தொழிலாளர் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும்
- காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகள் வாகனம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவெடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடரும் சாம்சங் நிறுவன தொழிலாளர் போராட்டம், இந்தப் பகுதியில் அமைந்துள்ள நிறுவனங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாஷிங்மெஷின், ஏர்கண்டிஷனர் போன்ற நுகர்வோர் பொருட்களையும் சாம்சங் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலைக்கு தேவையான சில உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
- இந்நிலையில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் CITU தொழிற்சங்க ஆதரவுடன், 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வேலைநிறுத்தத்தை தொடங்கினர். 37 நாட்கள் நீடித்த வேலைநிறுத்தம், தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.
- தீ அடங்கினாலும் புகை அடங்கவில்லை என்பது போல பிரச்சினை தொழிற்சாலைக்குள் புகைந்து கொண்டேதான் இருந்தது. 2025 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், நிறுவனம் மூன்று தொழிற்சங்க உறுப்பினர்களை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து, தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- 1800 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் இந்த தொழிற்சாலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உயர் அதிகாரிகளின் அலுவலக அறைக்குள் முறையான அனுமதியின்றி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 3 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதே பிரச்சினையை மையமாக வைத்து மேலும் 14 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- நிர்வாகம் தார்மீக வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றும், விளக்கம் கேட்காமல், விசாரணை நடத்தாமல் இடைநீக்க உத்தரவுகளை வழங்கியதாகவும் CITU சங்கம் தெரிவித்திருக்கிறது. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை உடைப்பதற்கான முயற்சியிலும் நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வேலை நிறுத்தத்தின்போது தொழிற்சாலையை இயக்குவதற்காக சட்டவிரோதமாக ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்துவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு உற்பத்தி பிரிவில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம், சாம்சங் நிர்வாகம் இடையே பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது, பணியிடைநீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கையைஅதிகாரிகள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
- தொழிலாளர் நலத் துறையின் கூடுதல் ஆணையர் தலையிட்டும் கூட, நிறுவனம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், "சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான, நிலையான பணியிடத்தை பராமரிக்க முன்னுரிமை வழங்குகிறோம்.
- பணியிடத்தில் தொழில் துறை நிலைத்தன்மை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர்களின் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும், தவறுகளுக்கும் இடமில்லை. நிறுவனத்தின் விதிமுறைகளை அனைத்து பணியாளர்களும் பின்பற்றுவது அவசியம். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது முறையான விசாரணைக்குப் பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொழிற்சாலையில் உற்பத்தி தொடர்ந்து சீராக நடைபெறும். அதேநேரம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஒழுங்கு நெறிமுறைகளை நிலைநாட்டவும், வணிக நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறவும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பை கோருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குழுவில் இணைய வேண்டும் என்றும் அல்லது தொழிற்சங்கத்திலிருந்து விலகவேண்டும் என்றும் தொழிலாளர்களை சாம்சங்நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
- ஆனால் இந்த குற்றச் சாட்டுகளை நிர்வாகம் முற்றிலும் நிராகரித்துள்ளது. 1980-களில் சென்னை, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் செயல்பட்டு வந்த பல்வேறு தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் தரப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
- இதன் காரணமாக, நாடடில் உள்ள பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு ஏற்றமாநிலம் என்ற நம்பிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கின. இதனால் வேலை வாய்ப்புபெருகியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத் தியிலும் தமிழ்நாடு முக்கிய பங்காற்றிவருகிறது.
சமரசம் அவசியம்:
- இந்த சூழ்நிலையில், கடந்த ஆறு மாத காலகட்டத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்த 2 வேலை நிறுத்தப் போராட்டங்கள் மாநிலத்தின் தொழில் அமைதி என்ற பெருமிதமான நிலையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சாம்சங் தொழிலாளர் போராட்டம், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான உறவின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாடு தொழில் புரட்சியில் முன்னணியில் இருக்கும் இந்த தருணத்தில், நிறுவனங்களும் தொழிலாளர்களும் சமரசம் செய்துகொள்வது அவசியம்.
- நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மதித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண்பதன் மூலம் பணிச்சூழலை மேம்படுத்தலாம். அதேநேரம், தொழிலாளர்களும் தங்களின் எதிர்காலம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முறையான வழிகளில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம், தமிழ்நாடு தொடர்ந்து சிறந்த முதலீட்டு தளமாகவும், தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் திகழமுடியும். இந்த சமநிலையே உற்பத்தித் துறையின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2025)