- பல்வேறு நாடுகளில் செயல்படும் நிறுவனத்தின் நிர்வாக வசதிக்காகப் பொது மொழி ஒன்று இருப்பது பணித் திறனை வெகுவாக மேம்படுத்தும். உலகம் எங்கும் பரவலாக அறியப்பட்டதான ஆங்கிலத்தைப் பொது மொழியாகத் தேர்ந்தெடுப்பது உலக அளவில் இயங்க உதவியாகவே இருக்கிறது. இப்போது டிஜிட்டல் உலகமாகிவருகிறது. ஆங்கிலத்துக்கு இப்போதுள்ள முக்கியத்துவம் இதே நிலையில் நீடிக்குமா அல்லது மாறிவிடுமா?
- எவ்வளவோ சங்கடங்கள் இருந்தாலும் நாம் ஆங்கிலத்தை நேசிக்கிறோம். உலகப் பொருளாதாரத்தில் (தகவல் தொழில்நுட்பத் துறையில்) நாம் தலைநிமிர்ந்து நடப்பதற்கு ஆங்கிலம்தான் கைகொடுத்தது என்று சத்தியம் செய்கிறோம். ஆங்கிலத்துக்கு அப்பாற்பட்டு சீனர்கள், ஜப்பானியர்கள் இந்தத் துறையில் பெற்றுள்ள வெற்றிகள் குறித்து நமக்குக் கவலையில்லை.
- உலகில் 200 கோடிப் பேரால் ஆங்கிலம் பேசப்படுகிறது என்கிறது விக்கிப்பீடியா. இதில் ஆங்கிலம் பேசும் நாட்டில் வசிப்போர் எண்ணிக்கை வெறும் 20%. வர்த்தகம், கணினி உலகம், இணையதளம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே மொழி ஆங்கிலம் மட்டுமே.
- உலகம் முழுவதிலுமோ அல்லது உலகின் பல்வேறு நாடுகளிலோ செயல்பட விரும்பும் நிறுவனங்கள் ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொள்ள விரும்புகின்றன. அவை வேறு மொழி பேசும் நாட்டில் தொடங்கப்பட்டிருந்தாலும், வேறு மொழியில் நிர்வாகத்தைத் தொடங்கியிருந்தாலும் ஆங்கிலத்துக்கு மாற விரும்புகின்றன. சீனர்களுக்குச் சொந்தமான லெனோவா, சுவிஸ்-ஸ்வீடன் பொறியியல் நிறுவனம் ஆசியா பிரௌன்போவரி உட்பட பல நிறுவனங்கள் உள் தகவல்தொடர்புக்கு ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகின்றன.
ராகுடென்னின் அனுபவம்
- சமீபத்திய உதாரணம் ராகுடென். இந்த ஜப்பானிய நிறுவனம் 1997-ல் மின் வணிகத்தில் ஈடுபட்டது. பிறகு, தன் நிறுவனத்தை வெவ்வேறு துறைகளில் விரிவுபடுத்தியது. 2010-ல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹிரோஷி மிகிடானி நிறுவனத்தின் பொது மொழியாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்தார். உலகத் தகவல்தொடர்புக்கு உதவியாக நிறுவனத்துக்குள் முதலில் பொது மொழி இருக்க வேண்டும் என்று மிகிடானி நினைத்தார். ஜப்பானின் அதிகாரப் படிநிலை சார்ந்த நிர்வாகக் கலாச்சாரத்திலிருந்து விலக அவர் விரும்பினார். ராகுடென்னின் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 70% பேர் ஜப்பானியர். அவர்களுக்கு ஆங்கிலம் கொஞ்சமும் தெரியாது. ஊழியர்கள் ஜப்பானிய மொழிப் பயன்பாட்டிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற அவர் இரண்டு ஆண்டுகள் என்று இலக்கு நிர்ணயித்தார். ஊழியர்கள் தாங்களாகவே ஆங்கிலத்தைக் கற்கும் ஏற்பாட்டைச் செய்துகொள்ள நேர்ந்தது. எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாவிட்டால் பதவியிறக்கம்கூட நடைபெறும் என்று எச்சரிக்கப்பட்டனர். இதனால், அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனச்சுமை ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
- இந்த ஏற்பாடு பலன் தரவில்லை என்று உணர்ந்ததும் மிகிடானி அவராகவே மனிதாபிமானத்துடன் மாற்று ஏற்பாடுசெய்தார். அலுவலகத்திலேயே ஊழியர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசிரியர்களை நியமித்தார். இதை நிர்வகிக்கும் பொறுப்பை நிறுவனத்தின் இடைநிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
உதாரணம்
- இதற்குப் பிறகு, ஊழியர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறத் தொடங்கினர். ஹார்வர்டு மேலாண்மையியல் கல்விப் பிரிவு பேராசிரியர் செடால் நீலி ‘தி லாங்வேஜ் ஆஃப் குளோபல் சக்சஸ்’ என்ற தன்னுடைய நூலில் ஆங்கிலத்தைப் பொது மொழியாக்க நிறுவனம் எடுத்துக்கொண்ட முயற்சிகளை விவரித்திருக்கிறார். ஜப்பானிய நிர்வாக பாணியையும் கலாச்சார விழுமியங்களையும் அப்படியே தொடர்வது என்று நிறுவன நிர்வாகம் தீர்மானித்தது. இதனால், ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களுக்குத் தங்களுடைய அடையாளம் மறைந்துவிடவில்லை என்ற நிம்மதியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
- இந்த நடைமுறைக்கு நம்முடைய பங்களிப்பு அவசியம் என்பதை அவர்கள் உணரவும் இந்த ஏற்பாடு உதவியது. நிறுவனம் இப்போது மேலும் பல நிறுவனங்களை விலைக்கு வாங்கித் தனது குழுமத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறது. அத்துடன் புதிய நிறுவனங்களையும் தொடங்குகிறது. 27 நாடுகளில் இப்போது செயல்படுகிறது. ஆங்கிலத்தைப் பொது மொழியாக ஏற்றதால் நிறுவனம் வளர்ந்தது மட்டுமல்லாமல், ஆற்றல்மிக்க பலரை அடையாளம் கண்டு சேர்த்துக்கொள்ளவும் முடிந்தது என்று அது மகிழ்ச்சியடைந்திருக்கிறது.
மொழி ஆதிக்கம்
- உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான டொயாடோ, நின்டென்டோ ஆகியவற்றுக்கு மொழி ஒரு பிரச்சினையே இல்லை. டிஜிட்டல் தொழில்நுட்பமும் சேவைகளும் விரிவடைந்துவரும் இந்தத் தருணத்தில், மொழி முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விரு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
- ராகுடென் நிறுவனத்தின் அனுபவம் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. ஜப்பானுக்குள்ள ‘தீவு நாடு’ என்ற தாழ்வு மனநிலை மாற ஆங்கிலத்தை விரிவாகப் பயன்படுத்துவது உதவும் என்று கருதுகிறார். ஜப்பானில் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது.
- ஆனால், வகுப்பறையோடு சரி, பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. எனவே, ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்க வேண்டிய புரட்சிக்குக் கல்வித் துறை தயாராவது அவசியம் என்று கருதுகின்றனர்.
- பல நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனத்துக்குள் பொது மொழி இருப்பது அதன் திறமைகளை வளர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடிதப் பரிமாற்றங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வழியில்லை, முடிவுகளை விரைவாக எடுக்க இது பெரிதும் உதவுகிறது.
- ஆங்கிலத்தின் வீச்சானது அதற்கேயுள்ள பல சாதகங்களுடன் மேலும் பலன் அளிக்கிறது. இவ்வளவு இருந்தாலும் பொது மொழி அவசியமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. வெவ்வேறு மொழி பேசும் இருவர் வேகமாக உரையாடும் அளவுக்கு அவரவர் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் நாள்தோறும் வளர்ச்சியடைந்துவருகிறது. இதற்கான மென்பொருள் நவீனமடைந்துவருகிறது. நம்முடைய செல்பேசிகள் மூலமே வேற்று மொழிக்காரருடன் சரளமாக உரையாடும் நிலை ஏற்படப்போகிறது. அப்படியானால், ஆங்கிலம் ஆதிக்கம் செய்த காலமும் அஸ்தமிக்கப்போகிறதா?
நன்றி: இந்து தமிழ் திசை (26-02-2020)