TNPSC Thervupettagam

தொழில்நுட்பக் கல்வி எதிர்கொள்ளும் இடர்கள்

February 18 , 2020 1790 days 814 0
  • இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும்கூட பொறியியல் தொடர்பான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

வேலைவாய்ப்பு

  • தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் அரிதாகி வருகிறது. புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை 2022 வரை நிறுத்திவைப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் வழங்கியிருக்கும் புள்ளிவிவரப்படி, 2015 முதல் 2019 வரையிலான இடைவெளியில் 518 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய அளவில் மூடப்பட்டிருக்கின்றன. 2019-20 மாணவர் சேர்க்கையின்போது பாதிக்குப் பாதி பொறியியல் கல்லூரிகள் நிரம்பாமல் இருந்ததையும் அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. 
  • பட்டயப் படிப்பு, முதுநிலைப் படிப்பு, இளநிலைப் படிப்பு அனைத்தையும் சேர்த்தால் இந்தியாவில் 27 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அவற்றில் 13 லட்சம் இடங்கள் மட்டும்தான் 2019-20-இல் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கான வரவேற்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்றும், இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவிக்கிறது.
  • கடந்த கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் படித்துத் தேறிய 14 லட்சம் மாணவர்களில் 6 லட்சம் பட்டதாரிகளுக்கு மட்டும்தான் வேலை கிடைத்திருக்கிறது என்கிற தகவலை கவுன்சில் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரி இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குமான விகிதம் 49.8% என்று இதுகுறித்து ஆய்வு செய்த ரெட்டி அறிக்கை கூறுகிறது. 

தொழில்நுட்பக் கல்வி

  • தொழில்நுட்பக் கல்வி எதிர்கொள்ளும் இடருக்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம். வரைமுறையில்லாமல் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வழங்கிய புதிய கல்லூரிகளுக்கான அனுமதி மிக முக்கியமான காரணம். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள்கூட சேர்க்கப்பட்டும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்நிலை காணப்பட்டது. அப்போது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மானியமாக வழங்கி, கல்லூரி நிர்வாகத்தை இழப்பிலிருந்து காப்பாற்ற சில மாநில அரசுகள் முனைந்தன. ஆர்வக் கோளாறால் அரசியல்வாதிகள் பலர் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி தங்களைக் கல்வியாளர்களாக அறிவித்துக்கொள்ள முன்வந்ததும், மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு உதவ மாநில அரசுகள் முற்பட்டதும் பொறியியல் கல்லூரிகளில் ஆர்வமும் தகுதியும் இல்லாத மாணவர்கள் இடம்பெறுவதற்குக் காரணமாகின. 

மாணவர்களின் தரம்

  • போதாக்குறைக்கு தரம் குறைந்த கற்பித்தலும், போதுமான அளவில் தேர்ந்த ஆசிரியர்கள் இல்லாமையும், இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களின் தரம் குறைந்து காணப்படுவதற்கு இன்னொரு காரணம். இந்திய பொறியியல் கல்வி, தொழில்துறையின் தேவைக்கேற்ப அமையாததும் பெரிய பலவீனம். 
  • மருத்துவப் படிப்புப் படித்து வெளிவரும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக இருந்தால் மட்டுமே பட்டம் வழங்கப்படுகிறது. ஆனால், பொறியியல் மாணவர்களுக்கு அதுபோலக் கட்டாயப் பயிற்சி எதுவும் இல்லாத நிலையில், அவர்கள் தொழில்துறையின் தேவைகளுக்கேற்ப இல்லாத நிலை காணப்படுகிறது.
    தொழில் துறையில் இப்போதும்கூட நல்ல பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை குறைந்துவிடவில்லை. தரமான பொறியியல் கல்லூரிகளிலிருந்து, தரமான மாணவர்களை அவர்கள் அடையாளம் கண்டு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். 
  • 1996 முதல் 2006 வரை பொறியியல் பட்டதாரிகளுக்கு மிகப் பெரிய தேவை உலக அளவில் காணப்பட்டது. கல்லூரிகள் குறைவாக இருந்தன. பொறியியல் கல்வியில் நாட்டமும், தகுதியும் இருந்தவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். அதனால், பட்டம் பெற்று வெளியில் வரும் பொறியியல் பட்டதாரிகளில் பலரும் அமெரிக்காவிலும், இந்தியாவிலுள்ள தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களிலும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெற்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சியும், இந்தியர்களுக்கான அமெரிக்க நுழைவு இசைவுச் சீட்டு (விசா) கெடுபிடியும், பொருளாதாரத் தேக்கமும், சராசரிக்கும் கீழேயுள்ள பொறியியல் பட்டதாரிகளை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கி விட்டன. 

தீர்வு

  • புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது. பொறியியல் கல்லூரிகள் வங்கிகளில் இருந்து பல கோடி ரூபாய் கடன் பெற்று தொடங்கப்படுகின்றன. மிகப் பெரிய மூலதனத்தை முடக்கிக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது என்பது தேசிய இழப்பு என்பதை நாம் உணர வேண்டும். 
  • மூடப்படும் கல்லூரிகள் நன்றாக இயங்கும் கல்லூரிகளுடன் இணைக்கப்படுவது; பொறியியல் அல்லாத ஏனைய படிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்படுவது; தொழில் துறையினரின் தேவைக்கேற்ப படிப்புகளை நடத்தி, மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுதல் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். தொடங்கியது நின்றுவிடக் கூடாது, நடப்பது தரம் உயர்த்தப்பட வேண்டும், தேவைக்கேற்ற திறமைகளை உருவாக்குவதில்தான் பொறியியல் கல்லூரிகளின் வருங்காலம் அடங்கியிருக்கிறது.

நன்றி: தினமணி (18-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்