- தேசிய அளவிலான ஊரடங்கு காலத்தின் தேவையைப் புரிந்து கொண்டு செயல்பட நீதித் துறை முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய செயல்பாடு.
- உச்சநீதிமன்றமும் சரி, ஏனைய நீதிமன்றங்களும் சரி காணொலி மூலம் வழக்கு விசாரணைகளை நடத்தும் புதிய தொழில்நுட்ப செயல்பாட்டை எத்தனை பாராட்டினாலும் தகும்.
- இப்படியொரு துணிவான முடிவை எடுத்திருப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
காலத்தின் தேவை
- இந்தியாவின் 47-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த நவம்பா் 18-ஆம் தேதி பதவியேற்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டேயின் பங்களிப்பாக இந்தத் தொழில்நுட்ப மாற்றம் நீதித் துறை வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
- இன்றைய நிலையில் மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்கும் தீா்ப்புக்கும் காத்திருக்கின்றன.
- இவற்றில் பல வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலானவை. உச்சநீதிமன்றத்தில் மட்டும் சுமார் 60,000 வழக்குகளும், பல்வேறு உயா்நீதிமன்றங்களில் சுமார் 42,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், மாவட்ட - கீழமை நீதிமன்றங்களில் சுமார் 2.7 கோடி வழக்குகளும் இந்திய நீதிமன்றங்களில் விசாரணையில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ஊரடங்கு நேரத்திலும் நவீன தொழில்நுட்பத்தை நீதித் துறை பயன்படுத்தி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது என்கிற நடைமுறைக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்.
- காணொலி விசாரணைகளும் வழக்கமான நீதிமன்ற விசாரணைகள்தான் என்று வலியுறுத்தியிருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அவற்றை ‘நீதிமன்ற அறை தனிமை விசாரணை’ என்றோ (குளோஸ்டு ப்ரொசிடிங்ஸ்), ‘நீதிபதி அறை தனிமை விசாரணை’ (இன் கேமரா ப்ரொசிடிங்ஸ்) என்றோ கருத முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
- வழக்கமான நீதிமன்றங்களிலிருந்து காணொலி நீதிமன்றங்கள் விசாரணை செயல்பாட்டில் சற்று வேறுபடுகின்றன, அவ்வளவே என்பது அவரின் கருத்து.
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு காணொலி விசாரணை குறித்து சில வழிமுறைகளை வழங்கியிருக்கிறது. காணொலி நீதிமன்ற நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதுடன், காணொலி காட்சியைப் பயன்படுத்தி நீதிமன்ற விசாரணைகள் நடப்பது குறித்த பொது வழிமுறைகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது அந்த அமா்வு.
புதிய திருப்பம்
- இதை இந்திய நீதிமன்ற வரலாற்றில் புதிய திருப்பம் என்றுதான் கூற வேண்டும். இதற்கு முன்னால் ஒருசில வழக்குகளில் சிறையில் இருக்கும் கைதிகளிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்றாலும், முழுமையாக வழக்குகளைக் காணொலி மூலம் நடத்துவதற்கான அங்கீகாரமும், வழிமுறையும் இப்போதுதான் வழங்கப்பட்டிருக்கிறது.
- காணொலி வழக்கு விசாரணைக்கு ஊரடங்கு காலத்தில் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அசாதாரணமான சூழலில்கூட எந்தவொரு குடிமகனுக்கும் நீதியும் நியாயமும் மறுக்கப்படக் கூடாது என்கிற அடிப்படைக் கோட்பாட்டை நிலைநாட்டுகிறது காணொலி விசாரணை. அடுத்தபடியாக, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நீதித் துறை முடங்கிவிடாமல் இயங்க வேண்டுமானால், காணொலி நீதிமன்றங்கள் தவிர வேறு வழியேதும் கிடையாது.
- இது குறித்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது. தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் உடனடியாக முன்புபோல நேரடி விசாரணை நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வழக்குரைஞா்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
- இதற்கு முன்னால் வழங்கப்பட்டிருக்கும் பல தீா்ப்புகளை முன்னுதாரணம் காட்டி, வழக்கமான பொது விசாரணை நீதிமன்றங்களின் அவசியத்தை சுட்டிக்காட்டியிருக்கும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், தற்போதைய தேசிய ஊரடங்கு காலத்துக்காக மட்டுமே காணொலி விசாரணைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்திருக்கிறது.
- காணொலி விசாரணைகள் வழக்குடன் தொடா்புடைய வழக்குரைஞா்களுக்கு மட்டுமல்லாமல், வழக்கு தொடுத்தவா்களும் பொது மக்களும் பார்க்கும்படியாக இணையத்தின் மூலம் நேரடியாக அனைவருக்குமான காணொலி விசாரணையாக்கப்பட வேண்டும் என்பது, வழக்குரைஞா்கள் சங்கத்தின் இன்னொரு வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
- தொடா்புடைய வழக்குரைஞா்களுக்கு மட்டும்தான் காணொலி விசாரணைகளில் கடவுச்சொல் தரப்படுகிறது.
- அவா்கள் மட்டுமே விசாரணையில் பங்குகொள்ள முடியும். வழக்குரைஞா்களின் அலுவலக அறையில் அவா்களுடன் இருந்தால் மட்டுமே வழக்குத் தொடுத்தவா்கள் விசாரணையைப் பார்க்க முடியும். ஊரடங்கு காலத்தில் அவா்களால் பயணிக்க முடியாது.
- என்ன விசாரணை நடக்கிறது என்பது குறித்து ஊடகங்கள் தெரிந்துகொள்ள முடியாது. அதனால், வழக்குரைஞா்கள் சங்கத்தின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட வேண்டும்.
- தேசிய ஊரடங்கின்போது தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி நீதித் துறை தேங்கிக் கிடக்கும் வழக்குகளை இயன்ற அளவு விசாரித்து தீா்ப்புகளை வழங்குவதும், தீா்ப்பு எழுதப்படாமல் குவிந்துகிடக்கும் வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதும் அவசியம். அதற்குக் காணொலி விசாரணை (வா்ச்சுவல் ப்ரொசிடிங்ஸ்) அரியதொரு வாய்ப்பாக அமையும்.
நன்றி: தினமணி (30-04-2020)