தொழில் வரி: அதிகபட்ச உயர்வு சரியா?
- சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தொழில் வரி அதிகபட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
- தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் ஆகியோரிடம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
- அந்த வகையில், சென்னை மாநகரில் தொழில் நடத்துவோரும், வருமானம் பெறும் தனிநபர்களும் தங்களது அரையாண்டு வருமானத்துக்கு ஏற்ப அரையாண்டுத் தொழில் வரியைப் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில் வரி உயர்த்தப்படுகிறது. வரி உயர்வு 25 சதவீதத்துக்குக் குறையாமலும், 35 சதவீதத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதற்கு முன்னர், சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு தொழில் வரி உயர்த்தப்பட்டது. தற்போது 35% தொழில் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
- 2024 ஜூலையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், தொழில் வரியை உயர்த்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே கடும் எதிர்ப்பும் எழுந்தது. எனினும், 2024 டிசம்பர் 30இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், இந்த வரி உயர்வு இறுதிசெய்யப்பட்டுவிட்டது.
- இதன்படி, ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 425 ரூபாயாகவும், ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
- இதில், ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே இருந்த ரூ.1,025 வரி மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. அதேபோல், ரூ.75,001 மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான ரூ.1,250 வரியிலும் மாற்றம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த வரி உயர்வைப் பொறுத்தவரை, “குறைந்தபட்சமாக ரூ.45 முதல் அதிகபட்சமாக ரூ.240 வரைதான் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது” என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருக்கிறது.
- எனினும், அதிகரித்துவரும் விலைவாசி, பிற பிரச்சினைகள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது அதிகபட்ச வரி உயர்வு சரியா என்கிற கேள்வி எழுகிறது. உள்ளாட்சி நிர்வாகப் பணிகளுக்கு நிதி அவசியம் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மத்திய அரசிடமிருந்தும் மாநில அரசிடமிருந்தும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நிதி வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது.
- வரி அல்லாத வருவாய் மூலம் நிதியை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தச் சூழலில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டியிருக்கும் தொழில் வரியை இப்படி ஒரேயடியாக 35% உயர்த்தியிருப்பது சரியல்ல. வசூலிக்கப்படும் வரிகளால், அனைத்துத் தரப்பு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றனவா என்பதும் இன்னொரு கேள்வி. இப்படியான முடிவுகளை எடுக்கும் முன்னர் மேற்கண்ட அனைத்தையும் பரிசீலிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இல்லையேல் அதிருப்தி அலைகளைத் தடுக்க இயலாது!
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 01 – 2025)