- ஃபோர்டு இந்தியா நிறுவனம், உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு செய்திருப்பது அதன் பல்லாயிரம் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- இந்தியாவிலிருந்து கடந்த ஏப்ரல் 2021 முதல் ஜூன் 2021 காலத்தில், 14,19,430 கார்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
- ஃபோர்டு நிறுவனமும் இதில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. 2020-ல் 2.39% அளவில், இந்தியச் சந்தையில் கார்களை விற்பனை செய்துள்ளது. கார் இன்ஜின் 40% அளவிலும், 25% கார்களையும் 35 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதிசெய்துவருகிறது.
- ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்வது எனத் திட்டமிட்டாலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் அளவில் ஃபோர்டின் கார்கள் சந்தையில் விற்பனை ஆகியுள்ளன.
- அப்படியென்றால், ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக ஏன் அறிவிக்கிறது? சந்தை சொல்லும் விவரங்களும் நாம் உற்பத்திசெய்யும் பொருட்களின் சந்தைப் படுத்தலும் முரண்படுவது ஏன்? சந்தையில் போட்டியிட முடியாத அளவுக்குச் சிறிய நிறுவனம் அல்ல ஃபோர்டு.
ஃபோர்டு இந்தியா வரலாறு
- ஃபோர்டு இந்தியா என அழைக்கப்பட்டாலும், சென்னைதான் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 1995-ல் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மறைமலை நகரில் 350 ஏக்கர் நிலப்பரப்பில், பிரம்மாண்டமான கார் உற்பத்தி நிறுவனமாக அது உருவானது. 1998-ல் உற்பத்தியைத் தொடங்கியது.
- ஜிஎஸ்டி சாலையில் இருந்த ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், ஃபோர்டின் வருகை நிகழ்ந்தது. வேலைவாய்ப்பு படிப்படியாக உயர்ந்து, தற்போது 4,000 நிரந்தரப் பணியாளர்கள் உள்ளனர்.
- ஒப்பந்தப் பணியாளர்கள், கேன்டீன், போக்குவரத்து, உதிரிபாக நிறுவனங்கள் எனக் கணக்கிட்டால், சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஃபோர்டு சென்னை நிறுவனத்தை மையப்படுத்திப் பணியாற்றிவருகின்றனர்.
- ஒரு குடையின் கீழ் இருந்த உற்பத்தியை, அயல்பணி ஒப்படைப்பு (outsourcing) மூலம் பிரித்து, தனித்தனியாக உதிரிபாக உற்பத்திகளை இணைக்கும் வேலையைப் பிரதான, பிராண்ட் பெயரைத் தாங்கும் நிறுவனம் செய்துகொள்ளும் வழக்கத்தை, அமெரிக்காவில் ஹென்றி ஃபோர்டுதான் உருவாக்கினார்.
- அதனால்தான் ‘ஃபோர்டிஸம்’ என அழைக்கப்பட்டது. இதை உலகின் பிற நாடுகளிலும் பின்பற்றத் தொடங்கினார்கள்.
- சென்னையில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கிய பின்னர், மறைமலை நகர் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான சிறு, குறு ஆலைகள், இந்திய மற்றும் பல்வேறு நாட்டு நிறுவனங்களால் தொடங்கப்பட்டன. சென்னையின் புறநகர் வளர்ச்சி, இது போன்ற நிறுவனங்களாலும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களாலும் உருவானது என்பதை மறுக்க முடியாது.
- இதைத் தொடர்ந்து, சனந்த் (குஜராத்) நிறுவனத்தையும் ஃபோர்டு இந்தியா 2014-ல் உருவாக்கியது. மொத்தமாக, இன்றைய மதிப்பில் சுமார் ரூ. 14,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் மேற்படி ரூ.14,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, 2022 ஏப்ரல் முதல் உற்பத்தியை நிறுத்துவதாக ஃபோர்டு அறிவிப்பு செய்துள்ளது.
உற்பத்தியும் வேலைவாய்ப்பும்
- ஆலைகளின் வளர்ச்சி என்பது, கடந்த கால விவசாய உற்பத்தியின் மீது நடைபெறுகிறது. இன்றைய மறைமலை நகர் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சிப் பகுதிகளாக அறியப்படுகின்றன என்றால், அங்கிருந்த, நிலம், நீர்நிலைகள், நிலம் சார்ந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றை இழந்ததிலிருந்து உருவானது இந்த வளர்ச்சி.
- ஒன்றை இழந்து, புதிய ஒன்றைப் பெற்ற தொழிலாளர்கள் தற்போது நிரந்தரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்பு விருந்தைப் போன்றதல்ல, முடிந்தது, எழுந்து செல் என்பதற்கு. வேலைவாய்ப்பு என்பது வாழ்வாதாரத்துடன் இணைந்தது.
- சமூகத்தின் இதர உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான பொருளாதாரச் சங்கிலி. அதை ஒரு நிறுவனம் லாப நஷ்டக் கணக்கு மூலம் மூடுவது என்பது, சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவாது.
- ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராயும் நிலையில், அதிர்ச்சி அதிகரிக்கும்.
- சுமார் 4,000 நிரந்தரத் தொழிலாளர்கள், உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரம் எனக் கொண்டால், மொத்தத்தில் சுமார் ரூ.550 கோடி அளவில் மாதாமாதம் சந்தைப் புழக்கத்திலிருந்து விடுபடும் அபாயம் உள்ளது.
- இத்துடன் முடிவதில்லை, மறைமுக வேலைவாய்ப்புகளாக உள்ள தேநீர்க் கடை, ஆட்டோ, மளிகைக் கடைகள், ரியல் எஸ்டேட், இதர சேவை நிறுவனங்கள் எனச் சங்கிலித் தொடரான பாதிப்பையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
- இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு போன்ற அறிவிப்புகள் ஏற்படுத்தும் பாதிப்பு, பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துவிடும்.
என்ன செய்யலாம்?
- “மிகச் சிறந்த நிறுவனம், அருமையான உற்பத்தி, சேவைகளுடன், உலகை நல்ல நிலையில் ஆக்குவதற்கான பணிகளையும் செய்கிறது” என்று ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
- உலகை நல்ல நிலையில் ஆக்கும் ஒரு மிகச் சிறந்த நிறுவனம் இந்தியத் தொழிலாளர்களை நிர்க்கதியாக விட்டுச்செல்லலாமா? ஆகவே, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க, ஃபோர்டு நிறுவனம் அதன் ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்திய உற்பத்தியைத் தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இரண்டாவதாக, ஒன்றிய அரசின் தலையீடு மிக முக்கியமானது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது சனந்த் ஆலை.
- மூன்றாவதாக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை வெளியிட்டிருக்கும் செய்தி, புதிய நிறுவனம் ஒன்று வரப்போகிறது என்பதாகும்.
- அத்தகைய நிறுவனத்துக்குப் பல சலுகைகள் வழங்கப்படும் என்று மாநில அரசு கூறியிருக்கிறது. இதன் மூலம், ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்கள், உதிரிபாக நிறுவனங்களின் தொழிலாளர்கள் ஆகியோரின் பணிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதற்கு மாநில அரசு முயல வேண்டும்.
- நான்காவதாக, பாஜக தலைமையிலான அரசின் கொள்கைகள் முதலீட்டாளர்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதில்லை.
- எனவேதான் கரோனா பொது முடக்கக் காலத்தில், தொழிலாளர் சட்டங்களில் ஒன்றிய அரசு அவசர அவசரமாகச் சட்டத் திருத்தம் செய்திருக்கிறது. ஃபோர்டு அறிவிப்பு அனுபவத்திலிருந்து, தொழிலாளர் நலச்சட்டங்களை மேலும் பலம் கொண்டதாகத் திருத்துவதே அவசியம். சென்னை மற்றும் சனந்த் ஆலைகளின் தொழிலாளர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
- இனி இவர்களுக்கு வேலை கிடைக்கப்போவதில்லை. வீடு, வாகனம், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்காக இந்தத் தொழிலாளர்கள் பெற்ற கடன்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்? வேலையின்மை அதிகரிக்கும் நாட்டில் வளர்ச்சியும், ஜி.டி.பி. வளர்ச்சியும் எப்படிச் சாத்தியமாகும்? ஃபோர்டு தனது அறிவிப்பைத் திரும்பப் பெறாவிடில், அரசிடம் ஆலையை ஒப்படைத்து, வேலைவாய்ப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 - 09 - 2021)