தொழிலாளர் பட்ஜெட்: தமிழ்நாடு அரசின் கடமை என்ன?
- சாமானிய மக்களை வலுப்படுத்தும் சட்டங்கள் மகத்தானவை... அரிதானவையும்கூட. அப்படியான ஒரு முக்கியமான சட்டம்தான் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம்’. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இச்சட்டம், ‘100 நாள் வேலைத் திட்ட’மாக இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
- விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பை உருவாக்குவதிலும் இச்சட்டம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. கிராமப் பொதுச் சொத்துகள் உயிர்ப்புடன் இருக்கவும் வழிவகை செய்கிறது.
- இது வெறும் திட்டமாக இல்லாமல், இந்திய மக்களுக்கான ஒரு சட்டமாக இருப்பதால்தான் எத்தனை அரசுகள் மாறி மாறி வந்தாலும், இந்தத் திட்டம் எவ்வளவுதான் திசைமாறிப் போனாலும், பல்வேறு சமூக அமைப்புகள் அதை நேர்ப்படுத்திச் சட்டம் மூலம் மக்கள் பெறும் அதிகாரங்களை, வாழ்வாதாரப் பணிகளை மக்களிடமே கொண்டுசேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. எல்லாவற்றையும் தாண்டி, இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட என்ன தேவை?
பலனளிக்கும் திட்டம்:
- பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை ஆகியவை சட்டத்தினால் வழங்கப்பட்டிருப்பதுபோல, கிராமப்புறங்களில் வசிக்கும், 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் வேலை பெறுவதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது இந்தச் சட்டம். கெஞ்சிக் கேட்டு அல்ல, உரிமையோடு நம் மக்கள் வேலை பெற வழிவகுக்கும் மகத்தான சட்டம் இது.
- ஆனால், வன உரிமைச் சட்டம், கிராமசபை அதிகாரங்கள் போன்று மக்களுக்கான அதிகாரங்களை வழங்கும் சட்டங்களைப் பலவீனப்படுத்தும் நம் பொது நிர்வாக நடைமுறையில் இருந்து இச்சட்டமும் தப்பவில்லை.
- கிராமப்புறங்களில் பல ஆதாரங்களை உருவாக்குவதற்கு (Asset Creation) வழிவகுத்த இந்தத் திட்டம், ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. காலப்போக்கில் அதன் போக்கு மாற்றங்களுக்கு உள்ளானது.
- இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முறையான பயிற்சியும், வழிகாட்டுதலையும் வழங்க அரசு தவறிவிட்டதே முக்கியக் காரணம். 2023ஆம் ஆண்டு தன்னாட்சி, அடிப்படை நிர்வாக நிறுவனம் (Institute of Grassroots Governance) ஆகிய சமூக அமைப்புகள் இணைந்து மாவட்டம் தோறும் ஊராட்சிக்குச் சென்று நடத்திய ஆய்வில் இது தெள்ளத் தெளிவாகத் தெரியவந்தது.
- சிலர் விமர்சிப்பதுபோல, இந்த வேலை வெட்டி வேலை அல்ல; வெற்றிகரமான வேலை. இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் ஒன்றியத்தில் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் புதிய வாய்க்கால்களை அமைத்ததோடு கட்டுமானப் பணிகளிலும் மக்கள் ஈடுபட்டுப் பாலங்களைக் கட்டியிருக்கிறார்கள்.
- நேரடியாகச் சென்று பார்த்தபோது அந்தச் செயல்பாட்டைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் ஊராட்சியில் புதிதாகப் பல குளங்களை இத்திட்டம் மூலமாகவே மக்கள் வெட்டினார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சியில் மற்ற பல திட்டங்களின் நிதிகளை இந்தத் திட்டத்தோடு இணைத்து (Convergence) தடுப்பணைகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், தோப்பு உருவாக்குதல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து முடித்திருக்கிறார்கள்.
- இவை மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் அல்ல. நேரடி உதாரணங்கள். ஆனால், இப்படிச் சில ஊராட்சிகளில் திட்டம் சரியாகச் செயல்படுவதுபோல, தமிழ்நாட்டில் ஏன் பரவலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்கிற கேள்வி பலரிடம் இருக்கிறது.
தொழிலாளர் பட்ஜெட் என்றால் என்ன?
- ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். 100 நாள் வேலையை வழங்குவது மாவட்ட ஆட்சியர் என்றோ வட்டார வளர்ச்சி அலுவலர் என்றோ பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், பணித்தளப் பொறுப்பாளர்தான் முடிவு செய்கிறார் என்றுகூட நினைப்பது உண்டு.
- ஆனால் உண்மையில், மக்களாகிய நாம்தான் நமக்கான பணிகளை முடிவு செய்துகொள்கிறோம். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்... பல வேளைகளில் சட்டம் சொல்வது ஒன்றாகவும், அலுவலர்களின் வாய்மொழி உத்தரவுகளும், வாட்ஸ்அப் செய்திகளும், நடைமுறை அணுகுமுறைகளும் வேறாகவும் இருப்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. இத்திட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.
- ஒவ்வொரு ஊராட்சியும் அடுத்து வரும் நிதியாண்டில் தங்கள் ஊராட்சியில் எந்த இடத்தில் வேலைசெய்யப் போகிறது, என்ன வேலை, எத்தனை பேர் வேலை செய்யப் போகிறார்கள், அதற்கான நிதி என்ன என்பதை எல்லாம் திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டும். ‘லேபர் பட்ஜெட்’ அல்லது தொழிலாளர் வரவு - செலவு என்று குறிப்பிடப்படும் இந்த முறை மூலமாகத்தான் ஒவ்வொரு ஊராட்சிக்கான வேலை பெறும் உரிமையை உறுதிசெய்கிறது சட்டம்.
- வரும் அக்டோபர் 2 அன்று இதற்கான பணிகள் தொடங்கவிருக்கின்றன. அன்று நடக்கும் கிராமசபையில் திட்டம் தயாரிக்கும் பணிகள் முறையாகத் தொடங்கும். அன்று முதல் வரும் நவம்பர் 30க்குள் இந்த வரவு - செலவுத் திட்டத்தைத் தயார்செய்து கிராமசபை ஒப்புதலைப் பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்டிருக்கும் திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று.
- அடுத்த நிதியாண்டில் நமது ஊரில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்படப்போகிறது, எத்தனை நாளுக்கு வேலை கொடுக்கப்படப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்தத் திட்டமிடுதல் மூலமாகத்தான் மக்கள் பெறுகிறார்கள். வாய்ப்புள்ள ஊராட்சிகளில் ஊராட்சி நிர்வாகத்தோடு இணைந்து சமூக அமைப்புகள் தொழிலாளர் பட்ஜெட் தயாரிக்கின்றன. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நிர்வாகக் கட்டமைப்பு தயாராக இல்லை.
- ஒருவேளை கிராமப்புறங்களில் கூடுதலாக வேலை தேவைப்பட்டால், திருத்தப்பட்ட தொழிலாளர் பட்ஜெட்டைப் போடலாம். சென்ற நிதியாண்டில்கூட மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி (2023-2024) ரூ.60,000 கோடி. பிறகு, திருத்தப்பட்ட தொழிலாளர் பட்ஜெட் முலம் ரூ.86,000 கோடி கொடுக்கப்பட்டது.
தொழிலாளர் பட்ஜெட்டின் முக்கியத்துவம்:
- மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் ரூ.86,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 14.23 கோடி மக்கள் வேலையை எதிர்பார்த்திருக்கும் நிலையில், இத்திட்டத்துக்கு ரூ.3,44,000 கோடி தேவைப்படும். மிகவும் பற்றாக்குறையான இந்த ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற வேண்டாமா? தற்போது பல இடங்களில் வேலைகள் வழங்கப்படாமல் இருக்கும் சூழலில், தொழிலாளர் பட்ஜெட்டை இயக்கமாக்குவது கட்டாயமாகிறது. அப்போதுதான் வேலை கேட்கும் மக்கள் அனைவருக்கும் 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க முடியும்.
- இந்த ஆண்டாவது தமிழ்நாடு அரசு தொழிலாளர் பட்ஜெட்டை முறையாக ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் ஆலோசனையோடும் கிராமசபை ஒப்புதலோடும் தயாரிக்க வழிவகை செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் தொகுக்கப்பட்ட தொழிலாளர் பட்ஜெட்டை வட்டார, மாவட்ட அளவில் முறையாகத் தொகுத்து மத்திய அரசுக்கு அனுப்புவது மிக முக்கியம்.
- மக்களின் உரிமையைப் பாதுகாக்க... முறையான பயிற்சி - திட்டமிடுதலின் மூலம் வேலூர் மாவட்டத்தில் ஆற்றுப் புனரமைப்புப் பணிகளில் 100 நாள்களுக்கு மக்கள் பங்கெடுத்து தூர்ந்துபோன நாகநதி என்கிற அப்பகுதியின் ஆற்றை மீட்டெடுத்திருக்கிறார்கள். நம் மக்கள், பணி செய்யக்கூடியவர்கள்தான். முறையான பயிற்சியும், திட்டமிடுதலும், வழிகாட்டுதலும் இருந்தால், தொழிலாளர் பட்ஜெட்டை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசுக்குக் கடப்பாடு இருந்தால் 100 நாள் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.
- 100 நாள் வேலை என்பது நகைப்புக்குரியது அல்ல, நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய மக்கள் திட்டம். அது வேளாண்மைக்கு எதிரானது அல்ல, வேளாண்மைக்கு உறுதுணையாக விளங்கும் திட்டம். இந்தப் புரிதல் அனைவருக்கும் வர வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 08 – 2024)