TNPSC Thervupettagam

தொழில்நுட்ப வல்லமை தாராயோ!

September 9 , 2020 1592 days 755 0
  • பாடம் போதிப்பதன் நோக்கம், மாணவர்களிடையே நாட்டை வளப்படுத்தும் திறமைகளைப் பெறுவதற்காக அமையவேண்டும்.
  • கல்வியினால் சொந்த அனுபவ அறிவு மற்றும் பாரம்பரியக் கலாசாரத்தினூடே பெறப்படும் மதிப்பீடு ஆகியவற்றில் இருந்தே இந்தத் திறமைகள் உருவாகின்றன.
  • கல்வி கற்ற பின்னர், அந்த மாணவர்கள் தங்களுக்குள் தலைமைப் பண்புகள் கொண்டவர்களாகத் திகழவேண்டும் என்பார் டாக்டர் அப்துல் கலாம்.
  • நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல் /பாடம் போற்றல்/ கேட்டவை நினைத்தல்/ஆசான் சார்ந்(து) அவை அமைவரக் கேட்டல்/அம்மாண் (பு) உடையோர் தம்மொடு பயிறல்/வினாதல், வினாயவை விடுத்தல்’ - என்றிவை நன்னூல்காட்டும் கல்விக் கொள்கை. 
  • கற்றலின் கேட்டலே நன்றுஎன்கிறது பழமொழி நானூறு’. கேட்பது எந்த மொழியில் என்பதில் தான் இன்று பிரச்னை.
  • பொதுவாக, அறிவியல், இலக்கியம், மொழி, கலை, தொழில் எதைப் படித்தாலும், படித்து முடித்ததும் வேலை என்ற எண்ணமே மாணவர் - பெற்றோரிடம் மேலோங்கி உள்ளது. 
  • கல்வியினால் தனிமனிதனின் பொருளாதாரம் உயரும்; சமுதாய அந்தஸ்தும் மேம்படும். ஆனால், பொதுவாக, இன்று நம் கல்விமுறை பெரும்பாலும் சரியான விடை காண்பதில் கவனம் செலுத்துகிறது. அதனால்தான் பொதுத்தேர்வுகள் வற்புறுத்தப்படுகின்றன. 
  • மழலைப் பருவத்தில் விளையாட்டும், செயல்பாட்டுத் திறன்களும் தேவைதான். இவை தாய்மொழி வழியாகத்தான் அமையவேண்டும். சிந்தனை வளர்ச்சிக்கு அதுவே வழி வகுக்கும். 
  • என் எண்ணத்திலே, கல்விமுறை மாணவர்களின் ஆக்கபூர்வமான கற்பனைத் திறன்களை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். போற்றத்தக்க நற்குணங்களையும் போதிப்பதாக நம் கல்வி முறை அமைய வேண்டும். மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக அரும்பங்காற்றலாம்என்று கூறினார் டாக்டர் அப்துல் கலாம். 
  • கால மாற்றத்தால் சித்தாந்தங்கள் மாறிவருகின்றன. பொழுதுபோக்கு, விளையாட்டு போலவே கல்வி முறையேகூட இன்று தொழில்நுட்பங்களால் மேம்பட்டு வருகின்றது.
  • முன்னொரு காலத்தில் டூரிங்தியேட்டர், ஊர் மக்களைத் தேடி வந்து முகாம் இட்டுப் படம் காட்டியது. இன்று அந்நிலை மாறி, அவரவர் விரும்பிய தருணத்தில் உள்ளங்கைக்குள் ஏந்திய குறுந்திரைகளில் விடிய விடியப் படம் பார்க்கும் நவீன வசதிகள் வந்துவிட்டன. 
  • அதுபோலவே, கல்வித் துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. நன்னூலார் காட்டுவது போல, ஆசிரியரிடத்தில் மாணாக்கர், “பொழுதொடு சென்று வழிபடல், முனியான் குணத்தொடு பழகி, அவன் குறிப்பில் சார்ந்து இருவென இருந்து, சொல்லெனச் சொல்லிபாடம் படித்த காலம் மாறி வருகிறது. 
  • ஆசானைத் தேடிச்சென்று பயிலும் குருகுலக் கல்வி, பின்னாளில் திண்ணைப் பள்ளிக்கூடம் என்னும் நிலை வந்து, பின் அது மாறி, ஊர்தோறும் கல்விக்கூடங்கள் எழுந்தன.
  • பணக்காரப் பல்கலைக்கழகங்களில் மாய வகுப்பறைகள் அறிமுகம் ஆகி வருகின்றன.  காணொலி வாயிலாக ஒரு குரு , மாணவர்களின் கணினித் திரைக்குள் ஒரே நேரத்தில் உலகெங்கும் பாடம் நடத்த முடியும். 
  • அச்சு நூல்கள், இணையத்தில் குடியிருக்கும்போது, கூடவே ஆசிரியர் பேச்சு உரைகளையும் ஒரே முறை பதிவிட்டால் போதும்.  செயற்கைக்கோள் யுகத்தில் உலகமே வகுப்பறை. அயல் நாட்டுப் பேராசிரியர்கள் விமானத்தில் இடம்பிடித்து இங்கு வந்து பாடம் நடத்துவானேன்? ஆனால், இங்கெல்லாம் மாணவர்களுடன் பழகி அவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியப் பொறுப்பு கேள்விக்குறி தான். 
  • பணி நிமித்தம் எதிர்காலத்தில் எந்த மாநிலத்திற்குச் செல்வோம் என்று தெரியாமல், பள்ளிக்கூடத்தில் பணி இலக்கின்றிப் பல மொழிகள் பயில்வதும் கால விரயம்.
  • அதற்குப் பதில் வேறு பயனுள்ள அறிவியல் துறை பாடம் ஏதேனும் கற்கலாம்.
  • இன்று வேற்று மாநிலத்திற்கோ நாட்டிற்கோ சென்றாலும், அந்த மொழியினைப் பயில வேண்டிய நிலை இயல்பாகவே நிகழும். அன்றியும், மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். உடனுக்குடன் குரல்வழி மொழிபெயர்த்து உதவும் மென்பொருள்கள் வந்து விட்டன. 
  • பண்டைத் தமிழகத்தில் யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்என்று கூறுகின்ற எருக்காட்டூர் தாயங்கண்ணனார், இந்த அந்நிய வர்த்தகம் பண்டைய முசிறியில் எந்தப் பொது மொழியில் நடை பெற்றது என்று குறிப்பிடவில்லை. 
  • பயிற்றுமொழி, பயிற்சி மொழி, பேச்சுமொழி எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொண்டு இருக்கிறோம். சிலரிடம் கேட்டால், “இந்த மொழி பேசினால் புரியும்என்கிறவர் கால் மொழிஅறிவாளி. அரைகுறையாய்ப் பேசவும் தெரியும்என்கிறவர் அரை மொழியாளர்’.
  • எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியும்என்பவர் முக்கால் மொழிக்கு முன்னேறியவர்’. “சின்னச்சின்ன வார்த்தைகளைத் தப்புத் தப்பாக எழுத முடியும்என்போர் முழுமொழியும் அறியத் துடிப்பவர்கள்’. 
  • இவ்வகை மக்களுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆரம்பப் பள்ளிகளில் பயின்றால் அன்றி, அந்தந்த மொழிகளில் இலக்கியங்கள் படைக்க இயலாது.
  • வெறும் பேச்சுக்கும், அரைகுறை எழுத்திற்கும் வழக்கு மொழி அறிவு போதும்.இதற்கிடையில் உலக வழக்கு அழிந்து ஒழிந்துபடும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெறுவதாகச் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

பிராந்திய மொழி

  • தமிழ்மொழிச் சிந்தனையும், தமிழ்வழிச் சிந்தனையும் இன்று அருகி வருவது என்னவோ உண்மைதான். குறிப்பாக, நாட்டின் பெருநகரங்களில் பெருந்தனவான்களால்மாநில மொழி அறியாமலே வியாபாரம் பண்ண முடிகிறது.
  • ஆனால், வறியவர்கள் அந்தப் பிராந்திய மொழி அறியாமல் வாழ முடியாது.  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சிமொழி. சமஸ்தான மகான்கள்ஆங்கிலம் கற்றனர்.
  • ஜமீன் மன்னர்களுடன் நேரடித் தொடர்பில் சுகவாசம் சாத்தியமாயிற்று. ஆதிக்க மொழி அறியாத ஜனங்களை அடிமைகள் ஆக்குவது சுலபம். 
  • ஒரு மகா பிரசாரகர் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் ஆங்கிலத்தில் தான் அருளுரை வழங்குகிறார். கேட்பவர்களுக்கு உள்ளம் நிறைகிறதோ இல்லையோ, உரைப்பவர் உண்டியல் நிறைகிறது. 
  • மத நம்பிக்கை, இன, கலாசார நம்பிக்கைகள் போலவே மொழி நம்பிக்கையும் ஒருவகையில் உணர்வுபூர்வமானது.
  • வற்புறுத்தியோ, விரும்ப வைத்தோ ஒருவரை மதமாற்றம் செய்வது தவறு என்றால், ஒருவனை மொழிமாறச் செய்வது சிறப்பு சேர்க்குமா? தேசப்பற்றினைப் போலவே, மொழிப்பற்றும் தாயின் தொப்புள் கொடி உறவுதான்.
  • அதனால்தான் இரண்டையும் முறையே தாய்நாடு’, “தாய்மொழிஎன்கிறோம்.  செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்என்பது பாரதி வாக்கு.
  • செப்பு மொழி ஒன்றுடையாள், எனில் சிந்தனை பதினெட்டு உடையாள் என்ற நிலை பாரதிக்கு மட்டுமல்ல, பாரதத்திற்கும் உகந்தது அல்ல. ஒவ்வொருவர் உடம்பிலும் ஓடும் உதிரம் ஒற்றைப் பார்வையில் சிகப்புத்தான்.
  • ஆனால், அறிவியல் கண்ணோட்டத்தில் அதனுள் வேற்றுமைகள் உள்ளன. சிகப்புக் குருதியில் உயிர்ப்பாதுகாப்பு அணுக்கள் என்னவோ வெள்ளை நிறம்தான். ரத்தத்தில் எதிர்ப்பொருள் சார்ந்து ஏ, பி, ஏபி, ஓ என்று வேறுபாடுகள் உள்ளன. 
  • மொழி என்பது வெறும் உரையாடலுக்கான ஒலிவடிவம் மட்டும் அல்ல. வாசிப்பதற்கான எழுத்து வடிவமும் அல்ல. அதையும் தாண்டி கருத்து வடிவம்.
  • ஒரு உயிர்ப்பின் அடையாள வடிவம்.  எண்ணென்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” - என்பது குறள்நெறி. எண்என்பது தர்க்க அறிவியல்; “எழுத்துஎன்பது இலக்கியம், கலை சார்ந்தது.
  • முன்னதை அந்நிய மொழியிலும், பின்னதைத் தாய்மொழியிலும் பெறுகிறோம்.  அதனாலேயே 2016-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் 2019-ஆம் ஆண்டினை பன்னாட்டு உள்ளூர் மொழிகளின் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
  • இங்கு மொழி என்பது பேச்சா, எழுத்தா என்று கல்விக்குள் மொழிக்கொள்கை புகுந்து அனல் விவாதங்கள் கரோனா காய்ச்சலைவிடச் சூடேற்றும் போலத் தெரிகிறது.
  • மொழிக்கல்வி வேறு, மொழிவழிக் கல்வி என்பது வேறு அல்லவா?  1975-இல் சோயுஸ் -19 விண்கலத்தின் அலெக்சீ லியனொவ் எனும் ரஷியரும், அப்போலோ - 18 விண்கலத்தின் தாமஸ் ஸ்டாஃபோர்டு எனும் அமெரிக்கரும் 17.7.1975 அன்று அண்டவெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சந்தித்தனர்.
  • இருவரும் பரஸ்பரம் தமது தாய்மொழியில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சிஎன்று வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். 
  • இன்னொரு ஆச்சரியம். ஸ்டான்ஃபோர்டு தாம் அறிந்த அரைகுறை ரஷிய மொழியில், “சோயுஸ் மிக அழகாக இருக்கிறதுஎன்று பாராட்டினார்.
  • சோயுஸ், அப்போலோ இரண்டும் இப்போது கைகுலுக்கிக் கொண்டு இருக்கின்றனஎன்றார் லியனொவ். 
  • இன்று உலக அளவில் ஆங்கிலம் அறிவியல் தகவல் மொழி போலத் தோன்றினாலும், ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மன், ஜப்பான் போன்ற பல நாடுகள் தங்கள் தாய்மொழியில்தான் அறிவையும் அறிவியலையும், இலக்கியத்தையும், பொருளாதாரத்தையும் வளர்த்து வருகின்றன.
  • நாம் மட்டும் ஒரு புது மொழியோ, பொது மொழியோ தேடிக் கற்று அதில் இனி ஆராய்ச்சிகள் நடத்த எண்ணினால் காலம் விரயமாகும்.  இன்றைய உலக வர்த்தகச் சூழலில் பொதுவாக, சீனாவின் வளர்ச்சி அதன் உற்பத்திப் பொருளாதாரம் சார்ந்து அமைகிறது.
  • ஆனால், இந்தியாவின் முன்னேற்றமோ சேவைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஆனது.
  • நம்மிடம் தகவல் தொழில்நுட்பத் துறையில் எவ்வளவுதான் அறிவுத் திறன் இருந்தாலும் அதனை உலக மேடையில் கூவி விற்க ஆங்கிலம் தெரிந்தாக வேண்டும். 
  • விடுதலைக்கு முந்திய இந்தியாவில், வீட்டுக்குள்ளேயே புகுந்து தங்கி, நம்மை அடிமையாக்கிய அந்நிய வர்த்தகர்களை விரட்ட ஜாதி, மதம், மொழி, இனம் பாராமல் இந்தியர் அனைவரும் ஒன்றாய்த் திரண்டோம்.
  • இன்று அந்நிய வர்த்தகத்தைத் தாம்பூலம் நீட்டி வரவேற்கிறோம். வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயலும் அந்நியர்களை விரட்ட, தொழில்நுட்ப வல்லமை தாராயோ என்று பராசக்தியிடம் வேண்டுகிறோம். 
  • கல்விக் கொள்கையில், புதுமை நோக்கிய பயணமும் தொலைநோக்குப் பார்வையும் அவசியம். அறிவியலாலும் தொழில்நுட்பத்தாலும் மட்டுமே உலகத்தோடு ஒட்ட ஒழுக முடியும்!

நன்றி:  தினமணி (09-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்