காருண்யம் உருவாகவில்லை
- ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் தொழில் துறையை ஊக்கப்படுத்துவது என்ற பெயரில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் இறங்கியிருப்பது மிக மோசமான நடவடிக்கை.
- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்துள்ளன.
- தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரம் வரையில் நீட்டிப்பதற்கு வாய்ப்பாக உத்தர பிரதேச அரசு, சட்டத் திருத்தங்களைச் செய்தது. ஊதியம் வழங்கல், பணியாளர் இழப்பீடு, கொத்தடிமை ஒழிப்பு, கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த நான்கு சட்டங்களைத் தவிர, அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கும் வகையிலான உத்தரவை அது பிறப்பித்தது.
- உத்தர பிரதேசத்தை அடுத்து மத்திய பிரதேசமும் ஏனைய மாநில அரசுகளும் இறங்கின. பணிநேர நீட்டிப்பு தொடர்பிலான அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, தற்போது 12 மணி நேர வேலைநேரத்தை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை அது திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது என்றாலும், இன்றைய ஆட்சியாளர்களின் மனோபாவம் ஒரு கொள்ளைநோய் காலகட்டத்தில்கூட அவர்களிடம் காருண்யம் கொஞ்சமும் உருவாகவில்லை என்பதையே காட்டுகிறது.
அனுமதிக்க முடியாது
- தொழிலாளர் நலச் சட்டங்களைச் செயலிழக்கச்செய்தல் என்பது சுத்தமான பணியிடம், கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல், காற்றோட்ட வசதி, கழிப்பறை வசதிகள் என்று மிக அடிப்படையான தொழிலாளர் உரிமைகளுக்கும்கூட முடிவுகட்ட முனைவதுதான்.
- தற்போதைய மோசமான பொருளாதார நிலையால், ஏற்கெனவே தொழிலாளர்கள் பாதுகாப்பின்மையை உணரும் நேரத்தில், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவது அவர்களுக்குக் கிடைத்துவரும் குறைந்தபட்சப் பாதுகாப்புகளையும் இல்லாமலாக்கிவிடும்.
- இந்தியாவில் ஏற்கெனவே தொழிலாளர் நலச் சட்டங்கள் மிகவும் பலவீனமானவை. இப்போது ஆட்சியாளர்களிடம் ஊடுருவியுள்ள சிந்தனை, வருங்காலத்தில் உழைப்புச் சந்தையின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடக்கூடும்.
- தொழில் துறையை அதன் பழைய செல்வாக்குக்கு மீட்டெடுப்பதும், தொழிலாளர்கள் நல்ல பணிச் சூழலில் பணியாற்றுவதும் இருவேறு போக்குகள் அல்ல.
- பொருளாதாரச் சூழல் மோசமாகியிருக்கும் நிலையில், தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வதே நாட்டின் முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
- அதுவே, பொருளாதாரச் சூழலை மீட்டெடுப்பதற்கான சரியான வழிமுறையும்கூட. அதற்கு எதிரான எந்தச் செயல்பாடும் ஜனநாயக விரோதச் செயல்பாடே ஆகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோகும் சூழல் அனுமதிக்கவே முடியாதது!
நன்றி: தி இந்து (19-05-2020)