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

துன்பக் கேணிகள்

  • தொழிற்புரட்சிக்குப் பிந்தைய தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட உற்பத்தி முறையில், இயந்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • இயந்திரங்கள் பழுதாக நேரும்போது, அவற்றை இயக்கிய தொழிலாளர்களின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்துகள் விளைந்தன.
  • விபத்துக்குள்ளான தொழிலாளர்கள் வேலைசெய்யும் வாய்ப்பை இழந்தார்களே தவிர, அவர்களுக்கு இழப்பீட்டைக் கேட்டுப் பெறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923-ல் நிறைவேற்றப்படும் வரை இதுதான் நிலை.
  • இது தவிர, செய்யும் வேலையாலேயே சில நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. தொழிற்சாலைகளில் நிலவும் அதிகமான வெப்பம் அல்லது ஈரப்பதம், தூசு, நச்சு, குறைவான வெளிச்சம், இரைச்சல், சுகாதாரமின்மை ஆகியவை தொழிலாளர்களின் உடல்நலத்தை அரித்துத் தின்றன.
  • நியாயம் கேட்டுப் போராட ஒன்றுகூடினாலோ அல்லது அதைக் குறித்து விவாதித்தாலோ வழக்குகள் தொடரவும் வாய்ப்பிருந்தது.
  • வேலைக்கான ஒப்பந்தங்கள் யாவும் முதலாளிகளுக்கே சாதகமாக இருந்தன. தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி அரசாங்கங்களும் கண்டுகொள்ளவில்லை.
  • இத்தகையதொரு சூழலில்தான் தொழிலாளர் சங்கங்கள் உருவெடுத்தன, உரிமைகளுக்காகப் போராடின, ஒவ்வொரு உரிமையாகப் பெற்றெடுத்தன.

குழந்தைகள், பெண்கள்

  • தொழிற்சாலை வேலைவாய்ப்புகளுக்காக நகரங்களுக்குக் குடியேறிய ஆண் தொழிலாளர்களுக்கு, குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான கூலி கிடைக்கவில்லை.
  • பெண்களும் குழந்தைகளும் தொழிலாளர்களாக மாறினார்கள். இந்தியாவில் 1881-ல் இயற்றப்பட்ட முதல் தொழிற்சாலைச் சட்டம், 7 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதைத் தடைசெய்தது என்பதே அன்றைய தொழிற்சாலைகள் எப்படி இருந்தன என்பதற்கான உதாரணம்.
  • 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஒன்பது மணி நேர வேலை, வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வு என்பது அச்சட்டத்தின் சாதனையாகச் சொல்லப்பட்டது.
  • தொழிற்சாலைச் சட்டத் திருத்தம் 1891, பெண்களின் வேலை நேரத்தை 11 மணி நேரமாகக் குறைத்தது. ஆண்களுக்கான வேலை நேரம் 12 மணி நேரம் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அது எங்குமே பின்பற்றப்படவில்லை.
  • தொழிலாளர் சட்டங்களில் அவ்வப்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டுவந்தபோதும், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகே அதிகபட்ச வேலை நேரத்துக்கான கட்டுப்பாடு முழுமையாகச் சாத்தியமானது.
  • தொழிற்சாலைகள் வேலை நடைமுறைகளுக்கான நிலையாணைகளைக் கடைப்பிடிக்கவும், அதைக் குறித்த விவாதத்தில் தொழிலாளர்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு உருவானது.
  • 1919-ல் உருவான சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் அறிவுறுத்தல்களை இயன்றவரை நடைமுறைப்படுத்தும் வகையில், 1948-ல் தொழிற்சாலைச் சட்டம் இயற்றப்பட்டது.
  • தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிற்சாலைச் சட்டம் 1948, சிறுவர்களை 14 வயது வரையில் வேலைகளில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்கிறது.
  • 15 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு நான்கரை மணி நேர வேலை மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இரவு நேரத்தில் சிறுவர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது என்கிறது.

சுதந்திரத்தின் ஒரு பகுதி

  • இந்தியாவின் சுதந்திரத்துக்கும் அதற்கு முன்னும் பின்னுமாகத் தொழில் தகராறுகள் சட்டம் 1947, தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகியவை இயற்றப்பட்டதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
  • சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் இருந்த தொழிற்சாலைகளில் பெரும் பகுதி ஆங்கிலேயரிடமே இருந்தன. எனவே, தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களும் இந்திய அரசியல் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தன. தொழிலாளர்களுக்கான உரிமைகள் என்பவை அரசியல் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டன.
  • ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட முதல் தொழிற்சாலைச் சட்டம் 1881, ஆண்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைத்தது. ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வேலை நேரத்தை நோக்கி இன்று சில மாநில அரசுகள் தொழிலாளர்களைத் தள்ள முயல்கின்றன.
  • மாநிலங்களுக்கிடையே தொழிலாளர் சட்டங்களில் வேறுபாடுகள் நிலவுகின்றன.
  • அதிக எண்ணிக்கையிலான சட்டங்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி, பன்னாட்டு முதலீட்டாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதில் மத்திய அரசு தீவிரம்காட்டுகிறது.
  • வெளிநாட்டு முதலாளிகளுக்குச் சலுகைகள் காட்டுவதற்காகத் தொழிலாளர் உரிமைகளை விட்டுக்கொடுக்க முன்வந்த அரசு, முதலீடுகள் வராத நிலையில், இப்போது சுயசார்பைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறது.
  • வெளிநாட்டு முதலாளிகளைக் காட்டிலும் உள்நாட்டு முதலாளிகள் முக்கியமல்லவா? அவர்களுக்காகத் தொழிலாளர் உரிமைகளை முற்றிலுமாக விட்டுக்கொடுக்கவும் தயாராகிவிட்டது.
  • தற்போதைய தொழிலாளர் நலச் சட்டங்களில் முதன்மைச் சட்டங்களாகத் தொழில் தகராறுகள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்சங்கங்கள் சட்டம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
  • இவை வேலை நேரத்தையும் கூலியையும் மட்டும் பேசவில்லை. வேலைசெய்யும் சூழல்கள் தொழிலாளர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் கேடு விளைவித்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றன.
  • ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டங்களை நிறுத்திவைப்பது, இந்தியா வென்றெடுத்த அரசியல் சுதந்திரத்துக்கு ஓர் வரலாற்று இழுக்கு.
  • பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காகத் தொழிலாளர்களிடமிருந்து கூடுதல் உழைப்பைக் கோரலாம், அதற்காக அவர்களது உயிர்களையும் உரிமைகளையும் பலிகொடுக்க வேண்டுமா என்ன?

நன்றி: தி இந்து (29-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்